பதிப்புகளில்

வலிகளிலிருந்து வலிமையானவன் ஆன ஒரு ஹிப்ஹாப் கலைஞனின் வெற்றிப் பயணம்!

Sindhu Sri
4th Mar 2016
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

2012 ஆம் ஆண்டு மலேசியாவிலுள்ள இணைய தொலைக்காட்சி ஒன்றுக்கு அந்த நபர் பேட்டி தருகிறார்…

“இன்னும் ஒரு மணி நேரத்துக்குப் பின் நான் என்ன செய்யப் போறேன்னு எனக்குத் தெரியும், ஆனா ஒரு நாலு வருடம் கழித்து நான் எப்படி இருப்பேன்னு தெரியாது. ஆனா ஒரு நல்ல நிலையில இருப்பேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருக்கு...”

அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை,

தமிழ் ராப் பாடகர்களில் அதிக சம்பளம் பெறும் இலங்கைத் தமிழர் என்ற பெருமையோடு இப்போது கலை உலகை கலக்கிக் கொண்டிருக்கும் அவரது பெயர் ஆர்யன் தினேஷ் கனகரத்னம் செல்லமாக ADK.

'கடல்' படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், 'மகுடி' பாடலில் வன்முறைக்குட்பட்ட இளைஞனின் உணர்வுகளைத் தன் குரலில் கொடுத்தவர்….

மீண்டும் இசைப்புயலின் மெட்டுக்கு, அச்சம் என்பது மடமையடா படத்தில் “தள்ளிப் போகாதே” என்று உருக வைத்தவர்….

எப்படி?… இப்படி?….எங்கிருந்து?…. கற்றாயா?… பெற்றாயா?…. என்று ராப் இசைபோல துள்ளி வந்த பல கேள்விகளோடு தமிழ் யுவர் ஸ்டோரி சார்பில் ADK வை தொடர்பு கொண்டோம்…

image


இலங்கையிலிருந்து… சிங்கப்பூர் வரை….

1981 ஆம் ஆண்டு இலங்கையின் வெலிமட என்னும் பகுதியில் கனகரத்தினம் மற்றும் புவனேஸ்வரி அவர்களுக்கு மகனாய் பிறந்தவர் தான் சேட்டைக்காரப் பிள்ளை தினேஷ். சாதாரண குடும்பத்தில் சகோதரி தர்ஷியுடன் வளர்ந்த ADK விற்கு ஜாஸ்மினுடன் திருமணம் ஆகி அவர் குழந்தை பருவத்தில் இருந்ததை விட டபுள் மடங்கு சுட்டியாக அல் அபியான் ரஷித் எனும் மகன் உண்டு.

தான் பிறந்து வளர்ந்த காலத்தில் இனப்பகையால் ரத்தமும் சகதியுமாய் மாறிக்கொண்டிருந்த அந்தத் தீவு நாட்டில், பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டமுடியவில்லை இவரால்.

image


இலங்கையில் இன யுத்தம் மூர்க்கமானதால் சொந்த மண்ணில் உயிர்வாழ இயலாமல், தாய்நாடு என்ற தொட்டிலைப் பறிகொடுத்துவிட்டு அகதியாய் சென்று, தனது வாழ்வையும் வருங்காலத்தையும் சிங்கப்பூர் மண்ணில் துவங்கியதை நினைவு கூர்கிறார்.

சட்டென பழையை நினைவுகளை விடுத்து தன்னுடைய இசை வளர்ச்சி குறித்த செய்திகளுக்குத் திரும்புகிறார். GOKA PEARU என்ற அவரது ராப் பாடலைப் போல….

அந்தப் பாடலின் தொடக்கத்தில் சில துண்டுக் காட்சிகள் தொகுப்பாய் இசையோடு இயைந்து வரும்…. இலங்கை கொடி, சாலைகள், பேருந்து, ரயில், போலீஸ் என, இதற்கிடையே ஒருவன் தப்பி ஓடுவது, இறுதியாய் பிடிபட்டு வன்முறைக்குள்ளாகுவது என…. சட்டென கருப்பாகி சும்மா பில்டப் மச்சான் என்கிற சொல்லோடு, துள்ளிசையில் தற்கால இளைஞனின் மனநிலையோடு GOKA PEARU பாடல் அதிரவைக்கும்…


அப்படித்தான் சட்டென தனது கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு தாவிவிடுகிறார் ADK.

இசையுலகில் கால்பதித்த ADK

2008 ஆம் ஆண்டு தான் உருவாக்கிய தமிழா… தமிழா… ஆல்பம், தனது நாட்டின் நிலைகுறித்த பார்வைகளையும், அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைக்குறியதாக இருந்தாலும், தனது துள்ளிசையால் மக்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குவதில் இருந்து ஒருநாளும் ஓய மாட்டேன் என உறுதியாக சொல்கிறார் .

இலங்கையில் புகழ்பெற்ற பாப் இசையின் தாக்கமும், மேற்கத்திய நாடுகளில் 70 களில் பரவி மைக்கேல் ஜாக்சன் மூலமாக உச்சத்தை அடைந்த ராப் இசையின் ஈர்ப்பும் தன்னை ஒரு ஹிப்ஹாப் கலைஞனாக மாற்றியது என்கிறார்.

"லத்தீன் அமெரிக்கர்கள் மற்றும், அமெரிக்க ஆப்பிரிக்கர்களால் உருவான ராப் இசை, வழக்கமான இசை மரபுகளை உடைத்துக் கொண்டு, துள்ளிசையாகப் பரிணமித்தது. வலிகளை, வேதனையை, புறக்கணிப்பை, ஆவேசத்தை சொல்வதற்கான வழியாக அவர்கள் உருவாக்கிய அந்த இசைமரபு என்னையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை," என்கிறார் ADK.

