அடுக்குமாடிக் குடியிருப்பு கலாச்சாரத்தின் முன்னோடி தொழிலதிபர் அப்பாசாமி மறைவு!

By YS TEAM TAMIL|7th Sep 2020
ரியல் எஸ்டேட் துறையில் நன்கறியப்பட்ட ’அப்பாசாமி ரியல் எஸ்டேட்’ குழுமத்தின் நிறுவனர், உரிமையாளர் எஸ்.அப்பாசாமி மறைந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடியாக கருதப்படும் அவரது வாழ்க்கை பாதை பற்றி ஒரு பார்வை.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

‘அப்பாசாமி ரியல் எஸ்டேட்’ என்று பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் எஸ்.அப்பாசாமி நேற்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. அவரை நினைவுக் கொண்டு போற்றும் வகையில் இந்த பதிவு அமைகிறது.


சென்னை இன்று அடுக்குமாடி கட்டிடங்களின் நகரமாக மாறியிருக்கிறது. சென்னை மட்டும் அல்லாமல், அதன் நான்கு பக்கமும் விரியும் புறநகர் பகுதிகளிலும் அடுக்கு மாடி கட்டிடங்கள் விண்ணை முட்டும் வகையில் எழுதிருக்கின்றன.


சென்னை போன்ற பெரு நகரத்தில், திரும்பிய இடம் எல்லாம் இப்படி அடுக்கு மாடி குடியிருப்புகள் கம்பீரமாக எழுந்து நிற்பதில் வியப்பில்லை. ஆனால், சென்னையில் இப்படி அடுக்குமாடி கட்டிடங்கள் என்று சொல்லப்படும் அபார்ட்மெண்ட் காம்பிளக்ஸ்கள் உருவாகத் துவங்கியது எப்படி என நினைத்துப்பார்த்தால் நிச்சயம் வியப்பாக இருக்கும்.


இந்த வியப்புடன், அடுக்குமாடி குடியிருப்பு வரலாற்றை திரும்பி பார்த்தால், எஸ்.அப்பாசாமியின் பெயர் பளிச் என மின்னுவதை பார்க்கலாம். இந்த அப்பாசாமி வேறு யாரும் அல்ல, ரியல் எஸ்டேட் துறையில் புகழ் பெற்ற அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.


கடந்த 1959ம் ஆண்டில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கியவர் எஸ்.அப்பாசாமி அவர்கள். சென்னையில் சிறந்ததொரு ரியல் எஸ்டேட் நிறுவனமாக இன்றும் விளங்கி வருகிறது. 1960ம் காலகட்டத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரத்தை உருவாக்கிய முன்னோடி அப்பாசாமி எனலாம். தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினர், அப்பசாமி கட்டித் தந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது நிறுவனம் 100க்கும் மேற்பட்ட திட்டங்களை தமிழகம் முழுதும் வெற்றிகரமாக முடித்துள்ளது.


அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் இத்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மட்டும் அல்ல, ஒரு விதத்தில் இத்துறையில் முன்னணி நிறுவனமும் கூட.

இன்று வரை சென்னை நகரின் அடையாளமாக கருதப்படும் எல்.ஐ.சி அடுக்குமாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அதே ஆண்டில் தான், அப்பாசாமி, ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்தார்.  சென்னை நகரம் என்பது அதன் மையப் பகுதியாகவே அறியப்பட்டிருந்த காலத்தில், அதன் அருகாமையில் இருந்த விமான நிலைய பகுதியில் 125 ஏக்கர் நிலம் வாங்கி கட்டிட பணிகளை துவக்கினார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஸ்ரீ சங்கர் நகர் எனும் மாதிரி குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். அவரது நிறுவனம் உருவாக்கிய குடியிருப்பு கட்டிடங்கள் சென்னைக்கு தற்போது பிரபலமாக கருதப்படும் பிளாட் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பு எனும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்தது.

flats

சென்னையில் மட்டும் அல்ல, தென்னிந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனமயமான சூழல் இல்லாத காலத்தில், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது செயல்பாடுகளில் தனியிடம் பிடித்தது.


சென்னை நகரம் வளர்ந்த நிலையில், அடுக்குமாடி கலாச்சாரமும் வளர்ந்தது. அப்பாசாமி நிறுவனமும் வளர்ந்தது. தரமான கட்டடங்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து நல்ல பெயரும் பெற்றது.


பின்னர் ரியல் எஸ்டேட் துறையில் எண்ணற்ற நிறுவனங்கள் போட்டிக்கு வந்துவிட்ட நிலையிலும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

நகரம் முழுவதும் குடியிருப்புத் திட்டங்களை செயல்படுத்தி பெரிய அளவில் வளர்ந்த நிறுவனம், 1990’களில், ஹோட்டல் துறையின் வளர்ச்சியை கணித்து,  தி ரெஸிடன்சி குரூப் மூலம் ஹோட்டல் துறையிலும் கால் பதித்து முத்திரை பதித்தது.

சென்னை, கோவை கரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இவர்கள் உருவாக்கிய ரெசிடென்ஸி ஹோட்டல்கள் 2016-ல் தென் இந்தியா முழுவதும் விரிவடைந்தது. மேலும் மாலத்தீவில் நவீன சொகுசு ரிசார்ட்டுகளையும் உருவாக்கி உள்ளனர் இவர்கள். ரியல் எஸ்டேட் துறையில் அவர் உருவாக்கிய நம்பிக்கையே அவரின் நிறுவன வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது.

தலைமுறை தலைமுறையாக வீடு வாங்கும் வாடிக்கையாளர்களைக் கொண்ட அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் பல துறைகளில் விரிவாக்கம் செய்துள்ளது. அப்பாசாமியின் மகன் ரவி அப்பாசாமி, நிர்வாக இயக்குனராக நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார். அவரது மகனும், குடும்பத் தொழிலில் ஈடுபாடு காட்டி, குழுமத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.