15 நிமிடங்களில் டெலிவரி: துரித வணிகத்தில் அமேசான் நுழைகிறது!
அமேசான், டிசம்பரில் 15 நிமிட டெலிவரியை வெள்ளோட்டம் பார்க்க உள்ளது, இது ஆரம்பத்தில் அடிக்கடி தேவையுள்ள அத்தியாவசியங்களில் கவனம் செலுத்தும்.
இந்தியாவில் புழங்கி வரும் நெரிசலான, போட்டி மிகுந்த துரிதகதி ஆன்லைன் வணிகத்தில் அமேசானும் நுழைந்து கலக்க முடிவு செய்துள்ளது. நடப்பு டிசம்பரில் இருந்து தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கான 15 நிமிட டெலிவரி சேவையை வெள்ளோட்டம் பார்க்கவுள்ளது.
அமேசான் டிசம்பரில் 15 நிமிட டெலிவரியை வெள்ளோட்டம் பார்க்க உள்ளது, இது ஆரம்பத்தில் அடிக்கடி தேவையுள்ள அத்தியாவசியங்களில் கவனம் செலுத்தும், ஆனால், வாடிக்கையாளர் தேவை மற்றும் தரவு சார்ந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் இந்த வர்த்தகம் பரிணாமம் அடையும்.
"நாங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை 15 நிமிடங்களில் வழங்குவோம்," என்கிறார் அமேசான் கண்ட்ரி மேனேஜர் சமீர் குமார்.
இந்த 15 நிமிட டெலிவரி துரித வர்த்தக ஆன்லைன் சேவைக்கு உள்ளுக்குள் "Project Tez" என்ற பெயரில் குறிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் ஆகியவற்றுடன் சளைக்காமல் போட்டியில் குதிக்கிறது அமேசான்.
‘தேர்வு, மதிப்பு, வசதி’ என்ற எங்களது முக்கிய கொள்கைகளின் அடிப்படையாகும். துரித வணிகம் என்பது இந்த மூன்று மையக் கொள்கையின் நீட்டிப்புதான், என்கிறார் சமீர் குமார்.
போட்டியாளரான Flipkart கடந்த ஆகஸ்ட்டில் ‘மினிட்ஸ்’ என்ற ஆன்லைன் துரித வர்த்தகச் சேவையை தொடங்கியது. Flipkart-க்கு சொந்தமான ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் சில்லறை விற்பனையாளரான மிந்த்ரா, கடந்த வாரம் நவம்பர் மாதம் பெங்களூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 'M-Now’ என்ற 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியது.
ஃபோன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற உயர் மதிப்பு பொருட்கள் அமேசானின் பெரிய டெலிவரி அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை 15 நிமிட டெலிவரி மாடலுக்குள் வராது. அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரிக்குத்தான் இந்த 15 நிமிட வெள்ளோட்டம், என்கிறார் சமீர் குமார்.
மளிகைத் துறையில் அமேசானின் நிறுவப்பட்ட ஆதிக்கம் இந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
"இந்தியாவில் அமேசானிலிருந்து அனுப்பப்படும் ஐந்து பொருட்களில் ஒன்று மளிகைப் பொருளே, மேலும் புதிய மளிகைப் பொருட்கள் அதில் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமிக்கின்றன," என்று குமார் குறிப்பிட்டார்.
அதாவது, ஏற்கெனவே பரவலான வாடிக்கையாளர்களுக்கு மளிகைப்பொருட்களை டெலிவரி செய்து வருகிறோம், ஆனால், இது வேகமாக 15 நிமிட டெலிவரி பற்றியதாகும், என்கிறது அமேசான்.
இத்தகைய துரித வர்த்தகத்திற்கு தாமதமாக வந்துள்ளீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சமீர் குமார்,
“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தான் முதலில் வந்தோமா என்பதெல்லாம் அல்ல, சரியாகச் செய்ய வேண்டும் என்பதே. பாதுகாப்பான, மற்றும் நிலையான ஒரு சேவையை உருவாக்க விரும்புவதால், முடிவுகளை எடுக்க நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறோம்,” என்றார்.
அமேசான் எவ்வாறு போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு பதிலளித்த குமார், நிறுவனத்தின் பரந்த தயாரிப்புத் தேர்வை சுட்டிக்காட்டினார்.
"மற்றவர்கள் 5,000 பொருட்களை வரையறுக்கப்பட்ட வரம்பில் வழங்கலாம், அமேசான் மில்லியன் கணக்கான பொருட்களை ஸ்டாக் வைக்கிறது," என்று கூறினார் சமீர் குமார்.