பதிப்புகளில்

பாலிவுட் டூ பாலாடைக்கட்டி: மன்சூர் கனவை நனவாக்கிய குன்னூர்!

13th Oct 2015
Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share

தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியில் உள்ள சிறு நகரமான குன்னூர்தான் இப்போது இவரது வாழ்க்கையை ஜொலிக்க வைக்கும் பொன்னூர். 'கயாமத் சே கயாமத் தக்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, தனது உறவினரும் சூப்பர் ஸ்டாருமான அமீர் கானை பாலிவுட்டில் கவனம் ஈர்க்கச் செய்த இயக்குநர் மன்சூர் அலிகான் தான் இவர். திரை நட்சத்திர வெளிச்சத்தில் இருந்து விலகி, விவசாயத்தில் ஈடுபாடு காட்டிய இவரது முடிவு சற்றே வியப்புக்க்குரியதுதான். பாலிவுட் இயக்குநராக சினிமா வாழ்க்கையைத் துறந்த இவர், தன்னிடம் எஞ்சியிருந்த பணத்தையும் சேமிப்பையும் கொண்டு இங்கே சொந்தமாக நிலம் வாங்கினார். ஏழு பசுக்களையும் இரண்டு ஆடுகளையும் வாங்கினார். அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சிலர் சொல்லலாம்; இது சுதந்திரமான வாழ்க்கை என்றும் சிலர் கூறலாம். ஆனால், இப்படி ஒரு பசுமை சூழ்ந்த வாழ்க்கையைத்தான் மன்சூர் வாழவேண்டும் என்று எப்போதும் விரும்பினார்.

image


நம்ப முடியாத நேர்மையான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தன் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட சோகம் தாளாத சூழலுடன், திரைப்படத் துறை மீதும் போதுமான பிடிப்பு இல்லை. அத்தகைய நிலையில்தான் குன்னூர் வந்தடைந்தார் மன்சூர். மும்பையில் இருந்து கிளம்புவதற்கு, தன் மனைவியையும் பிள்ளைகளையும் ஓராண்டுக்குள் சம்மதிக்கவைத்தார். இதுதான் இவர் குன்னூரின் மலைப் பிரதேசத்துக்கு பிரவேசித்ததன் பின்னணி. இவர்கள் சீஸ் (பாலாடைக்கட்டி) தயாரிப்பில் இறங்கியது யதேச்சையானதுதான் என்றாலும், கலைத்துவத்துடன் அணுகி, பண்ணை வாழ்க்கையில் ரசனையுடன் தனித்துவம் கண்டனர். இவரது ஹோம்ஸ்டே-யில் ஏழு அறைகள் மட்டுமே விருந்தினர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. எளிமையும் தூய்மையும் அன்றாட வாழ்க்கை மந்திரம். பிடித்ததைச் செய்வதற்கும், செய்வதில் மகிழ்வதற்கும் போதும் என்ற மனம்தான் நிறைவைத் தருகிறது என்கிறார் மன்சூர் கான்.

அண்மையில்தான் மன்சூர் கான் 'தி தேர்டு கர்வ்' (The Third Curve) என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் ஒவ்வொரு மூலைகளுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பினருடனும் கலந்துரையாடி இருக்கிறார். தன்னுடைய இந்தப் புத்தகம் பலரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறார். குறிப்பாக, ஒவ்வொரு மனிதரிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய ஒரு சேதி இவரிடம் இருக்கிறது. 'வரையறையற்ற தேவைகளுடனும் வரையறையுடனான வள ஆதாரங்களுடனும் இந்த பூமியில் நம்மால் தொடர்ந்து வாழ முடியாது' என்பதே அந்த சேதி!

image


சூழலியல் என்பது தார்மிகத் தேர்வு இல்லை என்பதில் தெளிவாக இருக்கும் இவர், மக்களுக்கு வெறுமனே அறிவுரைகள் சொல்ல விரும்பவில்லை. உண்மை நிலையை துல்லியமாகவும் எளிதாகவும் முன்வைக்கிறார். தான் சொல்ல நினைத்தை அனைத்தையும் கிராஃப்ஸ், அட்டவணைகள், கார்ட்டூன்கள் மூலமாகவும் இந்தப் புத்தகத்தில் தெளிவாகப் புரியவைத்திருக்கிறார். எம்ஐடியிலும் கார்னெலிலும் கழித்த நாட்களின் பலனும் எழுத்துகளில் தெரிகிறது. குறிப்பாக, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது ஓர் அறிவுஜீவியுடன் நெருக்கமாக பழகும் அனுபவத்தைப் பெறுவது சாத்தியமே.

சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் பாஹர் தத் குன்னூர் பண்ணையையும், பாலாடைக்கட்டிகள் தயாரிக்கும் விதத்தையும் நேரில் பார்வையிட்டு மன்சூர் கானிடம் நேர்காணல் கண்டார். பாலிவுட் உலகத்தில் இருந்து தன் கனவுகளை நோக்கிப் பயணித்த அனுபவத்தை பகிர்ந்த விதம் நெகிழ்ச்சிக்குரியது. அவரது வழக்கமான நேர்மையான பேச்சும் வசீகரித்தது. அமீர் கானுடன் பணிபுரிந்தது உள்ளிட்ட சினிமா அனுபவங்கள், மன அழுத்த காலத்தைக் கடந்த தருணங்கள் என அனைத்தையும் பகிர்ந்தார். இதோ நமக்கு 'கயாமத் சே கயாமத் தக்' படத்தைத் தந்தவரும், பாலிவுட்டில் இருந்து விலகி அமைதியானச் சூழல் கொண்ட வாழ்க்கையை ஒரு தொழில்முனைவராகவும் எழுத்தாளராகவும் அனுபவித்து வருவதை விவரிக்கிறார் மன்சூர் கான்.

image


பாலாடைக்கட்டிக்காக பாலிவுட்டை துறந்தது ஏன்?

"இதை திடீர் முடிவு என்று சொல்ல மாட்டேன். என்னுடைய பால்ய காலத்தில் இருந்தே மனதில் ஆழமாக கொண்ட விருப்பம்தான் இது. பன்வேல் அருகே எங்களுக்கு நிலம் இருந்தது. அங்கே நானும் என் சகோதரியும் வெறும் கையுடன் மருதாணிச் செடியை நட்டுவைத்தபோதே இயற்கை மீதான ஈடுபாடு தொற்றிக்கொண்டது. நான் வெளிநாடுகளுக்குச் சென்றேன். கார்னெல், எம்.ஐ.டி. எல்லாம் முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அப்போது, நீ ஏன் சினிமா எடுக்கக் கூடாது? என்று அப்பா கேட்டார். நான் விரும்பும் வாழ்க்கையைத் தேர்வு செய்வதற்கு முன் இருந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யவே சினிமாவில் கால் பதித்தேன். கடந்த 1979-ல் இருந்து கார்னெலிலும் எம்ஐடியிலும் படித்தேன். 1980-ல் எம்ஐடி இறுதி ஆண்டை கைவிடுவது என முடிவெடுத்தேன். அப்போது எனக்குப் படகுப் போட்டிகளில் ஆர்வம் அதிகம். அலிபாக் அருகே இருந்த நிலத்தை விமான நிலையத்துக்காக அரசு கையகப்படுத்த முனைந்தது. அப்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் மூலம் நான் மிகவும் பிரபலமானேன்."

பாலிவுட் வெற்றிகள், நகர வாழ்க்கையை கைவிட்டது பற்றி...

"நான் திரைப்படங்கள் எடுத்த காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்காகவும், போர்டிங் பள்ளியில் படிக்கும் என் உறவுப் பையன் இம்ரான் கானை பார்ப்பதற்காகவும் அடிக்கடி குன்னூர் வருவது உண்டு. அப்போதெல்லாம் என் மனதுக்கு இந்த இடம் அமைதியைத் தந்திருக்கிறது. இதுதான் நமக்கான இடம் என்று அன்றே முடிவு செய்தேன். அதன் தொடர்ச்சியாகவே 2003-04 வாக்கில் இங்கே வருவதற்கு ஆயத்தமானேன். எங்களுக்கு குன்னூரில் ஏற்கெனவே ஒரு குடும்ப வீடு இருந்தது. எனினும், இங்கே அதிக நாட்களைக் கழிப்பதற்கான சூழல் நீடித்தது. நான் இங்கு குடிபெயர்ந்தபோது கடனில் இருந்தேன். அத்துடன், பெற்றோரை இழந்த துக்கம் வேறு. என் மனம் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தேன். இத்தகைய காரணங்களால், பாலிவுட்டில் இருந்து எளிதில் விலக முடிந்தது. நான் இங்கு குடிபெயர்ந்ததும் என்னை ஒரு சுதந்திரப் பறவையாகவே என் நண்பர்கள் கருதினர்."

