இனி அமேசானில் நீங்கள் தமிழில் ஷாப்பிங் செய்யலாம்...
பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கும் வகையில் இ-காமரஸ் நிறுவனமான அமேசான், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளை தனது மேடையில் இணைத்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது மேடையில் தான்கு புதிய இந்திய மொழிகளை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 200 முதல் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய உதவும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் அமேசான் மேடையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அமேசானில் வாடிக்கையாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும்.
"இந்த அறிமுகத்தின் மூலம் அமேசான் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய மொழியில், புதிய பொருட்கள், டீல்களை கண்டறிந்து, பொருட்கள் தொடர்பாக விரிவான தகவல்களை வாசிப்பது, தங்கள் கணக்கு தகவல்களை நிர்வகிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்,” என அமேசான் இந்தியா வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் கிஷோர் தோட்டா தெரிவித்துள்ளார்.
இணையதளம் மற்றும் மொபைல் தளங்களில் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அமேசான்.இன் தளம், 2018ல் இந்தி மொழியில் ஷாப்பிங் வசதியை அறிமுகம் செய்தது.
வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த இந்தி மொழி வசதியை அறிமுகம் செய்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ், தெலுங்கும், கன்னடம் ஆகிய மொழிகளில் வசதியை அறிமுகம் செய்தது.
அதே போல ஸ்னேப்டீல் நிறுவனம், தமிழ், இந்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் சேவை அளிக்கிறது.
உத்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில், வசிக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்தி மொழி இடைமுகத்தில் சேவையை அணுகி வருவதாக தோட்டா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மொழியிலும் முழுமையான அனுபவத்தை அளிக்க நிறுவனம் மொழியியல் வல்லுனர்களுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்க, சரியான மொழிபெயர்ப்பைவிட பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை நிறுவனம் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் மொழி, குரல் மற்றும் வீடியோ வாயிலாக வாடிக்கையாளர்கள், வணிகர்கள் என இரு தரப்பினருக்கும் சேவை அளிக்கும் வகையில் புதுமைகளை நாடி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், அமேசானின் குரல் வழி டிஜிட்டல் உதவியாளர் சேவையான அமேசான் அலெக்சா அமேசான் ஷாப்பிங் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது. எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் செயல்படும் இந்த சேவை, தமிழ், தெலுங்கும் பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பெயர் சொற்களை புரிந்து கொள்கிறது.
செய்தி- பிடிஐ | தமிழில்- சைபர்சிம்மன்