‘ஆசியாவிலேயே பெரிய விமான நிலையம்' - நொய்டா ஏர்போர்ட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதல் விமான நிலையம்!
2 CLAPS
0

இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களில் பெரியது டெல்லி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள். தற்போது இந்த இரண்டு விமான நிலையங்களை விட மிகப்பெரிய விமான நிலையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநில எல்லைக்குள் அமைந்துள்ள கௌதம் புத்த நகரில் உள்ள ஜேவாரில் அமைய இருக்கும் இதற்கு 'நொய்டா சர்வதேச விமான நிலையம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி முன்னிலையில் இந்த விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி,

ரூ.40,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவிருக்கும் இந்த விமான நிலையம் ஆசியாவிலேயே பெரிய விமானநிலையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு இதன் முதல்கட்டம் கட்டிமுடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நொய்டா, டெல்லி, காசியாபாத், ஆக்ரா, அலிகார், ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்கள் பயன்பெறும் வகையில் இந்த இடம் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் மூலம், ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே இந்திய மாநிலமாக உத்தப்பிரதேசம் திகழும்.

சிறப்பம்சங்கள்!

கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதல் விமான நிலையமாக நொய்டாவில் அமையவிருக்கும் இது இருக்கும். அதற்கேற்ப விமான நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மரங்களைப் பயன்படுத்தி வனப்பூங்கா உருவாக்கப்பட இருக்கிறது.

வனப் பூங்காவில் உள்நாட்டு தாவரவகைகள் நட்டப்பட இருக்கிறது. விமான நிலைய மேம்பாடு முழுவதும் இயற்கை சார்ந்ததாகவே இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப்பணிக்காக மட்டும் ரூ.10,050 கோடி செலவிடப்பட இருக்கிறது. ‘சூரிச்' என்ற நிறுவனம் விமான நிலைய பணிக்காக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வட இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலைய திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. உலகளாவிய தளவாட வரைபடத்தில் மாநிலத்தை நிலைநிறுத்த உதவும். ஒரு இந்திய விமான நிலையம் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட மல்டி மாடல் சரக்கு மையத்துடன் அமைக்கப்படுகிறது என்றால் அது இங்கு தான். சரக்குப் போக்குவரத்திற்கான மொத்த செலவையும் நேரத்தையும் குறைக்க இது உதவும்.

இந்த விமான நிலையத்தின் சரக்கு முனையம் ஆரம்பத்தில் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும் படிப்படியாக 80 லட்சம் மெட்ரிக் டன் கொண்டதாகவும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.

நொய்டா சர்வதேச விமான நிலையம் தரைவழி போக்குவரத்து மையத்தை உருவாக்குகிறது, அதில் மல்டிமாடல் டிரான்ஸிட் ஹப்,மெட்ரோ மற்றும் அதிவேக ரயில் நிலையங்கள், பேருந்து, டாக்ஸி சேவைகள் மற்றும் தனியார் பார்க்கிங் ஆகியவை இடம்பெறும்.

யமுனா எக்ஸ்பிரஸ்வே, கிழக்கு பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வே, வெஸ்டர்ன் பெரிஃபெரல் எக்ஸ்பிரஸ்வே, டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே போன்ற அருகிலுள்ள அனைத்து முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுடன் இந்த விமான நிலையம் இணைக்கப்படும்.

மேலும், ஜெவார் விமான நிலையம் திட்டமிடப்பட்ட டெல்லி-வாரணாசி அதிவேக ரயிலுடன் இணைக்கப்படும். இதன் மூலம் டெல்லி மற்றும் ஜேவார் விமான நிலையத்திற்கு இடையே மக்கள் 21 நிமிடங்களில் பயணிக்க முடியும். நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் நவீன பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) சேவையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.