அதன் விளைவாய் துள்ளிசையைக் கற்றுக் கொண்டு தனிப்பாடல்களை உருவாக்கிய அவர், 2007 ஆம் ஆண்டு CROSS CULTURE, 2008 ஆம் ஆண்டு 'தமிழா… தமிழா…', 2010 ஆம் ஆண்டு 'SL2SG', 2012 ஆம் ஆண்டு 'ஆர்யன்' ஆகிய ஆல்பங்களை உருவாக்கியதன் வழியாக இசைத்துறையில் கவனிக்கப்படும் நபரானதாகக் கூறுகிறார்.

ஆர்யன் ஆல்பத்தின்' வெற்றி தனது பெயரை ஆர்யன் தினேஷ் கனகரத்தினமாக (ADK) மாற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

திரையிசைக் கலைஞனாக….

இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் இசையில் பாடிய ஆத்திசூடி… ஆத்திசூடி… என்ற பாடல் 2008 ஆம் ஆண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதையும், வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்னத்தாமரை பாடலில் துள்ளிசையில் தானும் பாடியதையும் சுட்டிக்காட்டும் ADK, 2012 இல் ஆர்யன் ஆல்பத்தின் வெற்றியும், இசைப்புயலின் இசையில் தான் பாடிய மகுடி.. மகுடி… பாடல் வெளிவந்ததும் தன்னை புகழ்க் கலைஞனாய் மாற்றியது என்கிறார்.

மறக்க முடியாத இசைப்புயல்…

தன் வாழ்வின் இரண்டு மறக்க முடியாத, மகிழ்ச்சியான நிகழ்வுகள் என்றால், ஒன்று தன் துணைவி ஜாஸ்மினை மணந்த நாள், மற்றொன்று 2011ஆம் ஆண்டு இசைப்புயலிடமிருந்து அழைப்பு வந்த நாள் என்று நெகிழ்கிறார் ADK…

ஹிப்ஹாப் கலைஞர், பின்னணி பாடகர், இசை ஆல்பங்களை உருவாக்குபவர், என்று பல வகைகளில் நான் முன்னணிக்கு வந்திருந்தாலும், இன்னும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் இருக்கிறது. இதுதான் தொடக்கம் என்னுடைய கனவு பன்முகப்பட்டது, இதைவிடப் பெரிது..." என்கிறார் ADK.
image


வலிகளைத் தாண்டி வழியறிந்தேன்…..

"என்னை பெற்றவர்கள், நண்பர்கள் என்று பலரும் என்னை ஊக்குவித்தார்கள், ஆனால் அதைவிட நானே என்னை உன்னால் முடியும் என்று ஒவ்வொரு நொடியும் ஊக்குவித்துக் கொண்டிருந்தேன்."

அலட்சியம், அவமானம், புறக்கணிப்பு, துரோகம், இவை எல்லாத் துறைகளைப் போல இசைத்துறையிலும் உண்டு, அவற்றை வென்று செல்ல என்னை நானே ஊக்குவித்துக் கொண்டதுதான் முக்கியமானது. அதே நேரத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட இசைத்துறை எனது விருப்பமாகவும் இருந்தது.

எந்த இசைப் பின்புலமும் இல்லாமல், ஒரு ஹிப்ஹாப் கலைஞனாய் மாறியது என்பது, ஒரு நாளில் நிகழ்ந்ததில்லை, தொடர்ச்சியான தேடல், பயிற்சி ஆகியவையே இதனைத் தந்தது. என் குரல் வளத்தை பாதுகாப்பதற்காக, என்போன்ற இளைஞர்கள் பலரும் அனுபவிக்கும் பல விதமானவற்றை தவிர்க்க வேண்டி வந்தது. சிலவற்றை நாம் விட்டுக்கொடுத்தால்தான் வேண்டியது நமக்கு கைகூடும். இப்படித்தான் மெல்ல மெல்ல முன்னேறினேன் என்கிறார் ADK.

கடவுளின் படைப்பிற்கு நியாயம்

“ஒரு படைப்பு இருந்தால், அது கடவுளால் படைக்கப்பட்டது” என்கிற சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேற்கோள் தன்னை கவர்ந்தது என்று சொல்லும் ADK , கடவுளின் படைப்பாகிய நாம் அவரது படைப்புக்கு நியாயம் செய்ய வேண்டியது அவசியம். அதுதான் ஒரு கலைஞனாக என்னுடைய லட்சியம் என்கிறார்.

இசையுலகில் தனகென்ன ஒரு தனிவழியை அமைத்து, மாபெரும் விசிறிகளை தன் வசம் ஈர்க்கும் கலைஞராக இருந்தாலும் தனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது! என தன்னடக்கத்துடன் கூறிய ADK , தான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் யுவர்ஸ்டோரி வழியாக தன் நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

“இன்னும் மேலே, இன்னும் மேலே, எதிர்வரும் தடைகளைக் கடந்தேறு,

கண்ணும் கருத்தாய், எண்ணம் செயலாய் உழைத்திடு மேலும் முன்னேறு…”

என்ற அவரது பாணியிலேயே ADK வை வாழ்த்தி விடைபெற்றோம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

சசிகுமார், அமீரை 'செதுக்கினேன்'- நடிகர் ஆரியின் அரிய 'அவதாரம்'

மதியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி: 'சண்டக்காரி' என்னும் ரித்திகா சிங்!

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக