ரூ.37 லட்சம் நன்கொடை உதவியால் நெகிழவைத்த கம்மின்ஸ்: மற்ற வீரர்களை சுற்றும் சர்ச்சை!

இந்திய மக்களுக்கு என்னால் முடிந்த பங்களிப்பு.. கொண்டாடப்படும் கம்மின்ஸ்!
5 CLAPS
0

இந்தியாவில் கொரோனா காரணமாக நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாகுறை, மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடுகளால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. இந்தியாவின் நிலையை உணர்ந்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் செயல் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஏலத்தொகை போன வீரர் கம்மின்ஸ் மட்டுமே. ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டும் இதே தொகைக்கு அவர் ரீடெயின் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பபுள் சூழலுக்கு மத்தியில் விளையாடி வரும் அவர், இந்தியாவின் நிலையை உணர்ந்து உதவித் தொகை அனுப்பியுள்ளார். உதவித் தொகை என்றால் ஒன்றோ இரண்டு லட்சங்கள் இல்லை.

50000 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் அதன் மதிப்பு, ரூ.37,36,590. பிரதமர் நிவாரண நிதிக்கு (PM Cares fund) அளித்துள்ள இந்த நிதியை கொண்டு  மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ள கம்மின்ஸ், கூடவே ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார்.

அதில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உடனான எனது அன்பு, இணக்கம் அடைந்து வருகிறது. இந்திய மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். இந்தியாவில் தற்போதுள்ள நிலை கவலைதரக்கூடியதாக அமைந்துள்ளது. இந்திய மக்கள் பெரும்பாலானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி இருக்கிறேன். இதனால் இந்திய மக்களுக்கு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன்.

இந்த நிதியை வைத்து மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள். என்னைப் போன்று என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனதை அறிந்த உலக மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம்.

என்னால் முடிந்தது 50,000 அமெரிக்க டாலர். இது ஒரு தொடக்கம் மட்டுமே. நமது உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து மக்களின் வாழ்வில் ஒளி சேர்ப்போம். என்று உருக்கமாக கூறியிருந்தார்.

கம்மின்ஸ் செயலை பாராட்டிய பலர் நெட்டிசன்கள், சிலர் மற்ற வீரர்களையும் குறிப்பிட்டு உதவி செய்யவில்லை என்கிற ரீதியில் கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை குறிவைத்து பலர் பேசியிருந்தனர். இதற்கு சிலர் எதிர்வினைகளையும் ஆற்றினர்.

நெட்டிசன் ஒருவர், "இந்தியாவின் கேப்டன் விராட் கோலி, இதுபோன்ற நன்கொடைகளை வழங்காததால் மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவதை கேட்க முடிகிறது."

இவர்கள் அனைவரும், கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 2020 மார்ச் மாதத்தில் இதே காரணத்திற்காக அளித்த பங்களிப்பை அவ்வளவு சுலபமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த வருடமே, இருவரும் பிஎம் கேர்-க்கு 3 கோடி நன்கொடை அளித்துள்ளார்கள் . மேலும் முக்கியமாக, வேறு யாராவது செய்ததால் பிரபலங்கள் நன்கொடை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கும் போக்கு அர்த்தமற்றது.

இது நன்கொடை, இது தொண்டு. இதை கொடுக்க விரும்புவோர் அவர்களின் தாராள மனப்பான்மைக்காக ஊக்குவிக்கப்பட்டு பாராட்டப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு நபர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், அவதூறு செய்யக்கூடாது," என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோல் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

Latest

Updates from around the world