சென்னைவாசிகளை கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் “ஊர் சந்தை”
பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மளிகை பொருட்களுக்கும், சிற்றுண்டிகளுக்கும் இடையே தான் நமது மரபுவழி உணவு முறையை துலைத்துள்ளோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, மரபுவழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களின் கைகளுக்கு கொண்டு செல்லவே சென்னை மக்களுக்கான “ஊர் சந்தை” திறக்கப்பட்டுள்ளது. பொங்கல் பானையில் துவங்கி, மதிப்பு கூட்டப்பட்ட உணவுபொருட்கள் என பலவும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
செம்மை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிராமிய விளையாட்டுகள் கற்றுத்தரும் அரங்குகள், சமீபத்தில் பெய்த கனமழை குறித்து விளக்கும் கூட்டங்கள் என அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஊர் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்தன. எல்லா அரங்குகளும் கிராமக் கூட்டம் நடப்பதுபோல மரத்தடியில்தான் இங்கு நடைபெறுகிறது, ஒலிபெருக்கிகள் இருக்காது. இயற்கை மருத்துவம், நோய் தடுப்பு, இயற்கை உணவு முறைகள், நகரமயமாக்கலால் மாறும் மனிதனின் வாழ்க்கை முறை என, பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கும் புத்தகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
சிறுசிறு நோய்களுக்கு கூட, ஆங்கில மருத்துவத்தை நாடாமல், வீட்டில் நம்மை சுற்றியுள்ள செடிகளையும் மூலிகைகளையும் எந்த அளவிற்கு மக்கள் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.
மரபுவழி உணவு முறைகளால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என கருத்து முன்வைக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்த, தேவையானவை மக்களின் கைகளுக்கு சென்று சேர்வதில்லை. தேவையான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதே இந்த சந்தையின் நோக்கம் என்கின்றனர் செம்மை அமைப்புக் குழுவினர்.
“அனுபவ பகிரலாகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் கற்ற இயற்கை முறையை, மற்றவர்களும் அறிய உதவுகிறோம். இந்த சந்தையின் மூலம், நேரடியாக மக்கள் விவசாயிகளிடம் இணைய வாய்ப்பு ஏற்படுகிறது. விளைவிக்கப்படும் பொருளின் மதிப்பை அறிந்து வாங்க முடிகிறது” என்கிறார் ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன்.
உணவை உருவாக்கும் விவசாயியுடனான தொடர்பை, சூப்பர் மார்க்கெட்டுகளால் இழந்த மக்களுக்கு மீண்டும் அந்த உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகவே இந்த சந்தை பார்க்கப்படுகிறது. ஒவ்வொறு மாதமும் சென்னையில் நடைபெறும் இந்த சந்தையின் வாயிலாக, இயற்கை முறையில் மக்களின் ஆரோகியத்தை மேம்படுத்த உதவலாம் என்பதே இந்த குழுவின் முயற்சி.
மேலும் இந்த ஊர் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்வோர் அவரவரின் பைகளை எடுத்து வர கேட்டுக்கொள்ளபடுகின்றனர். எண்ணெய், நெய் ஆகியவை வாங்க விரும்புவோர் அவற்றுக்கான பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும்.
பிளாஸ்டிக் கொள்கலன்களைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பை இக்குழு செய்கின்றனர். துணியில் தைக்கப்பட்ட பைகளை உபயோகிக்க ஊர் சந்தையில் இவை விற்பனை செய்யப்படுகிறது.
ஊர் சந்தை மாதம் ஒரு முறை நடக்கும் இடம்: தக்கர் பாபா பள்ளி, டி. நகர்.