பதிப்புகளில்

’யுவர்ஸ்டோரி தமிழ்நாடு’: சிறந்த தொழில் தலைவர்கள் மாநாடு கோலாகலமாக நடந்து முடிந்தது!

4th Aug 2018
Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share

தமிழக தொழில் முனைவர்களை கொண்டாடும் ‘சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை’ மையப்படுத்திய யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்ட விழா சென்னையில் நடந்து முடிந்தது. விழாவின் தலைமை விருந்தினர் அமைச்சர் மாஃபா திரு. கே. பாண்டியராஜன், ‘யுவர்ஸ்டோரி தமிழ்நாடு கதைகள்’ விழாவை குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தார்.

image


நிகழ்ச்சியை துவக்கி வரவேற்பு உரை ஆற்றிய யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களான தைரோகேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. வேலுமணி, பாரத் மேட்ரிமோனி நிர்வாக இயக்குநர் திரு ஜே. முருகவேல், நேச்சுரல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. சி. கே. குமரவேல், ஸ்ரீராம் ப்ராபர்ட்டீஸ் நிர்வாக இயக்குநர் மலையப்பன் முரளி, Zoho சீஃப் இவன்ஜலிஸ்ட் கே. குப்புலஷ்மி ஆகியோரை வரவேற்றார். 

தொழில்முனைவர்களை மட்டுமே மையமாகக் கொண்டு வெளிவரும் ஆன்லைன் தளமான யுவர்ஸ்டோரி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுப்பெறும் இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டில் தங்கள் சிரகை விரித்து, இங்குள்ள தொழில் சூழ்நிலை, பரம்பரை தொழில்கள் வளர்ந்த கதைகள், புதிய தொழில் முனைவர்களின் பயணம் என அனைத்தையும் பிரத்யேகமாக எழுதப்போவதாக அறிவித்தார். 

அவரை தொடர்ந்து பேசிய தைரோகேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. வேலுமணி,

“தென்னிந்தியாவில் தமிழகம் மிகவும் சக்திவாய்ந்த இடம்; தமிழக தொழில்முனைவர்கள் தயங்காமல் துணிந்து சுயதொழிலில் ஈடுபடவேண்டும். தென்னிந்தியாவோடு நிறுத்திக்கொள்ளாமல் தேசிய அளவில் இலக்கை வைத்துகொள்ள வேண்டும்,” என்றார்.

மேலும் பேசிய அவர் தொழில் முனைவர்களின் முக்கிய நோக்கம் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார். வேலை வாய்ப்பை ஏற்படுத்தாத தொழில் ஒரு குற்றமாக எண்ணப்படும் எனக்கூறி வருங்கால தொழில்முனைவர்களை ஊக்கப்படுத்தினார் டாக்டர்.வேலுமணி.

”ஆபத்துகளை துணிந்து எதிர்கொள்வது முக்கியம். நம்மைச் சுற்றி ஊக்கம் நிறைந்த எண்ணற்ற கதைகள் உள்ளன. இவை முறையாக எடுத்துரைக்கப்பட்டால் நேர்மறை சக்தியை அளிக்கும். கிராமங்கள் சக்தி வாய்ந்த பகுதிகளாகும். தொழில்முனைவோர் பலர் இங்கு உள்ளனர். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளைக் கண்டறியுங்கள்,” என்றார்.

இவரது பேச்சு, கூடி இருந்த நானூறுக்கும் மேற்பட்ட தொழில்முனைவர்களை வெகுவாக கவர்ந்தது. அவரை தொடர்ந்து பேசிய பாரத் மேட்ரிமோனி நிர்வாக இயக்குநர் ஜே.முருகவேல் தனது தொழில் பயணத்தையும் அவர் கடந்து வந்த சவால்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

“நான் தற்காலிகமாகவே தொழில்முனைவில் காலடி வைத்தேன். ஆனால் புதிய ஐடியா, யுக்தி, மற்றும் சரியான சந்தை வாய்ப்பை பயன்படுத்தியதால், மேட்ரிமோனி.காம் இன்று இந்தியா மட்டுமின்றி உலகளவில் பரந்து விரிந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது,” என்றார்.

“இன்றைய தொழில் முனைவர்கள் புதுயுகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள்,” என தன் பேச்சை துவங்கினார் அடுத்து பேசிய நேச்சுரல்ஸ் நிர்வாக இயக்குநர் சி. கே.குமரவேல்.

“நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் வரம்புகளைத் தாண்டிய இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். ஒரு வெற்றியை கண்டவுடன் நின்றுவிடாமல் அடுத்தக்கட்ட இலக்கை வைத்துக்கொண்டு முன்னேறுங்கள்,” என்றார்.

மேலும் ஒருவர் ஒரு முயற்சியை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தால் அந்த முயற்சியை மேற்கொள்ளவேண்டாம் என்கிற கருத்து உங்கள் மீது திணிக்கப்படும். அதை ஏற்றுக்கொண்டு உங்களது எல்லையை வகுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் போக்குக்கு ஏற்றப்படி உங்கள் இலக்கை நகர்த்திச் செல்லுங்கள். பணத்தை மட்டும் பார்க்காமல் வெற்றியை கண்டு நகருங்கள் என்றார்.

image


விழாவின் சிறப்பு விருந்தினரான அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன், தமிழக தொழில் முனைப்பின் சிறப்பை பற்றி விரிவாக பேசினார். கொல்கத்தாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சங்கு வளையல்கள் ராமேஸ்வரத்தில் தயாரிக்கப்பட்டு அனுப்படுவது எத்தைனைப் பேருக்கு தெரியும் என்று தொடங்கி தமிழகத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

“என்னை பொறுத்தவரை தமிழக தொழில் துறை தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகியவை கலந்த ஒரு தொகுப்பு,” என்றார்.

பாரம்பரிய தொழில்களை பல வருடங்களாக செய்துவரும் பல தமிழக தொழில்முனைவர்கள் வெளியே தங்களை பெரிதாக தெரியப்படுத்திக் கொள்வதில்லை. எனவே யுவர்ஸ்டோரி போன்ற ஊடகம், இவர்களின் கதைகளை உலகளவில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார் அமைச்சர். 

ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிர்வாக இயக்குநர் மலையப்பன் முரளி பேசுகையில் தான் புதுக்கோட்டை அருகே சிறிய கிராமப்புறத்தை சேர்ந்தவர் என்றும் தனது குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என்றார். 21 வயதில் பணி வாழ்க்கையைத் துவங்க சென்னை வந்தபோது, 1974-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனரை சந்தித்த பின், 1997-ம் ஆண்டு சிறியளவில் ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் துவங்கியதாக கூறினார் முரளி.

”நான் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவர். அப்போது எனக்கு ஆங்கில மொழியில் சரியாக பேசக்கூட வராது. இருப்பினும் மெல்ல எல்லா சவால்களையும் தாண்டி, இன்று இந்நிறுவனம் ப்ரைவேட் ஈக்விட்டி சார்ந்து செயல்படுகிறது. சமீபத்தில் 4,000 கோடி ரூபாய் நிதி உயர்த்தி, இன்று ஸ்ரீராம் குழுமம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாகும்,” என்றார்.

இறுதியாக பேசிய , Zoho சீஃப் இவன்ஜலிஸ்ட் கே. குப்புலஷ்மி Zoho நிறுவனர் சார்பில் அந்நிறுவனத்தின் தொழில் பயணத்தை பகிர்ந்தார். தொழில்நுட்பம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என தெரிவித்தார்.

“தொழில்நுட்பத்தில் மனித பயன்பாடு தொழில்நுட்பத்தையும் தாண்டி முக்கியமான ஒன்று. Zoho இந்த கருத்தை முன்னிலைப்படுத்தியே 21 ஆண்டுகளாக வெற்றியுடன் பயணித்து வருகிறது,” என்றார்.

குப்புலஷ்மி பேச்சை தொடர்ந்து ஷ்ரத்தா ஷர்மா தலைமையில் கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

‘சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை’ மையப்படுத்திய யுவர் ஸ்டோரியின் முதல் சென்னை மாநாட்டில் 500க்கும் மேலான பார்வையாளர்கள் கலந்துக்கொண்டது விழாவை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

கட்டுரையாளர்கள்: மஹ்மூதா நௌஷின் மற்றும் ஸ்ரீவித்யா

Add to
Shares
57
Comments
Share This
Add to
Shares
57
Comments
Share
Report an issue
Authors

Related Tags