பதிப்புகளில்

மார்கெட்டிங் அனுபவத்தில் தொழில் தொடங்கி இன்று சர்வதேச அளவில் கால் பதிக்க இருக்கும் Sandwich Square நிறுவனர்!

மார்கெடிங் பணியில் வாழ்வை தொடங்கி, Sandwich Square நிறுவி தமிழகம் முழுதும் 42 கடைகள் அமைத்து, அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் என்று விரிவாக்கம் செய்ய உள்ள நிறுவனர் முஹமத் தன்வீர்.

18th Nov 2017
Add to
Shares
3.4k
Comments
Share This
Add to
Shares
3.4k
Comments
Share

மார்கெட்டிங் அனுபவம் தன்னை எப்படி ஒரு நிறுவனர் ஆக்கியது என்று தன் பயணத்தை நம்முடன் பகிர்கிறார் Sandwich Square நிறுவனர் முஹமத் தன்வீர். தற்பொழுது சென்னையில் அதிக இடங்களில் பரவி இருக்கும் Sandwich Square கடையை நம்மில் பலர் கண்டிருப்போம். ஒரு சின்ன வண்டி கடை இவ்வளவு வளர்ந்ததற்கு பல சறுக்கல்களும், முயற்சிகளுமே காரணம் என நம்முடன் பேசுகிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர்.

2002-2005ல் பிபிஏ பட்டபடிப்பு படித்துக்கொண்டு இருக்கும் பொழுதே மார்கெடிங் வேலையை தொடங்கியுள்ளார் இவர்.

Sandwich Square நிறுவனர் 

Sandwich Square நிறுவனர் 


“நான் கல்லூரியில் இணையும் முன்னே என் தந்தையின் நண்பரின் சிறிய நிறுவனத்தில் பில் வசூல் வேலையில் சேர்ந்தேன். அது சென்னையை சுற்றவும், இவ்வூரை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் எனக்கு அளித்தது,” என்கிறார்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு, ஒரு வங்கியில் கிரெடிட் கார்ட் விளமபரம் செய்யும் பணியில் பார்ட் டைம் ஆக சேர்ந்துள்ளார். அங்கிருந்து தன்வீரின் மார்கெடிங் பயணம் தொடங்கியது.

“அனைவருக்கும் பல சறுக்கல்கள் இருக்கும். அதே போல் அந்த காலம் கிரெடிட் கார்டின் ஆரம்பம் என்பதால் என்னுடைய முதல் மார்கெட்டிங் வேலையில் என்னால் நிலைத்து நிற்க முடியவில்லை,” 

என தன் முதல் தோல்வியை நினைவு கூறுகிறார் தன்வீர். ஆனால் அதோடு அவர் நின்று விடாமல் மீண்டும் கல்லூரியில் படிக்கும் பொழுதே பல மார்கெட்டிங் பணியில் இணைந்து வேலையை கற்றுக்கொண்டார். கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னே மார்கெட்டிங் தான் தனக்கேற்ற தொழில் என முடிவு செய்து பட்டபடிப்பு முடிந்தவுடன் தெஹல்கா வார பத்திரிக்கையில் சேல்ஸ் எக்ஸ்சிக்யுடிவ் ஆக சேர்ந்தார்.

ஊடகம் என்றால் பெருமை தான், தன் நண்பர்கள் முன் சிறப்பாக தெரிவதற்காக ரூ.6,500 சம்பளத்திற்கு இந்த வேலையில் இணைந்துள்ளார். ஆனால் அதுவே தன் தொழில்முனைவர் பயணத்திற்கு முதல் படியாக அமையும் என தன்வீர் உணர்ந்திருக்க மாட்டார்.

“வீடுவீடாக சென்று வார இதழை விளம்பரம் செய்வேன். எல்லாரும் 20-30 கடைக்கு சென்றால் நான் பிரபலமான 8-10 கடைக்குச் செல்வேன். மற்றவர்கள் ஒரு போஸ்டர் ஒட்டும் இடத்தில் நான் 10-15 ஒட்டி விளம்பரம் செய்வேன்,”

என தன் ஆரம்ப கால பயணத்தை விவரிக்கிறார். அதன் பின் பல முன்னணி செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களில் பணிபுரிந்து விட்டு 2014-ல் முன்னணி லைப்ஸ்டைல் இதழின் மார்கெடிங் ஜெனரல் மேனேஜர் ஆனார் தன்வீர்.

அனுபவங்களும் சறுக்கல்களும்:

“மார்கெட்டிங் என் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நான் பார்க்கும் அனைவரையும் வாடிக்கையாளராக மாற்றும் பழக்கம் எனக்கு தொத்திகொண்டது,” என்கிறார்.

கல்லூரி படிக்கும் பொழுதே தொழில்முனைப்பு மீது ஒரு ஆர்வம் இருந்தது என்கிறார். 2014-ல் தன் நண்பர்களுடன் இணைந்து DTH-இன் வருங்கால் தொழில்நுட்பமான ஜெயின் ஹிட்ஸ் என்னும் சேவையை தொடங்கியுள்ளார்.

image


இந்த சேவை டிஜிட்டல்மையம் ஆனால் நிச்சயம் லட்சக் கணக்கில் லாபம் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயின் ஹிட்ஸ் டெல்லியை சேர்ந்தது என்பதால் தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க முடியவில்லை அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது, தன் சேமிப்பு முழுவதும் இதில் முடிந்து விட்டது என தன் தொழில்முனைவுப் பயணத்தை விவரிக்கிறார்.

“ஆனால் இந்த சறுக்கல் எனக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது. மூன்றாம் தரப்பினரின் தயாரிப்பை சார்ந்து தொழில் தொடங்கக் கூடாது என்பது எனக்கு புரிந்தது.”

வெற்றி பாதையை திறந்த அனுபவங்கள்:

நஷ்டத்திலும் ஒரு படிப்பினை உள்ளது என நம்பிக்கையுடன் பேசுகிறார் இவர்.

“என் மனைவி, மற்றும் சுற்றி உள்ள அனைவரும் எனக்கு தொழில் சரிபட்டு வராது எனக் கூறினர். ஆனால் ஒரு தயாரிப்பை, ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் என நான் உறுதியாக இருந்தேன், இதற்கு மேலும் மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்ய எனக்கு உடன் பாடு இல்லை.” 

தனி தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்த சமயத்தில் தான், தன் சிறு வயது நண்பரின் உறவினரான ஷேக்கிற்கு அறிமுகமானார் தன்வீர்.

“ஷேக் சென்னை டிடிகே சாலையில் சான்ட்விச் செய்து நூற்றுக்கணக்கானோருக்கு விற்றுக்கொண்டு இருந்தார். இதை ஒரு பிராண்டாக மாற்றுங்கள் என நான் சொன்னபோது என்னை கேலியாக எடுத்துக்கொண்டார்.”

சான்ட்விச்சின் சுவையும் நன்றாக இருந்தது மேலும் அவரது கடைக்கு பல வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்தனர், எதோ ஒரு தாளில் சான்ட்விச்சை கொடுப்பதற்கு பதிலாக பிரான்ட் பெயர் போட்டு டப்பாவில் கொடுக்கலாம் என்றார் தன்வீர், ஆனால் ஷேக் மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

image


Sandwich Square தொடக்கம்:

ஷேக் பல முறை மறுத்தப்போதும், முயற்சியை கைவிடாமல் தன் நண்பருடன் சென்று அவரை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார் தன்வீர்.

“கஃபே அமிகோஸ் என ஒரு கடையை நான் ஸ்பென்சரில் திறக்க உள்ளேன். நீங்கள் இணைய வேண்டும், உங்கள் கடையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நான் அதில் குறுக்கே வர மாட்டேன்,”

என அவருக்கு உறுதி அளித்து சம்மதிக்க செய்துள்ளார். முதலில் ஷேக் இது சாத்தியம் இல்லை என்று மறுத்தாலும், ஷேக், அவரது சகோதரர், தன்வீர், அவரது நண்பர் நசர் என நான்கு நிருவனர்களுடன்; ஒரு வருடத்திற்கு 10 கடைக்கு மேல திறக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தொடங்கினர்.

இந்த கடையை நிறுவிய பிறகு வரேஷ் என்பவருக்கு அறிமுகமானார் தன்வீர், 

“ஒவ்வொரு பிராண்ட் மற்றும் லோகோவிற்கும் ஒரு கதை உண்டு. நம் லோகோ நம் தொழிலை பிரதிபலிக்க வேண்டும் என வரேஷ் மூலம் புரிந்து கொண்டேன்” என்கிறார்.

அதன் பிறகு கபே அமிகோஸ் என்ற பெயரை எடுத்துவிட்டு பல யோசனைகளுக்கு பிறகு Sandwich Square பெயரை முடிவு செய்தனர். பெயருக்கு ஏற்றார் போல் லோகோ டிசைன் செய்து, ஒரு தனி பிராண்டாக தங்களை அறிமுகப் படுத்திகொண்டனர் இக்குழுவினர்.

Sandwich Square வளர்ச்சி

பெயர் மாற்றம் செய்த பிறகு பிராண்டை வளர்க்கும் முயற்சியாக புது கடையை ஆரம்பிக்க முடிவு செய்தனர். ஆனால் மொத்த பணத்தையும் முதலீடு செய்ததால் தன்வீர் இடம் போதிய முதலீடு இல்லை.

“போதிய பணம் இல்லாதபோது என் நண்பர் மற்றும் என் துணை நிறுவனர் ஷேக் உதவி செய்தனர். அதன் மூலமே என் முதல் Sandwich Square கடையை நவம்பர் 2014-ல் நிறுவினேன்.”

கடை ஆரம்பித்து ஒரு மாதத்தில் உறவினர் மற்றும் நண்பர்கள் உதவியோடு நான்கு பிரான்சைஸ் Sandwich Square உருவானது என்கிறார் தன்வீர்.

“எந்த மாதிரியான பிரான்சைஸ் விதிகள் விதிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிய வில்லை. ஆனால் சான்ட்விச்க்குள் இருக்கும் அனைத்தும் நாங்கள் சமைத்து விநியோகம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை மட்டும் இருந்தது.”

ஏற்கனவே இருக்கும் பல பிரான்சைஸ் விதிகளை தன்வீர் பார்த்துள்ளார் ஆனால் அவை யாவும் Sandwich Square-க்கு ஏற்றதாக அமையவில்லை. அனைத்து உணவகங்களும் பிரான்சைஸ் கடையில் தாங்களே சமைத்து கொள்ளும்படி இருந்தது. ஆனால் இவர்கள் புதுசு என்பதால் அவர்கள் கையில் ரெசிபியை கொடுக்க விரும்பவில்லை.

“ஆனால் ஆரம்பத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது. எந்த ப்ரிசெர்வடிவ் மற்றும் செயற்கை பொருட்கள் சேர்க்காமல் செய்ததால் முதல் சில காலம் சிரமப் பட்டோம்.”

பல முயற்சிகளுக்கு பிறகு யுக்தியை அறிந்து தங்கள் தனித்துவமான உட்பொருட்களை மட்டும் வழங்கி ஒவ்வொரு கடையில் சமைத்துக் கொள்ளும் முறையை கொண்டுவந்தனர். ஒரு வருடத்திற்குள் 15 கடைகள் உருவானது.

அதன் பின் தன்வீர் திரும்பி பார்க்க வில்லை. இன்னும் தன் நிறுவனத்தை வளர்க்க பல வகையான சான்ட்விச்களை முயற்சி செய்து தற்பொழுது 250-க்கும் மேலான சான்ட்விச் வகைகளை தயாரிக்கிறார்.

“சான்ட்விச் இந்திய உணவு இல்லை என்றாலும், முடிந்த வரை அதில் நம் பாரம்பரியத்தை இணைக்கிறோம். பொட்டாசியம் இல்லாத பிரட்டும், இந்திய மசாலாக்களை கொண்டே தயாரிக்கிறோம்.”

காக்ரா சான்ட்விச், ஐஸ் க்ரீம் சான்ட்விச், பிரௌனி சான்ட்விச் என பல புதுமைகளை இணைத்துள்ளனர்.

பிரான்சைஸ் அமைப்பு:

முதலீட்டாளர்களுக்கு இவர்கள் பிரான்சைஸ் தருவதில்லை. கடையில் முழுநேரம் இருக்கும் முதலாளிகளுக்கு மட்டுமே பிரான்சைஸ் வழங்குகின்றனர்.

“இது உணவு சமந்தப்பட்டது என்பதால் முழு கவனிப்பு தேவை. சிறு தவறு நடந்தால் கூட சம்பாதித்த பெயர் பாழாகிவிடும். அம்பத்தூர் பிரான்சைஸ் இரு நண்பர்களால் நடத்தப்படுகிறது. அவர்களே முழுநேரம் பார்த்துக்கொள்கின்றனர்.”
image


இது போன்ற நிறுவனர்களையே இவர்கள் வரவேற்கின்றனர். இவர்களின் பிரான்சைஸ் முதலீடு 5-15 லட்ச ரூபாய் வரை உள்ளது. குறைந்த பட்சம் ஒரு சான்ட்விச்சின் விலை 25 ஆகும்.

“தற்பொழுது எங்களிடம் பிரான்சைஸ் பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் ஐடி வேலையை விட்டுவிட்டு நிறுவனர்கள் ஆக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் தான்” என்கிறார்.

தற்பொழுது சென்னை, திருச்சி, கோவை மற்றும் விஜயவாடாவில் மொத்தம் 42 கடைகள் உள்ளது. அரபு நாடுகள், மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து விருப்பம் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் Sandwich Square உலகளவில் கால் பதிக்க உள்ளது.

“சென்னையில் நடைபெற்ற பாஹுபலி இசை வெளியிட்டு விழாவிற்கு 2000 சான்ட்விச் ஆர்டர் கிடைத்தது. எங்களுக்கு கிடைத்த மிக பெரிய ஆர்டர் இது. கடினமாக இருந்தது ஆனால் வெற்றிகரமாக செய்தோம்,” என்கிறார்

சென்னையில் பெரிய ஆர்டர்கள் செய்யக் கூடிய ஒரே நிறுவனம் நாங்கள் என்று எங்களுக்கு அப்பொழுது புரிந்தது என்கிறார். 2020-க்குள் 100 கடைகளை திறக்க வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்துள்ளார் இந்த துடிப்பான தொழில்முனைவர்.  

Add to
Shares
3.4k
Comments
Share This
Add to
Shares
3.4k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக