தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு; அனுமதி, தளர்வுகள், தடைகள் என்ன?

By YS TEAM TAMIL|30th Jul 2020
ஜூலை 31 முடியவுள்ள ஊரடங்கு, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, தளர்வுகளுடனும்‌, ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும்‌ மேலும்‌ நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

இந்தியா முழுவதும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாட்டில்‌ 31.7.2020 வரை ஊரடங்கு உத்தரவு இருந்து வருகிறது. பொது மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்‌ நோக்கத்திலும்‌, பெருநகர சென்னை காவல்துறையின்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ பிற பகுதிகளில், ஜூலை 31ம் தேதி முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.


இருப்பினும்‌, பொது மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்‌ நோக்கத்திலும்‌, பெருநகர சென்னை காவல்துறையின்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ பிற பகுதிகளில்‌ பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன்‌ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

tamilnadu lockdown

கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, தளர்வுகளுடனும்‌, 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும்‌ மேலும்‌ நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும்‌, ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்‌ (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும்‌ இன்றி, தமிழ்நாடு முழுவதும்‌ முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌.

பெருநகர சென்னை காவல்‌ துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில்‌ (Except Containment Zones) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன்‌ கீழ்க்காணும்‌ பணிகளுக்கும்‌ 1.6.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது:


 • தற்போது 50% பணியாளர்களுடன்‌ செயல்படும்‌ அனைத்து தொழில்‌ நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி நிறுவனங்கள்‌, 75% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.


 • உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்க்‌ கடைகளுக்கென அரசால்‌ ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து காலை 6 மணி முதல்‌ இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌, அவை இயக்கப்படக்‌ கூடாது. உணவகங்களில்‌ முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.


 • ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோவில்கள்‌, அதாவது 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோவில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்காக்களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மட்டும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படும்‌. பெரிய வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌, பொது மக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்பட மாட்டாது.


 • காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, தற்போது இக்கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.


 • ஏற்கனவே காலை 10 மணி முதல்‌ மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள்‌, தற்போது காலை 10 மணி முதல்‌ மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்‌.


 • அத்தியாவசிய மற்றும்‌ அத்தியாவசியமற்ற பொருட்கள்‌ உட்பட அனைத்து பொருட்களையும்‌, மின்‌ வணிக நிறுவனங்கள்‌ (E-Commerce) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.


பெருநகர சென்னை தவிர, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர மற்ற பகுதிகளில்‌ (Except Containment Zone), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன்‌ கீழ்க்காணும்‌ பணிகளுக்கு 1.8.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது:


 • அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ (Standing Operating Procedure) பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சிப்‌ பகுதிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோவில்கள்‌, அதாவது 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோவில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்காக்களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மட்டும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படும்‌. பெரிய வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌, பொது மக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்பட மாட்டாது.


ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள கீழ்காணும்‌ செயல்பாடுகளுக்கான தடைகள்‌, மறு உத்தரவு வரும்‌ வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌:-


 • மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும்‌ மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து பகுதிகளிலும்‌ உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும்‌ பொதுமக்கள்‌ வழிபாடு.


 • அனைத்து மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌.


 • நீலகிரி மாவட்டத்திற்கும்‌, கொடைக்கானல்‌, ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும்‌, வெளியூர்‌ சுற்றுலாப் பயணிகள்‌ செல்ல தடை தொடரும்‌.


 • தங்கும்‌ வசதியுடன்‌ கூடிய ஹோட்டல்கள்‌, ரிசார்ட்டுகள்‌, பிற விருந்தோம்பல்‌ சேவைகளுக்கு தடை தொடரும்‌. எனினும்‌, மருத்துவத்‌ துறை, காவல்‌ துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும்‌ விலக்கு அளிக்கப்படுகிறது.


 • வணிக வளாகங்கள்‌ (Shopping Malls).


 • பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, பயிற்சி நிறுவனங்கள்‌, ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்கள்‌. எனினும்‌, இந்நிறுவனங்கள்‌ இணைய வழிக்‌ கல்வி கற்றல்‌ தொடர்வதுடன்‌, அதனை ஊக்குவிக்கலாம்‌.


 • மத்திய உள்‌துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட பணிகளைத்‌ தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்‌.


 • மெட்ரோ ரயில்‌ / மின்சார ரயில்‌.


 • திரையரங்குகள்‌, உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, நீச்சல்‌ குளங்கள்‌, கேளிக்கைக்‌ கூடங்கள்‌, மதுக்கூடங்கள்‌ (Bar), பெரிய அரங்குகள்‌, கூட்ட அரங்குகள்‌, கடற்கரை, சுற்றுலாத்‌ தலங்கள்‌, உயிரியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்கள்‌.


 • அனைத்து வகையான சமுதாய அரசியல்‌, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்‌, சமய, கல்வி, விழாக்கள்‌, கூட்டங்கள்‌ மற்றும்‌ ஊர்வலங்கள்‌.


 • மாநிலங்களுக்குள்‌ உள்ள பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து போக்குவரத்து மற்றும்‌ மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து போக்குவரத்து.


மேற்கண்ட கட்டுப்பாடுகளில்‌, தொற்றின்‌ தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள்‌ அளிக்கப்படும்‌.


தகவல் உதவி: டிஐபிஆர்