தினமும் 500 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் பெங்களுரு அடுக்குமாடி குடியிருப்பு!

இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் ஆர்ஓ தண்ணீரை சேகரித்து கார் சுத்தப்படுத்துதல், செடிகளுக்கு தண்ணீர் விடுதல், வாகனங்கள் நிறுத்துமிடத்தைச் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
1 CLAP
0

பெங்களூரு ’ஏரிகளின் நகரம்’ என்றே அழைக்கப்பட்டது. 1970-களில் பெங்களூருவில் சுமார் 300 ஏரிகள் இருந்தன. ஆனால் நகரமயமாக்கலால் இந்த ஏரிகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று மிகக்குறைவான ஏரிகள் மட்டுமே காணப்படுகிறது.

நீர்நிலைகள் அழிந்து வருவதுடன் மழைப்பொழிவும் குறைவதால் சமீப காலமாகவே தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இயற்கையான நீர் ஆதாரங்களும் அழிந்துபோன நிலையில் குடியிருப்புவாசிகள் தங்களது அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் வண்டிகளையே அதிகம் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீர் வளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பல தனிநபர்களும் குழுக்களும், அழிந்துகொண்டிருக்கும் ஏரிகளை மீட்டெடுப்பதற்கான வெவ்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன் நகரின் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் பெங்களூருவின் வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள மா பிருந்தாவன் குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் ஆதிநாராயண ராவ் வேல்புலா தண்ணீரை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இங்கு வசிப்பவர்கள் தினமும் கிட்டத்தட்ட 500 லிட்டர் தண்ணீரை சேமிக்கின்றனர்.

ஆதிநாராயணா என்டிடிவி உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,

“எங்களது குடியிருப்பு வளாகத்தில் 46 வீடுகள் உள்ளன. போர்வெல் மூலம் எங்களுக்கு தினமும் 500 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அனைத்து குடும்பங்களுக்கும் இந்த அளவு போதுமானதாக இருப்பதில்லை. மற்ற பெங்களூருவாசிகள் போன்றே நாங்களும் தண்ணீர் வண்டியை சார்ந்திருந்தோம். அவர்கள் 3,500 லிட்டர் தண்ணீருக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும் காரணத்தால் தண்ணீர் வண்டிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் விலை உயர்ந்துகொண்டே போகிறது,” என்றார்.

மார்ச் மாதம் 23-ம் தேதி ஆதிநாராயணா குடியிருப்புவாசிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் ஒரு தகவல் அனுப்பினார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சக குடியிருப்புவாசிகள் யாரும் தங்களது காரை சுத்தப்படுத்தவேண்டாம் என்று அந்த மெசேஜ் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். ஒரு காரை சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்கிறார் அவர்.

அவர் மேலும் கூறுகையில்,

”சிலர் இந்த கோரிக்கையை நிராகரித்தாலும் மற்றவர்கள் தங்களது கார்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஒப்புக்கொண்டனர். சுத்தப்படுத்துவதற்காக 10 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுவது அதிகம் என்றே எனக்குத் தோன்றியது. அனைவரும் ஒன்றுகூடி இதுகுறித்து தீவிரமாக கலந்தாலோசித்தோம். ஆர்ஓ மூலம் வெளியேறும் தண்ணீரை சேகரித்து குடிப்பது தவிர மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என குடியிருப்புவாசிகளில் ஒருவரான மஞ்சு பரிந்துரைத்தார்.

ஆர்ஓ ஃபில்டர்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்போது அதிகளவிலான தண்ணீர் வெளியாகி வீணாக்கப்படுகிறது. எனவே அனைவரும் இந்தத் தண்ணீரை சேகரித்து வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட பக்கெட்டில் நிரப்பி வைத்தனர். பின்னர் தண்ணீர் சேகரிக்க குடியிருப்போர் சங்கம் மூலம் பெரிய டிரம் வாங்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே வைக்கப்பட்டது. குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தண்ணீரை சேகரிக்கும் பொறுப்பு பராமரிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியரிடம் ஒப்படைக்கப்பட்டது என I am Renew தெரிவிக்கிறது.

இதன் மூலம் குடியிருப்புவாசிகள் தினமும் 500 லிட்டர் வரை தண்ணீரை சேமிக்கின்றனர். தற்போது ஆர்ஓ தண்ணீர் காரை சுத்தப்படுத்துதல், பார்க்கிங் பகுதியை சுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி குடியிருப்புவாசிகள் குழாயில் தண்ணீரின் ஓட்டத்தை குறைக்கக்கூடிய சாதனத்தையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

உதாரணத்திற்கு இந்த சாதனம் பொருத்தப்படுவதற்கு முன்பு குழாயில் ஒரு நிமிடத்திற்கு ஆறு லிட்டர் அளவு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் இந்த சாதனம் பொருத்தப்பட்ட பிறகு ஒரு நிமிடத்திற்கு மூன்று லிட்டர் தண்ணீர் மட்டுமே வெளியேறுகிறது.

இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் இத்தகைய முயற்சிகளுடன் மற்ற பெங்களூருவாசிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA