பதிப்புகளில்

ஓட்டுநர் முதல் தொழில்முனைவர் வரை: இலங்கை தமிழரின் வளர்ச்சி!

Induja Raghunathan
11th Aug 2015
Add to
Shares
15
Comments
Share This
Add to
Shares
15
Comments
Share

கொழும்புவில், பேட்டி எடுக்க காத்திருந்தவர் தங்கியிருந்த சிறிய ஹோட்டலுக்கான வழியை கேட்டறியாமலே சுலபமாக சந்திக்க வந்தார் சரண்யன் சர்மா. பல விருதுகளுடன் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக திகழும் சரண்யன் சர்மாவை ஆச்சர்யத்துடன் வரவேற்ற பேட்டியாளரிடம், தனக்கு கொழும்புவிலுள்ள அனைத்து சிறிய ஹோட்டல்களும் பரிட்சயம் என்றும், தான் 8 வருடங்கள் வண்டி ஓட்டுனாராக பணியாற்றி இதுபோன்ற சிறிய ஹோட்டல்களுக்கு சோடா மற்றும் சிற்றுண்டி வழங்கிய அனுபவம் உள்ளதை பற்றி கூறி உற்சாகமானார்.


image


ஒரு வண்டி ஓட்டுனராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சரண்யன் இன்று ஸ்ரீலங்காவின் முதன்மை டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனமான எக்ஸ்டிரீம்-எஸ்.ஈ.ஓ.நெட் (Extreme-seo.net) இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (C.E.O) ஆவார். இவர் ப்ரிவிலேஜ்செர்வர் டெக்னாலஜீஸ் (Previlegeserver Technologies) மற்றும் 7அரினா டெக்னாலஜீஸ் (7Arena Technologies) என மேலும் இரண்டு நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார்.

வண்டி ஓட்டுனாராக டெலிவரி வேனில் வலம் வந்த சரண்யன் சர்மாவின் வவுனியா வீட்டு வாசலில் இன்று விலையுயர்ந்த நாங்கு கார்கள் நிற்பது, அவரின் கடுமையான உழைப்பு மற்றும் பல போராட்டங்களின் வெற்றியை மட்டுமே பிரதிபலிக்கிறது.

இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள வவுனியா அதிகம் தமிழர்கள் வசித்துவரும் ஒரு நகரம். 2009ல் தமிழர்-சிங்கள அரசிடையே நடந்த போர் காரணமாக ஜாஃப்னாவிலிருந்து வவுனியாவிற்கு குடிபுகுந்த போதுதான் தன் குடும்பத்தாரை சரண்யனால் சந்திக்க முடிந்தது. பல மாதங்களாக குடும்பத்தை பிரிந்து வவுனியாவில் வாழ்ந்து வந்த சரண்யனுக்கு தன் குடும்பம் உயிருடன் இருப்பதே அவர்கள் அங்கு வந்தபோது தான் தெரிந்தது.

“அந்த சமயத்தில் கொழும்புவில் நான் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்தேன், போரின் கடைசி கட்ட காலங்களில் மிக கடுமையான சூழ்நிலை நிலவியதால், என் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால் அவர்களிடமிருந்து என் படிப்பிற்கான பணம் வருவது நின்றுவிட்டதால் கல்லூரியில் கட்டணம் கட்டமுடியாமல் படிப்பை பாதியிலேயே விட நேர்ந்தது” என்று சரண்யன் சர்மா சற்று வருத்ததுடன் கூறுகிறார்.

அடுத்து என்ன என்று செய்வதறியாது தவித்த சரண்யன், வருமானத்திற்காக வண்டி ஓட்டுனராக பணிக்கு சேர்ந்தார். வண்டியை அதிவேகமாக ஓட்டியதால் அவரின் அந்த வேலை ஒரு மாதத்தில் பறிபோனது. ஆனால் இச்சம்பவமே அவரின் வாழ்க்கை பாதையை மாற்றியதாகவும், சுயதொழில் செய்யும் ஆர்வத்துக்கான முடிவை தீர்மானிக்க உதவியதாக பெருமையுடன் கூறுகிறார்.

