இணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்!
எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி தரும் 15 நிமிட புகழோடு முடிந்து போகாமல், மறக்க முடியாத படம் அல்லது நிகழ்வாக மனதை உலுக்குகின்றன. கடந்த வாரம் இணையத்தில் வைரலாக பரவிய 2 வயது சிறுமியின் புகைப்படம் இப்படி தான் உலகின் மனசாட்சியை உலுக்கி, அமெரிக்க குடியுரிமைக் கோரி வருபவர்களை நடத்தும் விதம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வைரல் புகைப்படம் என்னவெல்லாம் செய்யுமோ அவை அனைத்தையும் அந்த புகைப்படம் செய்தது. அதை தாண்டியும் செய்து கொண்டிருக்கிறது.
அந்த படத்தில் ஒரு சிறுமி அழுது கொண்டிருக்கிறாள். சிறுமியின் பின்னே வாகனம் ஒன்றின் பெரிய சக்கரம் தெரிகிறது. சிறுமி அருகே ஒரு பெண்மணியும், ஒரு காவலரும் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் முழு உருவம் தெரியவில்லை. அழுது கொண்டிருக்கும் அந்த சிறுமி அந்த இருவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
சாதாரணமாக பார்த்தாலே இந்த புகைப்படம் ஏதோ செய்துவிடும். இந்த படத்தின் பின்னே உள்ள கதையை தெரிந்து கொண்டு பார்த்தால் நெஞ்சையே உலுக்கிவிடும்.
இந்த புகைப்படம் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் எடுக்கப்பட்டது. பிழைப்புக்காக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடிபெயர முயற்சிக்கின்றனர். இவர்களில் பலர் முறையான அனுமதி இல்லாமலும் அமெரிக்காவுக்குள் நுழைவது உண்டு.
இப்படி அனுமதி இல்லாமல் வருகை தருபவர்களை தடுக்க அமெரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதை அதிபர் டிரம்ப் ஆட்சியில் இத்தகைய நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகி இருக்கின்றன. ஏற்கனவே இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்1பி விசாவுக்கு கெடுபிடி விதித்து மிரள வைத்த டிரம்ப், குடியுரிமை பிரச்சனையில் பூஜ்ஜியம் சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது அனுமதி இல்லாமல் குடியேறுபவர்களை தடுத்து நிறுத்துவதில் அமெரிக்கா இதுவரை இல்லாத தீவிரம் காட்டி வருகிறது. இந்த தீவிரம் பலநேரங்களின் மனிதநேயத்தை தகர்க்கும் வகையில் அமைந்து விடுகிறது.
இத்தகைய ஒரு தருணமாக தான் இணையத்தை உலுக்கிய அந்த சிறுமியின் புகைப்படம் அமைந்தது. ஹாண்டுராஸ் நாட்டைச்சேர்ந்த அந்த சிறுமியும், அவளது இளம் அம்மாவும், கடந்த வாரம் மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவில் நுழைய முற்பட்டனர். இப்படி அனுமதி இல்லாமல் குடியேறுபவர்களை அமெரிக்காவுக்கு ரகசியமாக அழைத்து வரும் ஏஜெண்ட்கள் மூலம் அந்த பெண் தனது மகளுடன் வந்திருந்தார். மேலும் பலரும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் அடைக்கலம் தேடி வந்தவர்கள்.
அப்போது தான் எல்லைப்பகுதியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட தாயிடன் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தாயிடம் சோதனை நடத்தும் போது, சிறுமி கலங்கி அழும் காட்சி தான் புகைப்படமாக பதிவானது.
இந்த புகைப்படம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் எல்லையிலே தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுவதுடன், அவர்களில் குடும்பமாக வருபவர்கள் எனில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தும் நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
அனுமதி பெறாமல் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கலாமா? வேண்டாமா? எனும் வழக்கு நடைபெற்று முடிவு எடுக்கப்படும் வரை பெற்றோர்களும், பிள்ளைகளும் தனித்தனியாக தான் இருக்க வேண்டும்.
இந்த நடைமுறையை உணர்த்தும் வகையில் தான் இந்த புகைப்படம் அமைந்திருந்தது. புகைப்படத்தில் தாய் சோதனையிடப்படும் நிலையில் குழந்தை அழும் காட்சி பதிவாகியிருந்தாலும், இருவரும் பிரிக்கப்பட வாய்ப்பிருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்ததால் இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லையில் தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்படுவது எந்த வகையான குடியுரிமைக்கொள்கையாக அமையும் எனும் கேள்வியை இந்த படம் எழுப்பியது.
இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜான் மூர் எனும் புகைப்படக் கலைஞர். கெட்டி இமேஜஸ் புகைப்பட ஏஜென்சிக்காக பணியாற்றும் மூர், அமெரிக்காவிக்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் பரிதாப நிலையை விடாமல் பின் தொடர்ந்து அவர்களின் அவல நிலையை புகைப்படங்களாக பதிவு செய்து வருபவர். குறிப்பிட்ட தினத்தன்று அவர், மெக்சிகோவில் இருந்து படகில் அடைக்கலம் தேடி வந்தவர்களுடன் பயணம் செய்து, அமெரிக்க சுங்கச்சாடவடியில் அவர்கள் கதைகளை பதிவு செய்ய காத்திருந்தார்.
அப்போது தான், அந்த பெண் சோதனையிடப்பட்டாள், சோதனைக்காக குழந்தையை கீழே இறக்கிவிடுமாறு காவலர் கூற முதலில் தயங்கியவர் பின் வேறு வழியில்லாமல் குழந்தையை இறக்கி விடுகிறார். அவ்வளவு தான் தாயை பிரிந்த, அந்த இரண்டு வயது குழந்தை அழத்துவங்கி விடுகிறது. இந்த உருக வைக்கும் காட்சியை தான் மூர் கிளிக் செய்தார்.
ஆனால், கிளிக் செய்யும் போதே இந்த காட்சி அவரை உலுக்கியதாக பின்னர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஒரு மகளுக்கு தந்தையான அவர் அந்த குழந்தை அழுவது பார்த்து ஓடிச்சென்று அதை சமாதானம் செய்யும் துடிப்பை அடக்கிக் கொண்டு புகைப்படக கலைஞராக தனது கடமையை செய்திருக்கிறார்.
பின்னர் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்து கொண்டார். பார்த்தவர்கள் நெஞ்சை உலுக்கிய இந்த படம் தான் சமூக ஊடக வெளி முழுவதும் பகிரப்பட்டு வைரலாக பரவியது. அதோடு எல்லைப்பகுதியில் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் பிரிக்கும் குடியுரிமை கொள்கையின் மனிதநேயமற்ற தன்மை பற்றி கடுமையான விசாரிக்க வைத்தது.
இந்த படம் இணையம் முழுவதும் பரவி, அமெரிக்க கொள்கை பற்றி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் அந்த குழந்தையை தாயிடம் இருந்து பிரிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர். குழந்தைக்கு 2 வயது தான் ஆவதால், பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்த புகைப்படம் இதற்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனிடயே அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் பத்திரிகை இந்த படத்தை தனது இதழின் அட்டைப்படத்திலும் வெளியிட்டது.
டைம் இதழின் அட்டையில் ஒரு பக்கத்தில் 2 வயது சிறுமி அழுதபடி காட்சி அளிக்க, அருகே அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். அருகாமையில், ’வெல்கம் டு அமெரிக்கா’ எனும் வாசகமும் இடம்பெற்றிருந்தது.
டைம் பத்திரிகையின் அட்டைப்படமும், கட்டுரையும் இந்த விவாதத்தை இன்னும் தீவிரமாக்கியது. சமகாலத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக குடியேற முயற்சிப்பவர்களின் அவல நிலையையையும் இந்த விவாதம் தீவிரமாக்கியது.
இதனிடையே இன்னொரு திருப்பமாக, இந்த படம் மீதே விமர்சனமும் எழுந்துள்ளது. உண்மையில் தாயும் பிள்ளையும் பிரிக்கப்படாத நிலையில், குடியுரிமை கொள்கையால் பெற்றோர்- பிள்ளைகள் பிரிக்கப்படும் பிரச்சனை தொடர்பாக இந்த படத்தை வெளியிடுவது சரியா எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. பத்திரிகை உலக தர்மம் தொடர்பான விவாதமாக இது முன் வைக்கப்படுகிறது.
இந்த கேள்வியும் கூட இந்த படத்தின் உள்ளடக்கத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது என்பதோடு, குடியேறுபவர்களின் நிலை தொடர்பான விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில் இந்த புகைப்படம் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.