1 ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மஹிந்திரா அளித்த சர்ப்ரைஸ் வீடு!

By malaiarasu ece|5th Apr 2021
ஒரு ரூபாய்க்கு இட்லி பாட்டி மகிழ்ச்சி!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.


சிறுவாணி தண்ணீரில், மிருதுவான இட்லியை தயாரித்து, அடுப்பு தீயின் நடுவே ஆவி பறக்க, பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பவர் கமலாத்தாள் பாட்டி. பல இடங்களில் இட்லியின் விலை 6 முதல் 10 ரூபாய் வரை இருக்க, பாட்டியோ யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத் தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார்.


கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் இவர், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.

இட்லி

சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள்.


கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார். அப்போது தான் எல்லோருக்கும் கமலத்தாள் பாட்டி அறிமுகமானார்.


இந்நிலையில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.

idly patti
மேலும் தற்போது, மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது. மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,

"ஒருவரின் எழுச்சியூட்டும் கதையில் ஒரு சிறிய பங்கை ஒருவர் பெறுவது அரிது. மேலும் இட்லி அம்மா என்று அழைக்கப்படும் கமலாத்தலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அவருக்கு ஒரு சிறிய பங்கை வழங்க அனுமதித்ததற்காக. அவர் விரைவில் தனது சொந்த வீடு மற்றும் பணியிடத்தை கொண்டிருப்பார். அங்கு அவர் இட்லிகளை சமைத்து விற்பனை செய்வார்,’’ என்று பதிவிட்டுள்ளார்.