“இளம் வயது முதலே ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அதனால் எந்த துறையில் தொழில் தொடங்குவது என்பதை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பேன்” என சரண்யன் தன் கனவை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பல நாள் சிந்தனைக்கு பின், மின்னணு வர்த்தக துறை தன்னை ஈர்க்க தொடங்கியது என்று கூறும் சரண்யன் அதற்கு நல்ல வருங்காலமும், அதில் புதிய முயற்சிகள் எடுக்க வாய்ப்பு இருப்பதை அறிந்து அத்துறையில் காலை பதிக்க முடிவெடுத்ததாக கூறுகிறார்.


image


தன் இலக்கை நோக்கி அடி எடுக்க நினைத்த சரண்யனிடம், தொழில் தொடங்க தேவையான முதலீட்டு பணமோ, அதற்கான கருவிகளோ இல்லை. 22000 இலங்கை ரூபாய் மட்டும் கையில் வைத்திருந்த சரண்யனால் அந்த பணத்தில் ஒரு கணிபொறியை கூட வாங்க முடியவில்லை. சுமார் 48000 இலங்கை ரூபாய் தேவைப்பட்டது, அந்த பணத்தை ஏற்பாடு செய்ய சரண்யன் பட்ட கஷ்டத்தை இன்றும் நினைவு கூறுகிறார். தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரிடம் கடனுக்காக அலைந்து கடைசியில் சரண்யனின் சகோதரரின் சிபாரிசுக்கு பின் அண்டைவீட்டார் பணம் கொடுத்து உதவினர். தொழில் தொடங்கும்போதே நான் கடனாளியாக இருந்தேன் என நகைச்சுவையாக கூறுகிறார் சரண்யன் சர்மா.

ஒரு பாரம்பரிய பிராமண குடும்பத்தை சேர்ந்த சரண்யனுக்கு பிசினஸ் செய்வது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த சமயத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சரண்யனுக்கு வேலை வாய்ப்பு ஒன்றை அளித்தது. அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் கட்டுறைகளை தினமும் இலங்கையில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட இணையதள நிறுவனங்களுக்கு அனுப்புவதே சரண்யனின் பணியாகும். இப்பணியில் புதியவன் என்பதால் சம்பளம் குறைவாக இருந்தும் இருப்பினும் இதை ஒரு அனுபவத்துக்காக ஏற்றதாக கூறுகிறார். இரவு, பகலாக உழைத்து கடைசியில் 5$ சம்பளமாக கிடைத்தது என்று சிரித்து கொண்டே சரண்யன் நம்மிடம் கூறுகிறார்.

இதனிடையே அவர் தொடங்கிய நிறுவனத்தில் மெல்ல மெல்ல வருமானமும் லாபமும் வரத்தொடங்கியது. தொழிலை மேம்படுத்தி, தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஓரிரு ஆட்களை தன் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்தார். ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு சரண்யனிடம் வருமானம் அன்று இல்லை. கையில் இருந்த பணத்தில் அலுவலகத்துக்கு தேவையான இருக்கை, டேபிள், கணிப்பொறி வாங்க செலவிட்டார்.

தொடக்கத்தில் பொருளாதாரத்தில் சிரமப்பட்ட சரண்யன் சர்மாவின் நிறுவனத்தில் இன்று அறுபத்தி ஐந்து பேர் பணி புரிகின்றனர். அதில் ஆறு பேர் மாற்று திறனாளிகள். குளிர்சாதன வசதி, ஜெனரேட்டர், 17 கணிப்பொறிகள் என எல்லா வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை நிறுவியுள்ள சரண்யனின் உழைப்பு இன்று உலகெங்கும் தெரிய தொடங்யுள்ளது. எக்ஸ்டிரீம்-எஸ்.ஈ.ஓ.நெட் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான நேரத்தில் பண உதவிகளையும் செய்து வருகிறார் சரண்யன். இந்தியா, சீனா, பிலிபைன்ஸ் நாடுகளிலும் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணிகளை செய்ய ஆட்களை பணி அமர்த்தி கொள்கிறார். மும்பையில் தன் நிறுவனத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து வருவதாக கூறுகிறார்.


image


கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 38000 சமூக வலை பிரச்சாரங்களை செய்துள்ளது இவரின் நிறுவனம். 5$ சம்பளமாக வழங்கிய அமெரிக்க நிறுவனம் இன்றும் இவரின் வாடிக்கையாளராக இருப்பதை பெருமிதத்துடன் சொல்லி மகிழ்கிறார் சரண்யன். ஆனால் அவர்கள் இப்பொழுது பல நூறு மடங்கு பணத்தை சரண்யனின் நிறுவன சேவைக்கு அளிக்கின்றனர் என்பது நல்ல செய்தி.

“நான் எப்பொழுதும் லாபம் மற்றும் வெற்றிக்காக என் நிறுவனத்தை நடத்தியதில்லை. எந்த நேரத்திலும் நஷ்டம் வருவதை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பதும் அதை சமாளிக்கும் திறணும் தான் நான் தொழிலில் வெற்றிபெற உதவியாக இருந்த ரகசியம்” என சரண்யன் தன் பிசினஸ் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். பிரச்சனை என்பது, வாடிக்கையாளர், குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் என எந்த திசையிலிருந்தும் வரும் என்பதை உணர்ந்து எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.

தன் நிறுவனம் பெரிதாக வளர்ந்தும், அதன் இருப்பிடத்தை வவுனியாவிலிருந்து வர்த்தகம் மற்றும் ஸ்ரீலங்காவின் தலைநகரான கொழும்புவுக்கு இடம் மாற்றம் செய்யவில்லை சரண்யன். தன் சொந்த மண்ணான வவுனியா சிறிய நகரமாக இருந்தாலும் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளை செய்வதில் தனக்கு மன நிம்மதி கிடைப்பதாக சரண்யன் உணருகிறார். “இங்குள்ளவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியாமல் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளித்து, தேவையான மொழி மற்றும் இதர பயிற்சி அளித்துள்ளேன். இன்று அவர்கள் ஐபி லைன் மூலம் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்” என ஒரு வித மன திருப்தியுடன் கூறுகிறார்.

“என்னை பொருத்தவரை பிசினஸ் என்பது வெரும் லாபம் தரும் தொழில் இல்லை, அதில் கிடைக்கும் அனுபவமே முதல் முக்கியம். ஒரு சிறந்த நிறுவனத்துக்கு அடையாளம், வங்கி கணக்கில் அதிக வரவு உள்ளதை காட்டிலும் சமூகத்திற்கு நல்லது செய்வது தான் முக்கியம் என்பது என் கருத்து” என்று சரண்யன் நேர்மையாக கூறுகிறார். மேலும் தன் சொந்த வங்கி கணக்கில் எப்பொழுதும் மிக குறைந்த பண மீதம் தான் இருக்கும் என்றும் அதுவே தன்னை மேலும் உழைக்க தூண்டும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.

சரண்யன் சர்மாவின் நிறுவனம் பல அங்கீகாரங்களையும் (எஸ்.ஈ.ஓ,கூகில் அனாலிடிக்ஸ்) மற்றும் பல விருதுகளையும் குவித்துள்ளது. 2012, 2013 ஆண்டுகளில் தேசிய அளவிலான சிறந்த இளம் தொழில்முனைவோரின் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் மாகாணத்தில், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்துவதற்காக சிறந்த தொழில்முனைவர் விருதை சரண்யன் சர்மா வென்றுள்ளார். கடந்த ஆண்டு சிறந்த இளம் தொழில்துறையாளர் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


image


பல சிக்கல்களை கடந்து வந்துள்ள சரண்யனுக்கு, பல தரப்பிலிருந்து பிரச்சனைகள் வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இலங்கை அரசு மெத்தனமாக உள்ளதாக கருதுகிறார். பேப்பால் (Paypal) அதாவது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை இலங்கையில் சரிவர இல்லாததால் வங்கி மூலம் பணமாற்றம் செய்வதில் நஷ்டம் அதிகமாக உள்ளதாக வருத்தம் அடைகிறார். இருப்பினும் சோர்ந்து விடாமல் வேறு வழிகளை கண்டறிய வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டதாக சரண்யன் கூறுகிறார்.

தற்போது வடக்கு ஸ்ரீலங்காவில் புதிதாக தொழில் முனைவோருக்கு சிறிய அளவில் பண உதவிகளை செய்து வருகிறார் சரண்யன். ஸ்ரீலங்காவில் உள்ள 3 முதலீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதை மாற்றவே இந்த முயற்சி என்று கூறும் அவர் நல்ல புதிய எண்ணங்களுடன் தொழில்முனைவோர்க்கு தான் உதவிசெய்ய நினைப்பதாக கூறுகிறார்.


image


சரண்யன் மற்றும் அவரின் வாழ்க்கை பயணம், தொழிலின் அனுபவங்கள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். கல்வி அறிவை விட செயல்முறை மற்றும் அனுபவம் மட்டும் தான் தொழில்துறையில் சாதித்து, வெற்றிபெற உதவும் எனும் தாரகமந்திரத்தை பின் பற்றும் சரண்யனின் தத்துவம் “எதற்கும் தளர்ந்துவிடாதே” என்பதுதான். இதுவே என்னை இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்று முடித்து கொள்கிறார் சரண்யன் சர்மா.

சரண்யன் சர்மா பற்றிய மேலும் விவரங்களுக்கு அவரின் வலைதளத்தை தொடர்பு கொள்க: http://www.sharanyan.com/

Add to
Shares
15
Comments
Share This
Add to
Shares
15
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக