பதிப்புகளில்

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பாலின வேறுபாட்டை சமன்படுத்தும் முயற்சிகள்!

YS TEAM TAMIL
10th Mar 2016
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

கடந்த சில வருடங்களாக இந்திய தொழில்நுட்பத் துறையில் பாலின வேறுபாடுதான் முக்கிய தலைப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்தத் துறையில் பணிபுரிபவர்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். பெண்களில் பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தேர்ந்தெடுப்பதில்லை. இந்த நிலை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கவலை அளிக்கிறது. தொழில்நுட்பத் துறையில் உலகளவில் பாலின வேறுபாடு சராசரியாக 31 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்திய தொழில்நுட்பத் துறையில் 21 சதவீதமாக காணப்படுகிறது. இந்தத் துறையில் வெவ்வேறு பொறுப்புகளில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் இல்லாததற்கு அவர்களின் திறமைகள் முடக்கப்படுவதுதான் காரணம் என்று பல நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகிறது. மேலும் பெண்கள் தோழில்நுட்பத் துறையை தேர்ந்தெடுக்காததற்கு சமூகம் சார்ந்த கலாச்சாரங்கள் காரணமாக விளங்குகிறது. 

image


பெண் பல வேடங்களை ஏற்கிறாள். ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையில் சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் தாக்கம் ஏற்படுவது பெரும்பாலும் அவள் தாயாகும்போதுதான். பெண்களின் பங்கு குறைவதற்குக் காரணம் பல பெண்கள் மகப்பேறு விடுப்பு முடிந்ததும் குடும்பத்தின் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கணவரின் பணியிடமாற்றமும் பெண்களுக்கு தடையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் வேலையை தொடராவிட்டாலும் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாதிருப்பதால் அவர்களின் வாழ்க்கைப்பாதை முடங்கிப்போவது குறித்த பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. ஆனால் பெண்களின் அதீத ஆர்வமும் விருப்பமும்தான் அவர்கள் பணியைத் தொடர உந்துசக்தியாக இருக்கவேண்டுமே ஒழிய பணமல்ல. அறிவுத்திறன் மிக்க, திறமைவாய்ந்த, அனுபவமிக்க ஒரு ஊழியர் திடீரென்று வேலையை விட்டு விலகுவது நிறுவனத்தின் பார்வையில் ஒரு பெரும் இழப்பாகும். அது ஆண் ஊழியராகட்டும் பெண் ஊழியராகட்டும். இரண்டும் ஒன்றுதான். ஏனென்றால், நிறுவனம் இருபாலருக்கும் பயிற்சியளிப்பதற்கு முதலீடு செய்கிறதல்லவா? அதனால் பெண்கள் ஆர்வத்துடன் பணிபுரிய தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் அவர்களுக்கு உகந்த சூழலை அமைத்துத்தரவேண்டியது அவசியமாகும்.

துறையில் சிறந்துவிளங்குபவர்களை அறிமுகப்படுத்துதல்

பெண்கள் தொழிநுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த மற்ற பெண்களை சந்திக்கவும் ஒருங்கிணைக்கவும், சில பிரத்யேகமான பெண்களுக்கான நிகழ்வுகளும் கான்ஃபிரன்ஸ்களும் வழிவகுக்கிறது. இந்த நிகழ்வுகளில் பெண்கள் தங்கள் பணியிடத்தையும் குடும்பத்தையும் சமன்படுத்திய விதத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் மற்ற பெண்கள் தங்கள் வாழ்க்கைப்பாதையை முடக்காமல் முன்னேற ஊக்குவிக்கப்படுகிறார்கள். க்ரேஸ் ஹாப்பர் செலெப்ரேஷன் (GHC) என்பது அவ்வாறான ஒரு முயற்சியாகும். இது பெண் தொழில்நுட்பவியலாளர்களை ஒருங்கிணைக்கிறது. GHC கான்பிரன்ஸ் கம்ப்யூட்டிங் குறித்த ஆராய்ச்சியும் அந்த தொழில் சார்ந்த வாழ்க்கையில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. 

அதே துறையில் சாதித்த பெண்களின் வழிகாட்டுதலும் ஆர்வம் மிகுந்த வார்த்தைகளும் பெண்களை துறையில் இணைவதற்கு ஊக்குவிக்கிறது. அதே போல் 'க்ளோபல் டெக் வுமன்' மற்றும் 'வுமன் ஹூ கோட்' போன்றவை அவ்வப்போது கான்ஃபிரன்ஸ் ஏற்பாடுசெய்கிறது. இது தொழில்நுட்பத் துறைக்கு அதிக பெண் ஊழியர்களை கவரும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரத்யேகமான பெண்களுக்கான ஹாக்கதான்கள், டெக்டாக்ஸ், கான்டெஸ்ட் போன்றவை மூலம் புதுமையும் ஆராய்ச்சிகளும் புகுத்தப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறைக்கும் அவர்களின் பங்களிப்பை நிறுவனங்கள் அங்கீகரிப்பதன் மூலம் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வாழ்க்கை பாதைகளில் பெண்கள் இணைய ஊக்குவிக்கப்படுவார்கள். இவ்வாறு உந்தப்பட்டு அதீத ஆர்வத்துடன் துறையில் சேர்ந்து சாதனைப்படைக்கும் பெண்கள்தான் நாளைய தலைமுறையினர் துறையில் இணைவதற்கு வழிகாட்டியாவார்கள்.

பெண்களுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் பயிற்சிகள்

நிறுவனங்கள் பெண்களின் மகப்பேறுக்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாணத் தொடங்கிவிட்டது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெண்களின் மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தியது. அது மட்டுமல்லாமல் கூடுதலாக நான்கு மாதங்கள் வரை தளர்த்தப்பட்ட வேலை நேரங்களையும் அறிவித்துள்ளது. இது போன்ற சலுகைகளை அளிக்க மேலும் சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பெண்கள் குடும்பப் பொறுப்புகளை சுமப்பதோடு தங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையையும் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்பதே இது போன்ற சலுகைகள் அளிக்கப்படுவதன் நோக்கமாகும்.

அதேபோல் VMware நிறுவனம் மற்ற சலுகைகளுடன் தங்கள் பெண் ஊழியர்களுக்கு 150 சதவீத ரெஃபரல் போனஸும் அளிக்கிறது. இது மேலும் பல பெண் ஊழியர்களை பரிந்துரைக்கச் செய்யும். மேலும் நிறுவனத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும் வெளிப்படும். இதுபோன்ற சலுகைகள் அளிப்பதுடன் பெண் ஊழியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் நிறுவனங்கள் வழிசெய்யவேண்டும். பல பெண் ஊழியர்கள் ஓய்விற்குப்பின் பணியைத் தொடர முயல்வார்கள். ஆனால் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை ஒரு வருடத்திற்குப்பின் பணிக்குத் திரும்புபவர்கள்கூட மற்ற ஊழியர்களை மிஞ்சும் விதத்தில் பணிபுரிவார்கள். டாடா குரூப் 'செகன்ட் கேரியர் இன்டென்ர்ன்ஷிப் ப்ரொக்ராமை' தொடங்கியுள்ளனர். இதில் கலந்துகொள்ள பெண்களுக்கு குறைந்தது இரண்டு வருட முன் அனுபவம் இருந்தால் போதும். ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை பணியில் இடைவெளி விட்டவர்கள் கூட இதில் கலந்துகொள்ளலாம். சிறந்த திறமைசாலிகள் திரும்ப தொழில்நுட்பத்துறையில் இணைவதற்கு இந்த ப்ரொக்ராம் வழிவகுக்கும்.

தன்னுணர்வற்ற பாரபட்சத்தை முறியடித்தல்

பெண்கள் சந்திக்கும் பாரபட்சம் அவர்கள் மனதில் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் தொழில்நுட்பத் துறையை விட்டு விலகுகிறார்கள். தன்னுணர்வற்ற பாரபட்சம் என்பது ஒரு விஷயத்தை தீர்மானிக்கும் மனிதனின் இயல்பை காட்டுகிறது. உதாரணத்திற்கு ஒரு டீம் லீடர் குழுவை மதிப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த டீமில் இருக்கும் ஆண் ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்வார்கள். பெண் ஊழியர்கள் வேலை நேரம் முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள். டீம் லீடர் மதிப்பிடும்போது ஆண் ஊழியர்கள்தான் ப்ராஜெக்டில் அதிக அக்கறை எடுத்து உழைத்தார்கள் என்று குறிப்பிடுவார். ஆனால் உண்மையில் பெண்கள்தான் ஆண்களைவிட அதிகமாக ப்ராஜெக்டில் பங்களித்திருப்பார்கள். நிறுவனங்கள் இதுபோன்ற தடைகளை அகற்ற முற்பட்டுள்ளன. மேலும் அணிகளை பலப்படுத்த பல விஷயங்களை வெளிப்படையாக்கியுள்ளது. Pinterest நிறுவனம் பாலின வேறுபாட்டைச் சமநிலைக்குக் கொண்டுவருவதை 2016-ன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தன்னுணர்வற்ற பாரபட்சத்தை முறியடிக்க ஒவ்வொரு ஊழியருக்கும் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள உள்ளது.

இளம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

இந்தியாவில் மாஸ்டர்கார்ட், கேர்ல்ஸ்4டெக் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிடில் ஸ்கூல் மாணவிகளிடம் அறிவியல் மற்றும் கணிதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். டெல் இந்தியா அதன் ப்ரொக்ராமிற்கு “IT ஜீக்ஸுக்கு மட்டுமல்ல” என்று பொருத்தமாகப் பெயரிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மாணவிகளிடம் உரையாடுவார்கள். ஊழியர்கள் தாங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தது குறித்தும் அதிலுள்ள வாய்ப்புகள் குறித்தும் இளம் மாணவிகளுக்கு எடுத்துரைக்கிறார்கள். இது நீண்டகால திட்டமாக இருப்பினும், பல மாணவிகள் மேற்படிப்பிற்கு தகவல் தொழில்நுட்பத்துறையை தேர்ந்தெடுக்க உதவும். மேலும் அவர்கள் பணிபுரியத் தொடங்கும்போது பாலின வேறுபாட்டைச் சமநிலைக்குக் கொண்டுவருவார்கள். இதனால் எதிர்காலத்தில் பெண்களின் திறமைகள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படும்.

பணியிடத்தையும் குடும்பத்தையும் சமநிலைக்குக் கொண்டுவருவதற்கும், துறையில் அவர்களுக்கான வாய்ப்புக்கள் குறித்து அறிவதற்கும் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களை வழிநடத்தவேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் திறமை வாய்ந்த பெண் ஊழியர்களை தக்கவைப்பதுடன் மற்ற பெண்களை ஆர்வத்துடன் துறையில் சேர்வதற்கும் வாய்ப்பளிக்கும். பணியிடத்தில் பாலின வேறுபாட்டையும் சமன்படுத்தும்.

ஆக்கம் : ஷ்வேதா லக்ஷ்மன் ராவ் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெண்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக அமைத்துக் கொள்வது எப்படி?

இந்தியப் பெண்களுக்கான கார்ப்பரேட் ஆடை முறை!

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக