வருஷத்துக்கு 4 முறை ஆபீஸ் வந்தா போதும்: ஆஸ்திரேலிய நிறுவனம் அசத்தல் திட்டம்!

ஊழியர்களை கவரும் ‘டீம் Anywhere' முறை!
0 CLAPS
0

கொரோனா தொற்று உலகை மாறவைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தொழில் நிறுவனங்களின் வாழ்க்கையை. அதிலும் குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த நிறுவனங்கள் போக்கையே மாற்றி வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய சொல்லி, Work From Home பாலிசியை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டன.

கொரோனா முதல் அலையிலேயே இந்த முறை தொடங்கிவிட்டது. தற்போது இரண்டாம் அலையிலும் இது அப்படியே பின்பற்றப்படுகிறது. எனினும் இதெல்லாம் தற்காலிக ஏற்பாடாக தான் இருக்கும் என்றும், சூழ்நிலை சரியான பின் எந்த நேரமும் ஊழியர்கள் மீண்டும் நிறுவனங்களில் வந்து பணிபுரியுமாறு கோரப்படலாம் என்றும் பல நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால், ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு வரும் மென்பொருள் நிறுவனமான Atlassian இதில் விதி விலக்காக மாற்று யோசனையை கையாளத் தொடங்கியுள்ளது. அந்த மாற்று யோசனை; டீம் Anywhere என்று அழைக்கப்படுகிறது.

இந்த முறையில் இனி தங்கள் ஊழியர்கள் ஆண்டுக்கு நான்கு முறை அலுவலகம் வந்தால் போதும் என்பது நிறுவனத்தின் முடிவு. மீத நாட்கள் தங்கள் வீட்டில் இருந்து, தங்களுக்கு விருப்பப்பட்ட இடத்திலிருந்து ஊழியர்கள் பணிபுரியலாம் .

இது தொடர்பாக Atlassian நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஃபர்குவார்,

“டீம் Anywhere என்ற முறையின் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை அலுவலகம் வரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். சிலிக்கான் வேலியில் இருந்து கொண்டு தான் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது எங்களின் எண்ணம். காரணம், முதலில் எங்கள் நிறுவனம் ஒரு சர்வதேச நிறுவனம். அதனால் ஊழியர்களின் திறன் உலகின் எந்த இடத்தில் அவர்கள் இருந்தாலும் வெளிப்படும் என்பதை அப்பட்டமாக நம்புகிறோம்.”

அதனால் உலகின் எந்தபகுதியில் இருந்தும் எங்கள் ஊழியர்கள் பணியாற்றலாம் என்று முடிவுக்கு வந்தோம். இதன்காரணமாக, ஆண்டுக்கு நான்கு முறை மட்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தால் போதும். அதுவும் ஊழியர்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திற்கு வந்தாலே போதும்,” என விரிவாக பேசியிருக்கிறார்.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முறை வெற்றிபெறும் பட்சத்தில், மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்ற வாய்ப்புகள் இருக்கிறது.

Latest

Updates from around the world