உங்களுக்கு உதவிட உதவியாளர் வேண்டுமா? அப்போ பாஸ் 'டாஸ்க்’ என்னனு சொல்லுங்க ‘ஓகே’ பண்வாங்க இவங்க!

தனிநபரின் தேவைகளை பூர்த்தி செய்ய எல்லா சேவைகளையும் அள்ளித் தரும் செயலிகள் சூழ் உலகில் இதை பயன்படுத்தத் தெரியாதவர்களை பற்றி யாரேனும் சிந்தித்திருக்கிறார்களா? சீனியர் குடிமக்களுக்கு சிடுசிடுப்பு காட்டாமல் சிரித்த முகத்துடன் பணியாள் கிடைக்குமா. அதைத் தான் செய்கிறது சென்னை ஸ்டார்ட் அப் OkBoss.
7 CLAPS
0

“நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.”

ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகில் சிறு உதவிக்கேனும் நமக்கு மற்றொருவர் தேவைப்படுகிறார். தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கு நம்பத்தகுந்த ஆள் இல்லை என்று தனித்து வசிப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் படும் கஷ்டங்கள் சென்னை போன்ற பெருநகரத்தில் ஏராளம். இவர்களுக்கான தீர்வைத் தருகிறது சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவர் ஷோபா அல்லாடி தொடங்கியுள்ள ’ஓகே பாஸ்’ (Ok Boss).

ஷோபா அல்லாடி, நிறுவனர், ஓகே பாஸ்

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட ’ஓகே பாஸ்’ குறித்து அதன் நிறுவனர் ஷோபா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். CA, CISA, எம்பிஏ என பட்டப்படிப்புகளை முடித்து நிதித்துறை மற்றும் வங்கிப் பணிகளில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறேன். இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமின்றி சில ஆண்டுகள் அயல்நாட்டிலும் இருந்திருக்கிறேன். வெளிநாட்டில் நான் என் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த போது சென்னையில் இருந்த என்னுடைய பெற்றோருக்கும், மாமனார் மாமியாருக்கும் சிறு சிறு தேவைகளை செய்து கொடுக்க ஆள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டனர்.

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறவினர்களும் கூட இதே பிரச்னையை என்னிடம் கூறி வந்தனர். வயது முதிர்வு காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கி, மருந்தகம், அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சிறு சிறு பணிகளுக்காக சென்று வர முடியாமல் தவித்தனர். அப்போதே மூத்த குடிமக்களுக்காக நான் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு நானும் இந்தியா திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கார்ப்பரேட் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் சலித்து போய் விட்டது, பிள்ளைகளும் வளர்ந்து அவர்களின் தேவைகளை அவர்களே செய்து கொள்பவர்களாகி விட்டனர். இப்போது ஏன் நாம் நம்முடைய உள்ளுணர்வு சொல்லும் மற்றவர்களுக்கு உதவும் சேவையை செய்யக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது என்கிறார் ஷோபா.

காலமும் நேரமும் கூடி வருகிறது இதனை நழுவவிட்டு விடக் கூடாது என்று எண்ணித் துணிந்து செயலில் இறங்கி இருக்கிறார் ஷோபா. பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்களின் உலகமாக மட்டுமே இருந்த செயலிகள் கொரோனாவிற்கு பின் அப்படியே தலைகீழாக மாறி விட்டது. வயோதிகத்தால் ஒரு வழியாக ஸ்மார்ட் போன்களையே இப்போது தான் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர் தனித்திருக்கும் சீனியர் குடிமக்கள்.

இதில் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலி என்றால் அதை பயன்படுத்துவர்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. அண்மையில் கூட வயதான தன்னுடைய தந்தை ஆப்’இல் கால் டாக்சியை எப்படி புக் செய்வது என்று எழுதி வைத்திருந்த குறிப்பு இணையத்தில் படு வைரலானது. சுவாரஸ்யமான நிகழ்வு என்று நாம் கடந்து செல்லும் விஷயம் அல்ல இது, அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி செய்ய ஆள் இல்லை என்பதையே இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஒருவருக்கான தனிப்பட்ட உதவியாளர் / Errand சேவைகள் இந்தியாவில் பரவலாகக் கிடைப்பதில்லை. உணவு / மளிகைப் பொருட்கள் / வீட்டு / முதியோர் / செல்லப்பிராணிகள் / ஆட்டோமொபைல்கள் பராமரிப்பு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செயலி இருக்கிறது. இந்த அனைத்து சேவையையும் ஒரே பெயரின் கீழ் கொண்டு வந்து வழங்குவதே Ok Boss-இன் நோக்கம் என்று தொடர்கிறார் ஷோபா.

செயலிகளை பயன்படுத்தத் தெரியாதவர்களை மனதில் வைத்து மொபைல் மற்றும் இணையதள பதிவு சேவைக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது.

“நீங்கள் www.okboss.co அல்லது போனில் இருந்து எங்களுடைய வாடிக்கையாளர் சேவை எண்ணான 63856 02677 என்ற தொலைபேசிக்கு அழைத்தோ அல்லது குறுந்தகவல், வாட்ஸ் அப் தகவல் அல்லது வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் என எந்த வகையில் வேண்டுமானாலும் எங்களை அணுகி உங்களின் தேவைக்கான உதவியைப் பெறலாம். மேலும், செயலி பயன்படுத்தத் தெரிந்தவர்கள் ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோர்களில் ’Ok Boss' செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்," என்கிறார் ஷோபா.

ஓகே பாஸில் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து பெற்று மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்தல், வீட்டு உபயோகப் பொருட்கள் சரிபார்ப்பு, வாகனங்கள் சரிபார்ப்பு, மூத்த குடிமக்கள் பராமரிப்பு, வங்கிக்குச் சென்று செக் போடுதல், அரசு அலுவலகங்களில் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாங்கள் செய்து தருகிறோம், என்றார் ஷோபா.

மூத்த குடிமக்களை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டாலும் அதன் பின்னர் errand சேவைக்கான தேவை அதிகம் இருப்பதை அறிந்து எங்களது பணிகளை விஸ்திகரித்தோம்.

“தனிநபர் ஒருவருக்கு தனி உதவியாளர் இருந்தால் என்னென்ன பணிகளை கொடுப்போமோ அதே போன்று வாடிக்கையாளர்கள் தான் ’பாஸ்’, எந்த டாஸ்க்காக இருந்தாலும் எங்களுக்கு ’ஓகே’ என்பதே ’OK Boss’ன் அர்த்தம் என்று மகிழ்கிறார் ஷோபா.

ஓகே பாஸ் குழுவினர்

டாஸ்க் ஏற்று செய்பவர்களுக்கு திருப்தி தரும் வகையிலான சம்பளமாகக் கொடுக்கும் விதத்தில் சேவைக்கு ஏற்ப பணிகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஷோபா தலைமையில் தொழில்நுட்ப, மார்க்கெட்டிங் பிரிவு என 10 பேர் கொண்ட குழுவினர் செயல்படுகின்றனர்.

இவர்கள் தவிர சேவைகள் செய்வதற்காக பணியாற்றும் டெலிவரி ஆட்களின் தகுதி மற்றும் அவர்களின் அடையாளம், பின்புலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே டாஸ்க் வழங்கப்படுகிறது. சுமார் 50 பேர் தேவைக்கு ஏற்ப டாஸ்கர்களாக செயல்படுகின்றனர். எனவே டெலிவரி ஆட்கள் மீதான நம்பகத் தன்மைக்கு நாங்கள் முழு உத்தரவாதம் தருகிறார் ஷோபா.

பட்டயக் கணக்காளர் குடும்பத்தில் இருந்து வந்த முதல் பெண் தொழில்முனைவரான எனக்கு என்னுடைய குடும்பத்தினரின் மிகவும் பக்க பலமாக இருக்கின்றனர். இந்தத் தொழில்முனைவை நான் கட்டாயம் செய்ய வேண்டும் என்று எனக்கு உத்வேகம் தந்ததே என்னுடைய கணவர் தான்.

“என்னால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை நான் வெளிப்படையாக என் குடும்பத்தினரிடம் கூறிவிடுவதால் அவர்கள் எல்லா விஷயத்திற்கும் என்னை எதிர்பார்க்காமல் எனக்கு ஊக்கம் தந்து உதவிபுரிவதால் எந்த மனஅழுத்தமும் இன்றி குடும்பம், தொழில்முனைவு இரண்டையும் திருப்தியோடு கொண்டு செல்ல முடிகறது,” என்கிறார் ஷோபா.

எந்தத் தொழிலுமே எடுத்த எடுப்பில் லாபம் தந்துவிடாது அப்படித் தான் என்னுடைய தொழில்முனைவுப் பாதையும் இருக்கிறது. என்னால் லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து வாடகை, சம்பளம் கொடுக்க முடிகிறது. வாடிக்கையாளர்களின் தேவை முழுமை அடைந்து அவர்கள் அடையும் மகிழ்ச்சியே எனக்கான உற்சாக டானிக். அந்த திருப்தியோடு ஒரு நாளிற்கு 10 பேரின் தேவையையாவது பூர்த்தி செய்திருக்கிறோம் என்ற நேர்மறை எண்ணம் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது என்கிறார் ஷோபா.

ஒரு எண்ணிற்கு அழைத்தால் தங்களின் எல்லாத் தேவைகளும் பூர்த்தி அடைந்துவிடும் என்ற நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே ஓகே பாஸின் நோக்கம். அதே சமயம் முடிந்த வரையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் அன்றாட பணத்தேவைகளை நிறைவேற்ற உதவுவதையே இலக்காக வைத்துக் கொண்டு தன்னுடைய தொழில்முனைவுப் பாதையை தொடர்வதாக மகிழ்கிறார் ஷோபா.

ஓகே பாஸ்...!

Latest

Updates from around the world