Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

மீன், இறால் பண்ணை விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட உதவும் ஆப் உருவாக்கிய Aqua Connect நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த ’அக்வா கனெக்ட்’ ஸ்டார்ட் அப் அறிமுகப்படுத்தியுள்ள FarmMOJO என்கிற செயலி நீர்வாழ் உயிரனங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களை கணிக்கிறது. அத்துடன் தண்ணீரின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்கிறது.

மீன், இறால் பண்ணை விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட உதவும் ஆப் உருவாக்கிய Aqua Connect நிறுவனம்!

Thursday June 06, 2019 , 4 min Read

சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள சிதம்பரத்தில் ஓராண்டிற்கும் மேலாக இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த அருள் பிரகாஷ் ஒரு கணிசமான தொகையை இழந்துள்ளார். ஏனெனில் இவரது இறால்கள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்துபோயின.

”நீர்வாழ் உயிரினங்கள் இறப்பதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் கடினம். பெரும்பாலான நேரங்களில் அவற்றிற்கு அளிக்கப்படும் உணவின் தரத்தையும் அவை வளரும் தண்ணீரின் தரத்தையும் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணிகளில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் அது லாபத்தை பாதிக்கும். இதற்குத் தீர்வுகாண உருவானதுதான் FarmMOJO மொபைல் செயலி. இந்த செயலியில் நோய் கணிக்கும் மாதிரி அமைக்கப்பட்டதுடன் திறன் அதிகரிக்க ஆலோசனை வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது,” என யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
1

மீன்வளர்ப்பில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. இதன் விளைச்சல் அதிகரித்து 2012-13-ல் 4.21 மில்லியன் டன் வரை இருந்துள்ளதாக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவிக்கிறது. நாட்டின் கரையோரப் பகுதி முழுவதும் 16.4 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்வளர்ப்பையே சார்ந்துள்ளதாக வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நான்கு விவசாயிகளில் ஒருவரால் மட்டுமே தன்னையும் தன் குடும்பத்தை ஆதரிக்கத் தேவையான வருவாயை ஈட்டமுடிகிறது. இந்தத் துறையில் தொழில்நுட்பம் குறைந்தளவில் பங்குவகிப்பதே இதற்குக் காரணம்.

ராஜமனோகர், சோமசுந்தரம், சஞ்சய் குமார், சண்முகசுந்தரம் ஆகியோரால் நிறுவப்பட்ட சென்னையைச் சேர்ந்த ’Aqua Connect’ என்கிற ஸ்டார்ட் அப் இந்த போக்கை மாற்ற விரும்புகிறது. இந்த ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிரினங்களுக்கு ஏற்படும் நோயைக் கணித்து, தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்து, விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க உதவுகிறது. இந்நிறுவனம் FarmMOJO என்கிற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள 3,000-க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்க்கையில் மதிப்பைக் கூட்டியுள்ளது.

நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதல்

1

FarmMOJO செயலி இதுவரை 750 பண்ணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பலனளித்துள்ளது.

“செயலியைப் பயன்படுத்திய பிறகு விவசாயிகளின் வருவாய் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. தீர்வுகாணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில் விவசாயிகளுக்கு உதவி 120 குளங்களில் நோய்கள் ஏற்படுவதைக் குறைத்துள்ளது. இதன்மூலம் இழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார் அக்வா கனெக்ட் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ராஜமனோகர் சோமசுந்தரம்.

பாபுராவ் ம்யூல் என்கிற விவசாயி குஜராத்தின் பார்டி நகரில் உள்ள 2.4 ஹெக்டேர் பகுதியில் உள்ள மூன்று குளங்களில் இறால் வளர்க்க FarmMOJO செயலியைக் கடந்த எட்டு மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறார்.

”உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தடுப்பது, அவற்றிற்கு வழங்கப்படும் உணவையும் அதன் வளர்ச்சியையும் கண்காணிப்பது, தண்ணீரின் தரத்தை தீர்மானிப்பது என பல்வேறு பகுதிகளில் இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. ஒப்பீட்டளவில் உற்பத்தி அதிகரித்தது. உயிரினங்களுக்கு வழங்கப்படும் உணவு வீணாவதும் குறைக்கப்பட்டதை கவனித்தேன்,” என்றார்.

செயலி எவ்வாறு செயல்படுகிறது?

நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணையில் நீர்வாழ் உயிரினங்கள் நன்னீர் குளங்களில் உணவளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. பின்னர் முழுமையாக வளர்ச்சியடைந்ததும் அவை சந்தைப்பகுதியில் விற்பனையாகிறது. ஆரோக்கியமான உயிரினங்களை வளர்ப்பதில் உணவு மற்றும் தண்ணீரின் தரம் முக்கியமாகும்.

1
”பிஹெச் அளவு, அமிலத்தன்மை, அமோனியா, நைட்ரேட் அளவு போன்ற பல்வேறு காரணிகள் தண்ணீரின் தரத்தை பாதிக்கிறது. விவசாயிகள் இவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பது கடினமாகிறது. இங்குதான் FarmMOJO உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக்கற்றல் சார்ந்து உருவாக்கப்பட்ட இந்த செயலி தண்ணீரின் ரசாயனக் கலவையை சுட்டிக்காட்டுகிறது. முரண்பாடு இருந்தால் நிலைத்தன்மையை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு இந்தச் செயலி ஒரு ஆலோசகராக செயல்படுகிறது,” என்று ராஜமனோகர் குறிப்பிட்டார்.

நன்னீர் குளங்களில் இருந்து தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வகத்தில் ஒப்படைக்க பண்ணைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினருடன் அக்வா கனெக்ட் இணைந்து செயல்படுகிறது. தண்ணீரை பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகளை உறுதிசெய்ய பயிற்சிபெற்ற 10 ஆய்வாளர்களை அக்வா கனெக்ட் நியமித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் விவசாயிகள் தெரிந்துகொள்வதற்காக FarmMOJO செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

1

அதுமட்டுமல்லாது இந்தச் செயலி சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் நோய்களை கணிக்கிறது.

”நான் இதற்கு முன்பு வளர்த்த சில இறால்கள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே இறந்துபோயின. எனினும் நான் FarmMOJO செயலியைப் பயன்படுத்தத் துவங்கிய பிறகு இத்தகைய சூழலைத் தவிர்க்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை என்னால் எடுக்க முடிந்தது. இறாலின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இறால் வளர்க்கப்படும் பகுதி, அளவு, இறாலுக்கு கொடுக்கப்பவும் தீவன வகை போன்ற விவரங்களை வழங்கவேண்டும்,” என அருள் விவரித்தார்.

FarmMOJO செயலி ஒரு விவசாயிக்கு ஒரு குளத்திற்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இது நான்கு மாதங்களுக்கான தொகையாகும். இது இறால் வளர்ப்பின் மொத்த செலவில் வெறும் 0.2 முதல் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும்.

Aqua Connect துவக்கம்

அக்வா கனெக்ட் தற்செயலாகவே உருவானது என்கிறார் ராஜ் என்றழைக்கப்படும் நிறுவனர் மற்றும் சிஇஓ ராஜ்மனோகர் சோமசுந்தரம்.

1

ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரான ராஜ் Hexolabs, Socialabs ஆகிய இரு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவை நுகர்வோர் மொபைல் மற்றும் இணையம் சார்ந்து செயல்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சிதம்பரத்திற்கு 2016-ம் ஆண்டு பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் உடன் பயணம் செய்த ஒருவர் தொலைபேசியில் விலை குறித்து பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார்.

“விலை என்கிற வார்த்தையை மட்டும் ஆறு, ஏழு முறை பயன்படுத்தினார். ஆனால் எதைப் பற்றி பேசுகிறார் என்பது தெரியவில்லை. பின்னர் அவரிடம் நான் கேட்டபோது அவரது குடும்பத்திற்கு சொந்தமான இறால் தொழிற்சாலை 20 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் விவசாயிகளுக்கு நல்ல விலையில் கிடைப்பது சிக்கல் நிறைந்ததாக இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் குறைவான உற்பத்தி குறித்தும் துறையில் தொழில்நுட்ப தலையீடு இல்லாதது குறித்தும் பேசினார்,” என ராஜ் யுவர் ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

ஓராண்டிற்குப் பிறகு 2017-ம் ஆண்டு உடன் பயணம் செய்த சஞ்சய் குமார், ராஜமனோகர் சோமசுந்தரம், வங்கியாளராக இருந்து தொழில்முனைவராக மாறிய சண்முக சுந்தரம் ஆகியோர் ஒன்றிணைந்து ’அக்வா கனெக்ட்’ அறிமுகப்படுத்தினர்.

1

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கடல்சார் பண்ணை விவசாயிகள் லாபகரமான சந்தைப்பகுதியை அணுகவும் மேம்பட்ட இறால் வளர்ப்பு நடைமுறைகளை அணுகவும் போராடி வருகின்றனர். எனவே இறால்களை இனப்பெருக்கம் செய்யும் குஞ்சு பொரிப்பகம், குளங்களில் அவற்றை வளர்த்தல், உற்பத்தியை விற்பனை செய்தல் என ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியையும் ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக இந்நிறுவனம் துவங்கப்பட்டது.

இதற்கு முன்பு யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் இணை நிறுவனர்கள் முழுமையான பண்ணை கண்காணிப்புத் தீர்வாக செயல்படுவதற்காக அவர்கள் துவங்கிய வலைதளம் குறித்து உரையாடினர். இந்தத் தளம் விவசாயிகள், விற்பனையாளர்கள், உள்ளீடு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றோரையும் ஒன்றிணைக்கிறது.

மீன்கள், இறால், கடல் நண்டுகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும்போது அவற்றின் ஆரோக்கியம் முறையாக நிர்வகிக்கப்படவேண்டும். இதிலுள்ள சவால்களுக்கு தீர்வுகாண உதவும் நோக்கத்துடன் ஆண்ட்ராய்ட் சார்ந்த மொபைல் செயலியான FarmMOJO 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1

20 உறுப்பினர்கள் அடங்கிய இந்நிறுவனம் ஆரம்பத்தில் ப்ரீ சீட் நிதியின் ஒரு பகுதியாகவும் சேவை வாயிலாக ஈட்டப்பட்ட வருவாயையும் கொண்டு 2 கோடி ரூபாய் நிதி உயர்த்தியது. வரும் நாட்களில் வென்சர் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 14 கோடி ரூபாய் நிதி உயர்த்த உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மற்ற விவசாயிகளிடம் நிலையான கடல்சார் பண்ணை விவசாயத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே தற்போது அக்வா கனெக்ட் நோக்கமாகும். வரும் நாட்களில் ஒடிசாவில் விரிவடைய திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியுடன் இந்தோனேஷியாவில் விரிவடையவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில் : ஸ்ரீவித்யா