பதிப்புகளில்

என்னது... ஒரு ஆண்டு வரை கெட்டுப் போகாத கரும்பு சாறா...?

கரும்பு சாறை பதப்படுத்தி ஓராண்டு வரை பாதுகாக்க உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள கிராமப்புற கண்டுபிடிப்பாளர்!

YS TEAM TAMIL
1st Sep 2018
Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share

இந்தியாவில் கோடைக்காலம் என்றதுமே கண்ணாடி டம்ளரில் இருக்கும் கரும்பு சாறு நினைவிற்கு வரும். இது குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே சுவைக்கக்கூடியது என்பதால் விரைவிலேயே சந்தையில் இருந்து மறைந்துவிடும். ஆனால் சமீபத்திய புதுமையானது நீங்கள் ஓராண்டு வரை பாட்டிலில் நிரப்பப்பட்ட கரும்பு சாறை குளிர்சாதனப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்க உதவுகிறது.

ராஜ்கோபால் இரப்பா பாடீல் கரும்பு சாறை ரசாயனங்கள் பயன்பாடின்றி 12 மாதங்கள் வரை பதப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், 

“நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமிக்கவும், கரும்பு சாறு பாட்டிலில் உடனடியாக அருந்தும் வகையில் கிடைக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதனால் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் கரும்பு சாறுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமானதாகவும் சுகாதாரத்துடனும் கிடைக்கும்,” என்றார்.
image


53 வயதான ராஜ்கோபால் உணவு பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் சான்றிதழும் பெற்றுள்ளார். கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம், கர்நாடக மாநில சிறு தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் தொழில்துறை ஆலோசகரான இவர் கரும்பு சாறு உற்பத்தியை பரவலாக்கவேண்டும்; ஒழுங்குபடுத்தப்படாத துறையை ஒழுங்குபடுத்தவேண்டும்; ஓராண்டு வரை கெடாமல் இருக்கக்கூடிய ஆர்கானிக் கரும்பு சாறை வழங்கவேண்டும் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது இயந்திரங்களை வாங்கவும் தொழிற்சாலையை அமைக்கவும் முதலீட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தேவை

கரும்பு சாறில் ஏன் கவனம் செலுத்துகிறார் என்பது குறித்து ராஜ்கோபால் பேசுகிறபோது இந்த சாறு மிகவும் பிரபலமானது என்றும் ஆரோக்கியமானது என்றும் குறிப்பிட்டார். கரும்பு சாறுக்கான தேவையும் வாய்ப்பும் இருந்தும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களில் கிடைப்பதில்லை என்பதால் இதையே வணிக வாய்ப்பாக பார்ப்பதாக தெரிவித்தார்.

சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுவதும் தரம் குறைவான கரும்பு சாறுமே பிரச்சனையாக உள்ளது. பெரும்பாலும் தள்ளுவண்டிகளிலும் சாலையோர கடைகளிலுமே கிடைக்கப்படும் இந்த சாறு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இதனால் லெப்டோஸ்பிரோசிஸ், சாகஸ் உள்ளிட்ட நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் உருவாக்கிய தனது தொழில்நுட்பம் பேக்கேஜிங் பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் என்கிறார் ராஜ்கோபால். இந்த தொழில்நுட்பம் தானியங்கி தோலுரிக்கும் அமைப்பு, சேமிப்பு தொட்டி, பதப்படுத்தும் அமைப்பு, ஒரேவிதமான அமைப்பு (சுவை சேர்ப்பதற்காக), தானியங்கி பேக்கேஜிங் பிரிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இயற்கை சுவை ஏஜெண்டுகள், உப்பு, ஆண்டி ஆக்சிடெண்ட் (புதினா, இஞ்சி, எலுமிச்சை போன்ற இயற்கை பொருட்களில் இருந்து) போன்றவை சாறு பாட்டிலில் நிரப்பப்படுவதற்கு முன்பு சேர்க்கப்படும். 

”இதன் முன்வடிவம் FSSAI, பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தால் காப்புரிமை பெற்றுள்ளது. 200 மி.லி பாட்டிலின் விலை 20 ரூபாயாகும். முன்மொழியப்பட்டுள்ள பாட்டிலிங் யூனிட் ஒரு நாளைக்கு 10 டன் வரை தயாரிக்கும்,” என்றார்.

சமூக தாக்கத்தை ஏற்படுத்துதல்

5,000 ஏக்கர் கரும்பு விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ராஜ்கோபாலின் தொழிற்சாலை கர்நாடகாவின் பெல்காமில் உள்ள கானாபூர் டெஹ்சில் என்கிற பகுதியில் உள்ள கேரவாட் கிராமத்தில் அமைந்துள்ளது. 180 விவசாய குடும்பங்களுடன் பணியாற்றி அவர்களை ஊழியர்களாக இல்லாமல் நிறுவனத்தின் சம பங்குதாரர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுடன் பணியாற்ற விரும்புகிறார்.

”இங்கு தொழிற்சாலைகள் இல்லை. அருகாமையில் இருக்கும் தொழிற்சாலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பயிர் அதிகப்படியாக இருப்பினும் இங்குள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் யாரும் பயிரை வாங்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆர்டர் கிடைத்தாலும் தேவையான மூலப்பொருட்களின் அளவுடன் போக்குவரத்து செலவு பொருந்துவதில்லை. எனவே அவர்கள் லாபம் ஈட்டுவதில்லை,” என்றார்.

ராஜ்கோபால் சட்ட விதிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன்படி ஒரு ஏக்கருக்கு 30 டன் உற்பத்தியை தனக்கு வழங்கக்கூடிய 180 விவசாயிகளும் நிறுவனத்தில் சமமான பங்குதாரர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். கரும்பு சக்கை உரமாக்கப்பட்டு ஆர்கானிக் உரமாக பயன்படுத்தப்படுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

image


முன்மொழியப்பட்ட உற்பத்தி தொழிற்சாலை 10 கிமீ சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் பணிபுரியும் என்பதால் மூலப்பொருட்கள் அவர்களது சொந்த போக்குவரத்து வசதி வாயிலாகவே ஏற்பாடு செய்யப்படும். இது பொருளாதார ரீதியில் லாபமளிக்கும். வீட்டில் இருப்பவர்களே விவசாயிகளுக்கு உதவலாம் என்பதால் அறுவடைக்கான செலவும் இருக்காது என ராஜ்கோபால் விவரித்தார்.

”தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 2,700 ரூபாய் வழங்குகிறது. ஆனால் எங்களது விலை ஒரு டன்னுக்கு 3,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், போக்குவரத்து, செயல்பாடுகள், உற்பத்தி ஆகியவை தொடர்பான செலவுகள் குறைக்கப்படுவதே இந்த வித்தியாசயத்திற்குக் காரணம்,” என விவரித்தார்.

ராஜ்கோபால் 1996-ம் ஆண்டு முதல் சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவரது லாப நோக்கமற்ற முயற்சியான ப்ரேர்னா (Prerna) வாயிலாக ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 200 கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கி திறன் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அரசு முயற்சிகளையும் திட்டங்களையும் ஒன்றிணைத்து கிராமவாசிகள் எம்பிராய்டரி, மெழுகு உற்பத்தி, தையல், உள்ளூர் உணவுப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை சார்ந்து சிறு வணிகங்களைத் துவங்க பயிற்சியளித்துள்ளார்.

ராஜ்கோபால் ’அக்ரிகல்சுரல் க்ராண்ட் சேலன்ஞ், 2017’ என்கிற இந்திய அரசின் முயற்சியுடன் இணைந்துள்ளார். இவரது புதுமை ஐஐடி-கல்கத்தா ஏற்பாடு செய்த ’டாப் 3,000 ஸ்டார்ட் அப்கள்’ இந்திய பிரிவு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வருங்காலத் திட்டம்

ராஜ்கோபாலின் திட்டம் FSSAI ஒப்புதல் பெற்றிருந்தாலும் நிதி சார்ந்த சிக்கல்களை சந்திக்கிறார். நகர்புறங்களிலும் மெட்ரோ நகரங்களிலும் உள்ள விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு எளிதாக நிதியுதவி கிடைப்பதாக இவர் கருதுகிறார்.

2017-ம் ஆண்டு 17-க்கும் அதிகமான டீல்கள் மூலம் விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் 53 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் சேமிப்பு, விநியோக சங்கிலி, தரமான விதை கொள்முதல், உற்பத்தி அதிகரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதுமைகளை புகுத்தும் சில ஸ்டார்ட் அப்கள் நிதியுதவி பெற்றுள்ளது.

ராஜ்கோபால் போன்றே பல தொழில்முனைவோர் இந்தியாவில் கரும்பு சாறு பிரிவில் செயல்பட்டு வருவாய் ஈட்ட முயன்றனர். ஆனால் யாரும் வெற்றியடையவில்லை. பெங்களூருவில் உள்ள ’கேன் க்ரஷ்’ போன்ற சில நிறுவனங்கள் தனிப்பட்ட சிறு கரும்பு கடைகளை அமைத்துள்ளது. இங்கு க்ரஷ்ஷர்களில் கரும்புகள் செலுத்தப்பட்டு வெவ்வேறு சுவைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவர்கள் ஒரு லிட்டர் சாறு அளவை பேக் செய்தும் வழங்குகின்றனர். ஆனால் அவை சில மணி நேரங்களுக்குள்ளாகவே பயன்படுத்தப்பட வேண்டும். CaneXpress நிறுவனமும் இதே போன்று செயல்படுகிறது. Ray Pressery நிறுவனமும் கோல்ட் ப்ரெஸ்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 250 மி.லி பாட்டில்களில் கரும்பு சாறை விற்பனை செய்கிறது.

ஆனால் தனது புதிய தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் கரும்பு சாறு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என ராஜ்கோபால் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“நான் இதுவரை தனிப்பட்ட முறையில் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளேன். என்னுடைய தொழிற்சாலையை அமைப்பதற்கும் இயந்திரங்களுக்கும் 70 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அனைவரும் விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்கவே விரும்புகின்றனர். விவசாயத்திலோ அல்லது இந்தியாவின் கிராமப்புறங்களிலோ முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக