பெருங்கனவு நிறைவேறப் போகிறது: விண்வெளிக்கு பறக்க இருக்கும் ஜெஃப் பெசோஸ்!

ஜூலை 20ம் தேதி பறக்க திட்டம்!
2 CLAPS
0

உலகின் பெரும் பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்து வருகிறார். இணைய புத்தகக் கடையிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனத்தை வளர்த்தவர் பெசோஸ்.

அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியில் தனிப்பெரும் தலைவராக இருந்த ஜெஃப் பெசோஸ், இப்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக இருக்கிறார். இதற்கான தேதியை அவரே தேர்வு செய்துள்ளார். அதன்படி, ஜெஃப் பெசோஸ் ஜூலை 5 ஆம் தேதி அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வால் 167 பில்லியன் டாலர் தனிப்பட்ட சொத்துடன் உலகின் பெரும் பணக்காரர் ஆன ஐம்பத்தேழு வயதான பெசோஸ், அமேசானில் இனி நிர்வாகத் தலைவராக மாறி, முன்முயற்சிகளில் கவனம் செலுத்துவார் என்றும், தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் போன்ற மற்ற தொழில்களில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்பட்டது.

தற்போது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். அதுவும் அடுத்த மாதமே.

வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று முதல் விண்வெளி பயணத்தை ஜெஃப் பெசோஸ் மேற்கொள்ள இருக்கிறார். அவரின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த நிறுவனத்தின் மனிதர்களை அனுப்பும் முதல் பயணத்தில்தான் பெசோஸ் பயணிக்க இருக்கிறார்.

ஜெஃப் பெசோஸ் உடன் அவரின் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர்.

Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட் இவர்களை சுமந்து செல்ல உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள ஜெஃப் பெசோஸ்,

“5 வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டு வருகிறேன். வருகிற ஜூலை 20ல் அது எனது சகோதரர் உடன் நிறைவேற இருக்கிறது. நிச்சயம் இது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்,'' என்று நெகிழ்ந்துள்ளார்.

அடுத்த மாதம் அமேசான் பொறுப்பில் இருந்து விலகும் பெசோசை தொடர்ந்து ஆண்டி ஜேசி, தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் என்பதையும் அவரே அண்மையில் வெளியிட்டார்.

Latest

Updates from around the world