பதிப்புகளில்

ஒரு தேர்தலையே முடக்கிய சுற்றுச்சூழல் போராளி புருஷோத்தம் ரெட்டியின் பயணம்!

சுற்றுச் சூழல் ஆர்வலராக மாறிய ஒரு பேராசிரியரின் கதை..!

YS TEAM TAMIL
12th May 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

அது 1996 ஆம் ஆண்டு நிகழ்வு...!

ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக இருந்த போது, அந்த கிராமத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டத்தின் முடிவுதான் பின்னர் நாட்டையே அவர்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. அது என்ன..?

தங்களது கிராமத்திலிருந்து புளோரைட் விஷத்தை எப்படி துரத்தி அடிப்பது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்தான் அது. அதற்கான முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நலகொண்டா மாவட்டத்தின் ஆறு, குளம், குட்டை, கிணறு அனைத்து நீர்நிலைகளிலும் இந்த புளோரைட் அதிகமாக இருந்தது. அந்த தண்ணீரை குடிக்க முடியாது. நாளுக்கு நாள் அது விஷமாக மாறிக் கொண்டிருந்தது. மக்களுக்கு வேறு தண்ணீர் கிடைக்கவும் இல்லாததால், அந்த புளோரைட் நீரையே குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால், நலகொண்டா மாவட்டத்தில் பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புளொரைடுக்கு பலியானார்கள். அவர்களின் பற்கள் மஞ்சளாக மாறிப்போனது. கை, கால் எலும்புகள் பலம் இழந்தது. மூட்டுவலியால் அவர்கள் அவதிப்பட்டனர். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

image


அந்த தண்ணீரால் எலும்பு, வயிறு சம்பந்தப்பட்ட பல நோய்களும் அந்த கிராமத்து மக்களை வாட்டியது. உச்ச கட்டமாக பெண்களும், ஆண்களும் மலட்டுத் தன்மை பாதிப்புக்கும் ஆளானார்கள். விவசாய நிலங்களும் பாழாகிப் போனது. இதனால் ஒரு இனம் புரியாத பயம் அந்த பகுதி மக்களை ஆட்கொண்டது.

அரசிடம் பல முறை இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த வித உதவியும் கிடைக்க வில்லை. மாவட்ட நிர்வாகமோ மவுனமாக இருந்தது. இதனால், ஊனமுற்றவர்கள், நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே சென்றது. அரசு இதனை நன்கு உணர்ந்திருந்தது. சூழ்நிலையை சரி செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும், எந்த முயற்சியும் அரசு நிவாகம் எடுக்கவில்லை.

கிராம மக்கள் பல போராட்டங்களில் குதித்தார்கள். அரசு சற்றும் அசைந்து கொடுக்கவோ, கண்டு கொள்ளவோ இல்லை.

அதனால்தான் அரசுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய போராட்டத்தை தொடங்க முடிவு செய்தார்கள். அதனை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான ஒரு முன்னோட்ட கூட்டம்தான் அந்த கிராமத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உதவ ஒரு பிரமுகரும் வந்திருந்தார்.

கூட்டத்தில் ஒவொருவரும் கருத்தைக் கூறினர். அரசுக்கு எதிராக போராட்டத்தை எப்போது எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனை நடந்தது. இறுதியில் மிகப்பெரிய தர்ணா போரட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் ஒருவர் கூறியது மட்டும் வித்தியாசமாக இருந்தது. அந்த அரசியல் அறிவியல் பட்டதாரியின் பேச்சு வித்தியாசமாகவும், அது மக்களை கவருவதாகவும் இருந்தது.

'நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் வருகிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தேசிய அளவில் நமது பிரச்சனையை எடுத்துச் செல்ல முடியும். அது மட்டுமல்ல நலகொண்டா மாவட்ட விவசாய பிரதிநிதிகளே அந்த தேர்தலில் போட்டியிட வேண்டும், ' 

என்று அவர் சொன்னது அந்த கூட்டத்தை சிந்திக்க வைத்தது. அவர் அறிவுரைப்படி பலர் அந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

540 விவசாயிகள் மனு தாக்கல் செய்ததால் 1996 தேர்தலில் அதிக வேட்ப்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்கிற செய்தி நாடுமுழுதும் பரவியது. அந்த பட்டதாரியின் அறிவுரையால் நாடே அந்தத் தொகுதியை திரும்பிப் பார்த்தது. போராட்டத்துக்கு கிடைக்காத கவனம் இந்த நூதன முடிவால் கைமேல் பலனாக வந்தது. நாடு முழுதும் அந்த பகுதி மக்களின் புளோரைட் விஷ பாதிப்பு குறித்த செய்திகள் பரவியது. அரசின் கவனமும் அப்போதுதான் கிடைத்தது.

500 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்பதையும், கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களை விளைநிலமாக்க வேண்டும் என்பதையும் அப்போதுதான் அரசு உணர்ந்தது. அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டி இட்டதால் தேர்தலை நடத்த முடியாமல் தேர்தல் ஆணையம் திணறியது. அதனால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பல ஆண்டு போராட்டத்துக்கு பின் அந்த பட்டதாரி இளைஞரின் அறிவுரை மக்களுக்கு பலன் தந்தது.

image


மக்கள் பிரச்சனைக்காக ஒரு தேர்தலையே முடக்கிய அந்த ஆலோசனையை வழங்கியவர் வேறு யாருமல்ல அவர்தான் கல்வியாளர், சமூகவியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று பல துறைகளில் சிறந்து விழங்கும் பேராசிரியர் புருஷோத்தம் ரெட்டி.

இந்த புருஷோத்தம் ரெட்டி முன்னின்று நடத்தியது இந்த ஒரு போரட்டம் மட்டுமல்ல. பல போராட்டங்களை வெற்றியும் கண்டிருக்கிறார். ஒவ்வொரு போராட்டத்திலும் இவர் வெறும் ஆலோசகராக மட்டுமல்லாமல் அதில் தன்னை முழுவதுமாக நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டு நடத்தியிருக்கிறார். இப்படி பல மக்கள் கூட்டங்களை அவர் நடத்தி உள்ளார். அதற்கு அந்த அந்த பிரச்சனைகள் குறித்த புரிதலும், அரசியல் அறிவும், அனுபவமும் முக்கியாகக் கைகொடுத்தது.

புருஷோத்தம் ரெட்டி உடனான சிறப்பு சந்திப்பில் அந்த புளோரைடு பாதித்த மக்கள் நடத்திய போராடத்தை அவர் நினைவு கூர்ந்தார். அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவும், தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷனும் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்தார்கள். முதலில் அவர்களுக்கு முன்னாள் யாரும் எதிர்த்து போராட முடியாது, போராடத்தை முறியடித்து விடலாம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், மக்களின் ஜனநாயக போராட்ட சக்திக்கு முன்பாக கடைசியில் தலை குனிந்தார்கள். இருவருமே நலகொண்டா பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

நலகொண்ட மக்கள் அரசியல்வாதிகளிடமும், அரசிடமும் இருந்த நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருந்தனர். அப்போது நான் நாட்டின் கவனத்தை திருப்ப நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமாக போட்டியிடுவது என்று சொன்னவுடன் முதலில் அச்சமடைந்தார்கள். பாரம்பரிய போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு வந்தவர்களுக்கு அது முதலில் புரியவில்லை. ஆனால், வேட்புமனுவுக்காக ஒவ்வொருவரும் எப்படி 500 ரூபாய் கட்டணமாக கட்டுவார்கள் என்று கவலைப்பட்டேன். அவர்களோ மக்களின் போராட்டத்துக்குத் தானே நாங்கள் எப்படிவும் கட்டிவிடுவோம் என்று சொன்னபோதே போரட்டம் வெற்றி பெற்றதாக உணந்தேன். அது புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்தது."

ஒவ்வொரு போராட்டத்தை கையில் எடுக்கும் போதும் அது வெற்றிபெறும் என்கிற நம்பிக்கைதான் மக்களை உலுக்கும் இதுவே ஒவ்வொரு போராட்டத்தையும் வெற்றி பெற வைக்கிறது என்பது புருஷோத்தம் ரெட்டியின் நம்பிக்கை. அப்படித்தான், கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டபட்ட நாகார்ஜூனா அணைத்திட்டம் மிக முக்கியமான நீர்பாசன திட்டம். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த நேரத்தில் அந்த பகுதியில் ஒரு சக்தி திட்டத்தை கொண்டுவர முயற்சித்தார்.

"நான் நேரடியாக அந்த பகுதிக்குச் சென்று நிலவரங்களை, பிரச்சனைகளை ஆய்வு செய்தேன். அணு உலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. முழுதும் தானியங்கி உலைக்கான திட்டப்பணிகளை தொடங்கி இருந்தார்கள். சுற்றுச் சூழலுக்கும், பொது மக்களுக்கும் எதிரானது அந்த திட்டம் என்பதை உணர்ந்து கொண்டோம். முக்கியமான ஒரு நீர்பாசன திட்ட பகுதியில் அணு உலை ஒன்றை ஜெர்மனி நாட்டுடன் சேர்ந்து அங்கு கொண்டுவருவது மக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை மக்களும் அரசுக்கும் உணர்த்த முடிவு செய்து அதனை எதிர்க்கத் தொடங்கினோம். மக்களின் உயிருக்கு ஆபத்தை விழைவிக்கக் கூடிய திட்டம் என்பதால் அதனை எதிர்க்க முடிவு செய்தேன்."

மத்திய அரசு கொண்டுவரும் மிகப்பெரிய திட்டம் இது என்பதால் தனி ஒருவராக அதனை எதிக்க முடியாது என்பதை புருசோத்தம் ரெட்டி உணர்ந்தார். அதற்காக மக்களை திரட்ட முடிவு செய்தார். முதலில் அணுசக்தியின் ஆபத்து குறித்து மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். அதற்காக கிராமம் கிராமமாக நடைபயணம் சென்றார். சிறு சிறு கூட்டங்களை நடத்தினார். நீர்நிலைகள், விவசாய நிலம், காடு, விலங்குகள் என்று அனைத்தும் எப்படி எல்லாம் அந்த திட்டம் வந்தால் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை எடுத்துச் சொன்னார். மக்கள் அதன் ஆபத்து குறித்து யோசிக்கத் தொடங்கினர். பின்னர், அது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறியது. இறுதியாக, அரசு மக்கள் போராட்டத்துக்கு முன்பு அடி பணிய வேண்டிவந்தது. பிரதமர் ராஜீவ் காந்தி நாகார்ஜுனா சாகர் பகுதியில் தொடங்கப்பட்ட அந்த அணு உலை திட்டத்தையே ரத்து செய்து உத்தரவிட்டார்.

image


"போராட்டத்தை தொடங்கிவிட்டால் அதனை திரும்பிப் பார்ப்பதில்லை. அந்த அணு உலைக்கு எதிரான போராடமும் பெரிதானதாக இருந்தது. வெற்றியும் அந்த அளவுக்கு பெரிதாகவே இருந்தது. மற்ற மாநிலங்களில் குறிப்பாக கூடங்குளம், கோட்டா, கைகா போன்ற அணு உலை திட்டங்ளுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பெறவில்லை ஆனால் நாங்கள் அதில் வெற்றி பெற்றோம் " என்றார், ரெட்டி புன்னகையுடன்.

அணு உலைக்கான போராட்டம் எப்படி வெற்றிபெற்றது...? புருஷோத்தம் ரெட்டி விளக்கினார்,

"அணு சக்தியின் ஆபத்தை கிராம மக்களுக்கு எடுத்துச் சொன்னோம். ஏற்பட்டால் சில மணிநேரங்களில் கிராமங்களில் இருந்து அவசர கதியில் மக்களை வெளி ஏற்றுவார்கள். அப்போது கால்நடைகளை எல்லாம் மீட்க நேரம் இருக்காது. நீர்நிலைகள் எல்லாம் பாதிக்கப்படும். பல லட்சம் மக்கள் பாதிக்கப் படுவார்கள். நாகார்ஜுனா சாகர் பணியில் இருப்பவர்கள் நிலைமை என்னாகும்? இதனை எல்லாம் மக்களின் மொழியிலேயே விளக்கினோம். அதன் மூலம்தான் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடிந்தது."

கடந்த ஐந்து சதாப்தங்களாக பேரசிரியர் புருஷோத்தம் ரெட்டி தனது சமூகப் பணியை தொடர்ந்து வருகிறார். குறிப்பாக சுற்றுச்சுழல் தொடர்பான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அரசுடனும் இணைந்து பல பணிகளை செய்துவருகிறார். இவரது சமூக பணிக்கு காரணம் சிறுவயதில் அவரது பெற்றோர்கள் பாதிக்கப்பட்டதுதான்.

1943, பிப்ரவரி 14 தேதி புருஷோத்தம் ரெட்டி ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் ராஜ ரெட்டி-கவுசல்யா தேவி ஆகியோர் பல சமூக பணிகளை செய்துவந்தனர். தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோரிடம் பக்தி செலுத்திய அவர்கள் அதன் மூலமும் பல பணிகளை செய்தனர். 3000 ஏக்கர் நிலத்தை பொது பணிக்கு கொடுத்தனர்.

"பெற்றோரின் பொது வாழ்க்கை, அவர்களின் அன்பார்ந்த செயல்பாடுகள், கருணை பார்வை, வீட்டுச்சூழல் அனைத்தும் எனக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை சமூகத்தில் மட்டுமல்ல எனக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை அப்பா சொன்னார். நிலம் நமக்கு பெரிதாக உதவாது. படிப்பும், நாம் செய்யும் பணிகளும்தான் பலன் தரும் என்று சொன்னார்."

நன்றாக படித்த புருஷோத்தம் ஒஸ்மானிய மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து தேர்வுகளும் எழுதி நல்ல முறையில் வெற்றிபெற்று வந்தார். அப்போதுதான் திடீரென முடிவு எடுத்தார். "மருத்துவம் மிக முக்கியமான நல்ல படிப்புதான். அனால் மக்களுக்கு சேவை செய்வதற்கு மருத்துவம்தான் வேண்டுமா..? அதற்கு பலர் இருக்கிறார்கள். நான் ஏன் பொலிடிகல் சயின்ஸ் எடுத்து படிக்கக் கூடாது என்று முடிவு செய்துதான் பின்னர் பி.ஏ படிப்பில் சேர்ந்தேன்." என்று கல்லூரி காலத்தை விளக்கினார்.

பின்னர், அதே ஓஸ்மானிய பல்கலைகழகத்தில் எம்.ஏ, எம்.பில் முதுகலை பட்டங்களும், சுற்றுச் சூழலில் ஆய்வு செய்து பி.எச்.டி. முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர், அங்கேயே ஆசிரியர் பணியிலும் சேர்ந்து துறை தலைவராக உயர்ந்தார். சிறந்த கல்வியாளராக நாடுமுழுதும் பல பல்கலைகழகங்களுக்கு ஆலோசகராக பணியாற்றிவருகிறார். பல துறைகளும் இவரை பல குழுக்களில் நியமித்துள்ளது. ஒஸ்மானியா பல்கலையில் ஆசிரியர் சங்கத் தலைவராக 1996 முதல் 2002 இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.​

பல ஆண்டுகள் பொலிடிகல் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றியவர் எப்படி சுற்றுச் சூழல் வாதியாக மாறினார்.?

போபால் விஷவாயு கசிவும் அதன் மூலம் பல ஆயிரம் பேர் உயிர் இழந்ததும் ஒரு காரணம். அடுத்தது, அவருடைய சகோதரர் ஒரு இயற்கை விவசாயியாக இருந்தார். அவருடைய நிலத்துக்கு சரூர் நகர் ஏரியில் இருந்துதான் தண்ணீர் வரும். நாளடைவில் தொழில் சாலை கழிவால் ஏரி பாழ்பட்டு விவசாயம் படுத்தது. அந்த கிராமமே அடியோடு விவசாயத்தை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த ஏரியை காப்பாற்றத்தான் முதலில் புருஷோத்தம் ரெட்டி களத்தில் குதித்தார். அவருக்கு உதவ உறவினரான ரேடியாலஜிஸ்டு கோவர்த்தன் ரெட்டியும் முன் வந்தார். அந்த ஏரியை மீட்டதுதான் முதல் வெற்றி.

அப்படி சுற்றுச்சசூழல் ஆர்வலராக உருவெடுத்தவர் ஆந்திராவிலும், இன்றைய தெலுங்கானாவிலும் பல ஏரிகளை மீட்டு எடுத்தனர். அன்று எத்தகைய போராட்ட உணர்வோடு களம் இறங்கினாரோ அதே இளமை உணர்வோடுதான் தமது 73 வது வயதில் இன்றும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

இன்று, இளம் தலைமுறையை சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக மாறுவதற்கான முயற்சியில் பள்ளி, கல்லூரிகள், கிராமங்கள் என்று சுழன்று வருகிறார்.

"எனது நம்பிக்கை எல்லாமே இளம் தலைமுறையிடமே வைத்திருக்கிறேன். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். இரண்டாவது சுதந்திர போராட்டமாக சுற்றுச்சூழலை காப்பதில் இளைஞர்கள் குதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசு படுத்திய தொழில் வளர்ச்சியால் நாடு முன்னேர முடியாது. இதனை அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது. சுற்றுசூழல் மாசு பட்டால் வரட்சிவரும், வெள்ளப்பெருக்கு, காட்டு தீ வரும் இப்படி பல கேடுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று எச்சரிக்கிறார்.

போராட்டங்களை கையில் எடுக்கும் போதும், அதனால் வரும் திடீர் புகழால் பலர் அந்த போராட்டங்களை மறந்து விடுகிறார்கள். அதுவே, அந்த போராட்டத்தை தோல்வி அடைய செய்துவிடுகிறது. அதனை மனதில் கொண்டு இன்றைய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செயல்பட வேண்டும் என்பது புருஷோத்தம் ரெட்டியின் அறிவுரை..!

ஆக்கம்: அர்விந்த் யாதவ் | தமிழில் ஜெனிட்டா

கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

நடன மங்கை மித்தாலி ராஜ் கிரிக்கெட் வீராங்கனையான கதை..!

23 ஆண்டுகளுக்குப் பிறகும் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை!

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags