இரு கைகளை இழந்தும் ‘தன்னம்பிக்கை' - ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் கேப்டன் அமீரின் கதை!

தேசிய அணியில் இடம்பெற கனவு காணும் அமீர் ஹுசைன்!
2 CLAPS
0

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன். பிறப்பால் அமீர் ஹுசைன் ஊனமில்லை. ஆனால் ஒரு விபத்து அவரை வெகுவாக முடக்கியது. விபத்தில் இரு கைகளையும் இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரின் இந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு செயலாக மாறியிருக்கிறது. அமீரின் கதையை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில்,

"இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது எனக்கு சரியாக 8 வயதாக இருந்தபோது எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மரத்தூள் ஆலையில் எனது தந்தைக்கு மதிய உணவு கொடுக்கச் சென்றேன் எனது தந்தையும் மூத்த சகோதரரும் மரத்தூள் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஏற்பட்ட எதிராபாராத விபத்தில் எனது இரண்டு கைகளையும் இழந்தேன். மிஷினுக்குள் சிக்கியிருந்த என்னை அன்று இந்திய ராணுவப் பிரிவு வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.”

அந்த விபத்தில் இருந்து குணமடைய மூன்று வருடங்கள் ஆனது. எனக்கு ஏற்பட்ட விபத்துக்கு பின்பு அந்த மர ஆலையைவே எனது தந்தை விற்றுவிட்டார். விபத்து கொடுத்த அதிர்ச்சி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எனது பாட்டியே எனக்கு உதவினார். அவரால் தான் நான் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கு ஊக்கப்படுத்தப்பட்டேன். ஆனால், பள்ளியில் ஒரு ஆசிரியர் நான் அங்கு இருப்பதை விரும்பவில்லை.

ஏனென்றால் கைகளை இழந்த எனக்கு கல்வி பயனற்றது என்று நினைத்துக்கொண்டார். ஆனால் விபத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்த என் பாட்டி அதை ஆசிரியரிடம் எனது நிலையை எடுத்துச் சொல்லி கல்வியை தொடர்ந்து வழங்க வைத்தார். பாட்டி பாஸி இறக்கும் வரை அவரின் வாழ்நாள் முழுவதையும் எனக்காக அர்ப்பணித்தார்.

பாட்டியின் மரணம் என்னை நிறைய கற்றுக்கொள்ள வைத்தது. எனக்குத் தேவையானவற்றை கவனித்து கொள்ள வைத்தது. நான் கற்ற அந்தப் பாடத்தால் இப்போது எனது தேவைகளை நானே கவனித்து கொள்கிறேன். அன்றாட வேலைகளை நிர்வகிக்கிறேன். சிறுவயது முதலே கிரிக்கெட் மீது எனக்கு ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால், எனது துரதிர்ஷ்டவசம் நான் விபத்தில் சிக்கினேன். இந்த நிலையில் இருந்தாலும், எனது விளையாடும் திறனை உருவாக்க மிகவும் கடினமாக உழைக்க உறுதியாக இருந்தேன்.

அனந்த்நாக், அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது தான் அங்கு ஒரு ஆசிரியர் எனது கிரிக்கெட் ஆர்வத்தை கண்டுபிடித்து பாரா கிரிக்கெட்டில் என்னை அறிமுகப்படுத்தினார்.

”மிகுந்த உறுதியுடன், நான் விளையாட்டைப் பயிற்சி செய்யத் தொடங்கினேன், பல முயற்சிகளுக்குப் பிறகு, நான் பேட்டைப் பிடிக்கத் தொடங்கினேன். பந்தை வீசுவதிலும் வெற்றி பெற்றேன்," எனக் கூறும், அமீர், தனது கால்களைப் பயன்படுத்தி பந்து வீசுகிறார். அதேபோல், கன்னத்திற்கும் கழுத்துக்கும் இடையில் மட்டையை வைத்து பேட்டிங் செய்து வருகிறார்.

தனது மன உறுதி மற்றும் பயிற்சி காரணமாக இந்த நிலைக்கு வந்த அமீர், இறுதியில் பாரா அணித் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவே, அவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அதிக கவனத்தை பெற்று தந்துள்ளது.

2013 ஆம் ஆண்டிலேயே ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனார். தன்னைப் போலவே இந்தப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்க இன்னும் பல தேவைகளைச் செய்ய வேண்டும் என நினைக்கும் அமீர், சரியான பயிற்சியாளர் இல்லாத காரணத்தால் அவரே இந்தப் பகுதியில் உள்ள 100 பேருக்கு விளையாட்டு பயிற்சிகளை நேரடியாக வழங்கி வருகிறார்.

”நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவரைப் போலவே இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட விரும்புகிறேன்," என இந்திய அணியில் விளையாட கனவு கண்டு வரும் அமீர் இதுவரை, டெல்லி, லக்னோ, கேரளா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அண்மையில் ஷார்ஜா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் துபாய் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

இப்போது 32 வயதாகும் அமீர், ஸ்ரீநகருக்கு தெற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் காஷ்மீரின் வாகமா கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த கிராமம் இங்குள்ள காஷ்மீரி வில்லோ மரங்களை கிரிக்கெட் பேட் செய்வதற்காக புகழ்பெற்ற இடமாகும்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடிய ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூலும் இந்த கிராமத்தை ஒட்டிய பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர். பிஜ்பெஹாரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கிரிக்கெட் மட்டைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதால், இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது இயல்பாகவே ஆர்வம் கொள்கின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர்: இர்பான் அமின் மாலிக் | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world