‘அக்னிபத் வீரர்களுக்கு நாங்க இருக்கோம்...’ - ஆனந்த் மஹிந்திரா ஆதரவு ட்வீட்!

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கலவரங்களுக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய புதிய ராணுவ வீரர் ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத்திற்கு ஆனந்த் மஹிந்திரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
0 CLAPS
0

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கலவரங்களுக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய புதிய ராணுவ வீரர் ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத்திற்கு ஆனந்த் மஹிந்திரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 'அக்னிபத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும்.

பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். இதில், 255 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

மேலும், ராணுவத்தினருக்கான சலுகைகளுக்கு பதிலாக முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், 4ம் ஆண்டில் மட்டும் மாதம் ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். அதிலும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, மத்திய அரசின் பங்களிப்பான 30 சதவீதத்துடன் சேர்த்து ரூ.11.7 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பக்கத்தில்,

”அக்னிபத் திட்டத்தை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் சொன்னதையே தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அக்னிவீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.

அதாவது அக்னிபத் திட்டத்தில் பணியாற்றிவிட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வரும் வீரர்களின் ஒழுக்கமும், திறன்களும் அவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திரா தனது மற்றொரு பதிவில்,

“கார்ப்பரேட் துறையில் அக்னி வீரர்களின் வேலைவாய்ப்புக்கான பெரிய வாய்ப்பு. தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகிய திறமைகளுடன் அக்னிபத் வீரர்கள் தொழில்துறைக்கு சந்தைக்குத் தயாரான தொழில்முறை தீர்வுகளை செயல்பாடுகள் முதல் நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரையிலான முழு அளவையும் வழங்க வாய்ப்புள்ளது.”

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

தொகுப்பு: கனிமொழி

Latest

Updates from around the world