Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

7 வயது சிறுமி உருவாக்கிய இந்த ஆப் பயன்படுத்தி மரம் நடலாம்...

அக்ரதா திவாரி இந்த செயலி மூலம் ஒரு மில்லியன் மரங்கள் நட திட்டமிட்டுள்ளார்.

7 வயது சிறுமி உருவாக்கிய இந்த ஆப் பயன்படுத்தி மரம் நடலாம்...

Wednesday July 15, 2020 , 3 min Read

அக்ரதா திவாரிக்கு ஏழு வயது. இவர் ஒரு இளம் தொழில்முனைவர். இவரது வணிக முயற்சி பற்றி எப்படி இவருடன் பேசுவது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவருடனான உற்சாகமான உரையாடலில் அவ்வப்போது உதவிக்கு வருகிறார் அக்ரதாவின் அப்பா. ஆனால் அவரை இடைமறித்த அக்ரதா, 'அப்பா, இது என் இண்டர்வியூவா? உங்க இண்டர்வியூவா?' என்றார்.


அவரது வயதிற்கே உரிய இந்த சுட்டித்தனமாக கேள்வி எங்கள் இருவரையும் சட்டென்று சிரிக்க வைத்தது. அக்ரதா கோடிங் படிக்கிறார். தனது திறனை மெருகேற்றிக்கொள்ளும் வகையில் 50 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கிறார்.


கேம்ஸ் உருவாக்கி அதை தனது ஆப்’பில் இணைக்கிறார். இவர் உருவாக்கியுள்ள செயலியின் பெயர் Trilovera.

1

கார்பன் சுவடுகளை குறைக்கும் முயற்சி

கடந்த ஆண்டு பண்டிகைக்காக மும்பையைச் சேர்ந்த அக்ரதாவின் பெற்றோர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். டெலிவரி செய்யும் நபர்கள் பலமுறை வீட்டிற்கு வந்து பார்சலை கொடுத்துள்ளனர் இதனால் கார்பன் சுவடு அதிகமிருப்பதாக அக்ரதா எண்ணினார்.  


சுற்றுச்சூழல் குறித்தும் கார்பன் அடிச்சுவடு குறித்தும் இவருக்கு எப்படித் தெரியும்? அக்ரதாவின் அப்பா பிக்ரந்த் திவாரி grow-trees.com சிஇஓ. இந்த grow-trees.com தளம் உலகளவிலான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் சேவையை வழங்குகிறது.

“என் குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதைப் பார்த்தேன். இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல விதங்களில் வளிமண்டலத்தில் கார்பன் உருவாகிறது என்பதை உணர்ந்தேன். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் பயனர்களுக்கு தண்டனையோ அபராதமோ விதிக்கலாம் என உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடம் பரிந்துரைக்க எண்ணினேன். ஆனால் அது நல்ல யோசனை இல்லை என்று பெற்றோர் மறுத்துவிட்டார்கள். சிறு வயது முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்தேன். மரங்களை நட்டு சுற்றுசூழலில் கார்பனின் தாக்கத்தை குறைப்பதே சிறந்தது என்று தீர்மானித்தேன்,” என்றார்.

அக்ரதாவின் சிந்தனை, குடும்பத்தினருடனான கலந்தாய்வு ஆகியவற்றின் பலனாக உருவானதுதான் Trilovera. சாஃப்ட்வேர் டெவலப்பர்களான அக்ரதாவின் அத்தைகள் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளனர்.

ஆப் பயன்படுத்தி மரம் நடலாம்

Tree lover இந்த இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவானதுதான் Trilovera. இது ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற மின்வணிக்க தளங்கள், ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் சேவையளிக்கும் செயலிகள், ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவு டெலிவரி செயலிகள், புக்மைஷோ, மேம்மைட்ரிப், ஓயோ போன்ற அனைத்து செயலிகளையும் பயனர் தங்களது தேவைக்கேற்ப தேர்வு செய்துகொள்ள உதவுகிறது.


பயனர்கள் இந்தச் செயலிகளை அணுக Trilovera பயன்படுத்தும்போது, அந்த பரிவர்த்தனைகள் Trilovera மரங்கள் நடுவதற்கு உதவும். இதனால் பயனர்களுக்கு எந்தவித செலவும் இருக்காது. Trilovera கூகுள் ஆட்ஸ் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு மரங்கள் நடும்.


அதுமட்டுமின்றி Trilovera பயனர்களுக்கு கேம்ஸ் வசதியையும் இணைக்கிறது. இதில் பெரும்பாலானவை அக்ரதாவால் உருவாக்கப்பட்டவை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இதுபோன்ற தளம் வேறு ஏதும் இந்தியாவில் இல்லை. செயலியைப் பயன்படுத்தினால் போதும் இலவசமாக மரம் நட முடியும். இத்தகைய வசதியை Trilovera வழங்குகிறது என்று அக்ரதா விவரிக்கிறார்.

ஜெர்மனியைச் சேர்ந்த ecosia.org என்கிற வலைதள தேடல் என்ஜின் அதன் வலைதளத்தின் மூலமான ஒவ்வொரு தேடலுக்கும் மரங்களை நடுகிறது என்கிறார் பிக்ரந்த். ஒன்பது ஆண்டுகளாக செயல்படும் இந்தத் தளத்தில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் 65 மில்லியன் மரங்களை நடுவதற்கு இந்தத் தளம் திட்டமிட்டுள்ளது.


அக்ரதா இத்தகைய முயற்சியை இந்தியாவிலும் பின்பற்ற விரும்பினார். மும்பை கிரீன் ஏக்கர்ஸ் பள்ளி மாணவியான இவர், மாதிரியையும் செயலியையும் பள்ளி முதல்வர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் விளக்கியுள்ளார். அக்ரதா தனது முயற்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல இவர்கள் ஊக்கமளிக்கின்றனர்.

ஒரு மில்லியன் மரங்கள்

2

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பிக்ரந்தால் அக்ரதாவிற்கு தற்சமயம் உதவ முடியவில்லை. விரைவில் நிலை மாறும் என்றும் செயலி பலரது கவனத்தை ஈர்க்கும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இதுவரை Trilovera செயலி 1,600 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. கூகுள் ஆட்ஸ் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு 11 மரங்கள் நடப்பட்டுள்ளன.


பிக்ரந்த் செயலி உருவாக்கவும் அக்ரதாவின் கோடிங் வகுப்புகளுக்கும் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். சரியான வணிக யோசனை உதிப்பது எளிதாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு சவால்களை சந்திக்க நேர்கிறது என்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.

“எனக்கு ஆரம்பத்தில் கோடிங் தெரியாது என்பதால் கடினமாக இருந்தது. தற்போது கோடிங் வகுப்பிற்கு செல்வது பெரிதும் உதவுகிறது. ஜாவாஸ்கிரிப்ட் கோடிங் கற்றுக்கொண்டு மேலும் இரண்டு கேம் செயலிகளை உருவாக்கியுள்ளேன். பரிச்சயமில்லாதவர்கள் முன்னிலையில் பேசுவது கடினமாக இருந்தது. ஆனால் என் பெற்றோரும் ஆசிரியர்களும் ஆப் குறித்து எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொடுத்துள்ளனர்.

ரேடியோவில் நேரலையிலும் பள்ளி அசெம்பிளியிலும் டாகுமெண்டரி வீடியோ ஒன்றிலும் நான் பேசியிருக்கிறேன்,” என்றார்.


பதிவிறக்கங்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்தியா முழுவதும் மரங்கள் நடுவதற்கு தொகையைப் பயன்படுத்த உள்ளனர். கூகுள் ஆட்ஸ் மூலமாகவும் பிராண்ட் அல்லது நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் அல்லது கமிஷன் மூலமாகவும் வருவாய் பெறும் வகையில் இவர்களது மாதிரி செயல்படுகிறது.


அடுத்த 18 மாதங்களில் ஒரு மில்லியன் பதிவிறக்கங்களை எட்டவேண்டும். ஒரு மில்லியன் மரங்கள் நடப்படவேண்டும். இந்த இலக்கை எட்டவே அப்பாவும் மகளும் விரும்புகின்றனர்.

“உலகம் வெப்பமயமாவதற்கும் மாசுபாடுகளுக்கும் நாம் காரணம் என்பதை மொபைல் போன் பயன்படுத்துபவர்களும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களும் உணரவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டால் பூமி விரைவில் பசுமையான இடமாக மாறிவிடும்,” என்றார் அக்ரதா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா