கிராமப்புற பெண்கள் நிதி சுதந்திரம் பெற பயிற்சி அளிக்கும் கைவினைஞர்!

எம்பிராயிடரி வேலையில் திறன்மிக்க சுக்தி தேவியின் படைப்புகளை முன்னணி டிசைனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
1 CLAP
0

இந்தியப் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் சிந்து மாகாணத்தில் இருந்து வெளியேறி சுதந்திர இந்தியாவிற்கு குடிபெயந்தார்கள். இவர்களில் ஒருவர் சுக்தி தேவி.

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியலாம். ஆனால் ஒருவர் கற்றறிந்த திறனை அவர் வேறொரு கண்டம் சென்றாலும் அவரிடமிருந்து பிரிக்கவே முடியாது. இதற்குச் சரியான உதாரணம் சுக்தி தேவி. இவர் தனது கைவினைக் கலையை மெருகேற்றிக்கொண்டு முன்னணி டிசைனர்களைக் கவர்ந்ததுடன் பல பெண்களுக்கு பயிற்சியளித்து அவர்கள் சுயமாக வேலை செய்து சம்பாதிக்கவும் வழிகாட்டியுள்ளார்.

சுக்தி தேவி ராஜஸ்தானின் தனாவு பகுதியில் குடியேறினார். திருமணம் முடிந்தது. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கிராஃப்ட்ஸ்மேன் வேலையில் இருந்தார். சம்பளம் குறைவு. குடும்பச் செலவை சமாளிக்க முடியவில்லை.

சுக்தி தேவி தம்பதிக்கு நான்கு குழந்தைகள். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதால் அவர்களை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதே இவரது கனவு. ஆனால் வருவாய் போதவில்லை. எனவே சுக்தி தேவி வேலை செய்யத் தீர்மானித்தார்.

“அந்த சமயத்தில்தான் Gramin Vikas Evam Chetna Sansthan (GVCS) தலைவர் ருமா தேவி பற்றி நான் கேள்விப்பட்டேன். அவர் கிராமப்புற பெண்களுக்கு சக்தியளிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. எம்பிராயிடரி பயிற்சிக்காக நானும் இணைந்துகொண்டேன்,” என்றார்.

GVCS 1988-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதை நிறுவியவர் விக்ரம் சிங். 2006-ம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் உள்ள கிராமப்புறப் பெண்கள் நிதிச் சுதந்திரம் பெற்று மேம்பட இந்த அமைப்பு உதவி வருகிறது. சுக்தி திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்துக்கொண்டு ‘மாஸ்டர் ட்ரெயினர்’ ஆனார். அப்போதிருந்து GVCS-ல் 11,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவியுள்ளார்.

வளர்ச்சிப் பயணம்

நிகழ்ச்சிகள்: சுக்தி தேவியின் கைவினைக் கலை பலரைக் கவர்ந்துள்ளது. நாட்டின் முன்னணி டிசைனர்களுடன் பணியாற்றியுள்ளார்.

“சில நிகழ்ச்சிகளில் ரேம்ப்வாக் கூட செய்துள்ளேன்,” என்கிறார் உற்சாகமாக.

’கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. கரம்வீர் பங்கேற்ற எபிசோடில் ருமா தேவி சிறப்பு விருந்துனராக பங்கேற்றிருந்தார். இதில் ருமா தேவிக்கு ஆதரவாக சுக்தி தேவி கலந்துகொண்டுள்ளார்.

அமிதாப் பச்சனை சந்தித்து பேசும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்துள்ளது. இவரது படைப்பாற்றல் திறனையும் மற்ற பெண்களுக்கு பயிற்சியளித்து மேம்படுத்தும் முயற்சியையும் அங்கீகரிக்கும் வகையில் பார்மர் மாவட்ட நிர்வாகம் இவருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பத்திரிக்கை: பல பெண்களுக்கு சிறப்புப் பயிற்சியளித்து வழிகாட்டியதற்காக Patrika செய்தித்தாளின் ஒன்பது எடிஷன்களில் இவர் இடம்பெற்றுள்ளார்.

பயிற்சி பட்டறை: நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட முன்னணி ஃபேஷன் கல்வி நிறுவனங்களில் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்துள்ளார்.

சுக்தி தேவியால் தன்னுடைய தனித்திறனைக் கொண்டு வருவாய் ஈட்ட முடிந்துள்ளது. மற்ற பெண்களுக்கு பயிற்சியளிக்க முடிந்துள்ளது. அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்க முடிந்துள்ளது. ஏராளமான பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடிந்துள்ளது. இந்த அனைத்தையும் அவரது திறன் சாத்தியப்படுத்தியுள்ளது.

”என்னைப் போன்ற பின்னணி கொண்ட பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு சேர்த்திருப்பது மன நிறைவைத் தருகிறது. பெண்களின் சுதந்திரத்தைப் பொருத்தவரை சமூகத்தில் பழங்கால நம்பிக்கைகள் இன்னமும் மக்கள் மனதில் வேரூன்றிக் கிடக்கின்றன. நம் குழந்தைகளுக்கு சிறப்பான வருங்காலத்தை நாம் அமைத்துக் கொடுக்கவேண்டும்,” என்கிறார் சுக்தி தேவி.

அவர் மேலும் கூறும்போது,

“சீன எல்லையில் இருக்கும் மானவ் கிராம மக்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியிருந்தது. இந்த இடத்திற்குப் பயணம் செய்ய எனக்கு 1 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். என் பகுதியைச் சேர்ந்த அனைத்து வயது பெண்களுக்கும் பயிற்சியளித்து வருகிறேன்,” என்கிறார்.

இத்தனை வாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைத்ததில் இவருக்கு மகிழ்ச்சி இல்லாமல் இல்லை. ஆனால் அதைக் காட்டிலும் தன் குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க முடிகிறது என்பதே சுக்தி தேவிக்கு அதிகம் மகிழ்ச்சியளிக்கிறது.

“நான் ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். என் பெரிய மகள் ஹேமலதா சீனியர் டீச்சிங் சர்டிஃபிகேட் முடித்திருக்கிறார். மகன் ஜகதீஷ் இந்தியன் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கிறார். இளைய மகள் துர்காவும் மகன் ரவியும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்துவிட்டார்கள்,” என்று பெருமை பொங்க தெரிவிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world