90,000 பருவக்கால வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள அமேசான் இந்தியா!
விழாக்கால விற்பனையை முன்னிட்டு அமேசான் இந்தியா நிறுவனம் தனது டெலிவரி பாட்னர் நெட்வொர்க்கை, வாடிக்கையாளர் சேவையை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.
அமேசான் இந்தியா நிறுவனம், விழாக்கால விற்பனையை முன்னிட்டு, தனது நிறைவேற்றும் மையங்கள், வகைப்படுத்தும் மையங்கள், டெலிவரி நிலையங்கள், பார்ட்னர் வலைப் பின்னல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் 90,000க்கும் மேற்பட்ட பருவக்கால வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சப்ளை செயினின் கொள்லளவை அதிகரித்திருப்பது, குறிப்பாக, வாடிக்கையாளர் ஆர்டர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் விழாக்காலத்தில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த உதவும் மற்றும் டெலிவரி திறனை அதிகரிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை, தில்லி, சென்னை, பெங்களூரு, புனே மற்றும் நாடு முழுவதும் பருவக்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அமேசான் இந்தியா செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.
”மேலும், இந்த காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஈடுகொடுப்பதற்கான டிரக் சேவை பார்ட்னர்கள், பேக்கேஜிங் வென்டர்கள், ஐ ஹேவ் ஸ்பேஸ் டெலிவரி பார்ட்னர்கள், மற்ற சேவையாளர்கள் உள்ளிட்ட நிறைவேற்றும் மையங்கள் வலைப்பின்னல் ஆயிரக்கணக்கான மறைமுக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா வாடிக்கையாளர் பிரிவின் துணை தலைவர் அகில் சக்சேனா கூறுகையில்,
“சீரான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கும் நோக்கத்துடன், விழாக்காலத்தை முன்னிட்டு, எங்கள் வலைப்பின்னல் மற்றும் வாடிக்கையாளர் மையங்களில் 90,000 க்கும் மேற்பட்ட பருவக்கால வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம் என தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். கடந்த விழாக்காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இருமடங்கு பருவக்கால பங்குதாரர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
”கிரேட் இந்தியன் விழாக்கால விற்பனையின் போது, இது சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உண்டாக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் தனது டெலிவரி நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்திருப்பதாக அறிவித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அமேசான் நிறுவனம் தனது டெலிவரி பார்ட்னர் நெட்வொர்க்கை, 750 நகரங்களில் 1,400 மையங்களாக விரிவாக்கம் செய்துள்ளது.
அமேசான் இந்தியா, ஆண்டு இறுதிக்குள் 13 மாநிலங்களில் 50 நிறைவேற்றம் மையங்கள் மூலம், மொத்த சேமிப்புத்திறனை 25 மில்லியன் கன அடியாக அதிகரிக்க உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் விழாக்கால விற்பனை 28 ம் தேதி துவங்கியுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில்; சைபர்சிம்மன்