165 மில்லியன் டாலருக்கு எஸ்டேட் வாங்கிய அமேசான் நிறுவனர்!
உலகின் மிகப்பெரிய செல்வந்தரான ஜெஃப் பெசோஸ், 165 மில்லியன் டாலருக்கு வார்னர் எஸ்டேட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.
உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 165 மில்லியன் டாலருக்கு எஸ்டேட் வாங்கியுள்ளார். அந்தப் பகுதியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சொத்தாக இது அமைவதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.
மீடியா ஜாம்பவான் டேவிட் ஜெபன் என்பவரிடம் இருந்து பெசோஸ், வார்னர் எஸ்டேட் சொத்தை வாங்கியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 150 மில்லியன் டாலருக் லக்லன் முர்டாக் பெல் ஏர் எஸ்டேட்டை வாங்கியதே இப்பகுதியில் அதிகப் பட்ச விலையாக இருந்தது. தற்போது, பெசோஸ் இதை மிஞ்சியிருக்கிறார்.
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள வார்னர் எஸ்டேட் 9 ஏக்கர் பரப்பை கொண்டுள்ளது. இங்குள்ள கட்டிடத்தின் தளம் ஒன்று நெப்போலியனுக்கு சொந்தமாக இருந்துள்ளது. மேலும், தங்கும் விடுதி, டென்னிஸ் கோர்ட், கால்ப் மைதானம் ஆகியவையும் உள்ளன.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனர் ஜேக் வார்னரால், 1930களில் இந்த எஸ்டேட் உருவாக்கப்பட்டது.
அமேசான் நிறுவனர் பெசோஸ், 110 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவராக கருதப்படுகிறார். இணைய வர்த்தகம், கிளவுட் சேவைகளில் இந்நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அலெக்ஸா டிஜிட்டல் உதவியாளர் உள்ளிட்ட சேவைகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலும், அமேசான் பிரைம் எனும் பெயரில் இணைய ஸ்டிரீமிங் சேவையையும் வழங்கு வருகிறது. இணைய உலகின் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய நாளிதழ்களில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளராகவும் பெசோஸ் விளங்குகிறார்.
தமிழில்: சைபர்சிம்மன்