‘கோவிட் இல்லா கோவளம்' - தடுப்பூசி போட்டால் பிரியாணி, பைக், தங்க காசு பரிசு!

தடுப்பூசி செலுத்தினால் பரிசு!
0 CLAPS
0

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போடும் நபர்களை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 7 கோடி ரூபாய் பண பரிசு முதல் பல்வேறு வகையான பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஓஹியோ மாகாணம் ஆரம்பித்த இந்தத் திட்டத்தை தற்போது அமெரிக்காவின் மற்ற மாகாணங்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இப்போது நியூ மெக்சிகோ மாகாணமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி திட்டத்தை வலியுறுத்தும் வகையில் 5 மில்லியன் லாட்டரி பரிசுத்தொகை திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

இதற்கிடையே, இப்போது அதேபோன்று ஒரு பாணியை தமிழக இளைஞர்கள் குழு ஒன்றும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனை செய்து வருவது சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதி இளைஞர்கள் தான். தங்களது பகுதியை ‘கோவிட் இல்லாத கோவளம்' என்று மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்த பரிசு முறையை அறிவித்துள்ளனர்.

தங்களின் தன்னார்வ அமைப்பு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அனைவருக்கும் பிரியாணி தரப்படுகிறது. மேலும்,

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்க நாணயம், வாஷிங் மிஷின் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என்றும், தடுப்பூசி பற்றிய எதிர்மறை கருத்துக்களை விரட்டவே இதுபோன்ற பரிசு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம் என்றும் அந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களின் முயற்சிக்கு கைமேல் பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பிரியாணி மற்றும் பரிசுப் பொருட்கள் பற்றி அறிவிப்பு கேட்டு அதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதனால், அந்தப் பகுதியில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மேலும், தற்போது கோவளம் பகுதி மக்களே கொரோனா தடுப்பூசிக்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டனர்.

வெளிநாடுகளில் இருப்பது போல் பெரிய அளவு பரிசுப் பொருட்கள் இல்லாவிட்டாலும், தங்களால் முடிந்த அறிவிப்பை வெளியிட்டு, அதனை வெற்றிகரமாக்கி இருக்கும் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தகவல் உதவி: தி ஹிந்து | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world