image


"இனி இதுதான்" என இறுதி செய்த தருணம்

"என் மனைவி டீனாவும், என் பிள்ளைகளும் என்னுடன் குன்னூருக்கு குடிபெயர முடிவுசெய்ததுதான் என்னுடைய 'இனி இதுதான்' தருணம் என்பேன். என் கனவுகளுடன் என் குடும்பம் கைகோத்த தருணம் மறக்க முடியாதது. பிறகு, நாங்கள் பாலாடைக்கட்டி தயாரிப்பு குறித்த விவரங்களை இணையதளம் மூலம் சேகரிக்க ஆர்ம்பித்தோம். டீனாவுக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து தேடலில் இறங்கியபோதுதான் பாலாடைக்கட்டி எங்கள் வயிற்றில் பாலைவார்த்தது. பிறகு, தைரியமாக களத்தில் இறங்கினேன். எங்களிடம் வரும் விருந்தினர்களுக்கு பாலாடைக்கட்டி தயாரிப்பைச் சொல்லிக் கொடுத்தோம். குறைந்த முதலீட்டில் நிறைவான பணியாகவே இது மாறியது. எனது ஹோம்ஸ்டே தொடர்பாக எவ்வித விளம்பரமும் தருவதில்லை. எல்லாமே புரிதலின் அடிப்படையில் நடக்கிறது. வாழ்க்கையை, எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தராமல் தரத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்."

image


தி தேர்டு கர்வ் - புத்தகம் பற்றி

"பல வழிகளில் வாழ்க்கைச் சுழல்கிறது. நான் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துக்கொண்டிருந்தபோது எரிசக்தி தொடர்பான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தினேன். அதுபற்றி இன்னும் தீவிரமாக பேச வேண்டும் என்று முடிவு செய்தேன். பல்வேறு இடங்களில் இருந்தும் உரை நிகழ்த்துவதற்கு எனக்கு அழைப்பு வந்தன. அவ்வாறான நிகழ்ச்சிகளில் பேசும்போது, இதையெல்லாம் ஏன் ஒரு புத்தகமாக வெளியிடக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதன்பின், அமீர் கானிடம் பேசியதன் மூலம் பெங்குவினின் சிக்கி சர்க்காரின் அறிமுகம் கிடைத்தது. பிறகு, பலரிடமும் பேசியபோது ஒரு தெளிவு கிடைத்தது. நாம் சில விஷயங்களை எழுத்துகள் மூலம் சொல்ல முற்படும்போது, நாமே ஏன் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. 

ஒருவேளை, நான் பாலிவுட் பற்றி ஒரு பெரிய புத்தகம் எழுதினால், அதற்கு பெரிய தொகை நிரப்பப்பட்ட காசோலை கையில் கிடைப்பது உறுதி. ஆனால், நான் எழுதப்போவதோ மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றி என்பதால், அதை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். 5000 பிரதிகள் அச்சிட்டோம். அவற்றில், சுமார் 3000 பிரதிகளை நானே பல்வேறு பயணங்களின்போது விற்றுத் தீர்த்துவிட்டேன். கார்ப்பரேட் முதல் சாமானியர்கள் வரை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. எத்தனை பேர் தங்களுடன் இந்தப் புத்தகத்தைத் தொடர்புபடுத்திக்கொள்வார்கள் என்பது வியப்புக்குரியதுதான். மக்களுக்கு குற்ற உணர்வு ஏற்படும் என்பதால், சுற்றுச்சூழலை ஒரு தார்மிக பிரச்சனையாகக் கருதச் சொல்ல மாட்டேன். என் புத்தகம் சொல்லும் எளிய சேதி இதுதான்: வரையறையுடனான வள ஆதாரங்களைக் கொண்டு உங்களால் எல்லையற்ற வளர்ச்சியை எப்படி அடைய முடியும்?"

image


உங்கள் வாழ்க்கை, புத்தகம் பற்றி என்ன நினைக்கிறார் அமீர் கான்?

"என்னுடைய எண்ணங்கள் பற்றி அமீருக்கு நன்றாகவே தெரியும்; உங்கள் சேதியை மக்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று என்னை முதலில் கேட்டவரே அவர்தான். நர்மதா இயக்கத்தில் அமீரின் செயல்பாடுகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரை இழுத்தவர்களில் நானும் ஒருவன். பின்னாளில் அவர் விமர்சிக்கப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைத்து வருந்தியது வேறு கதை."

நீங்கள் மீண்டும் சினிமாவுக்குத் திரும்புவது ஏன்?

"எனது புத்தகத்தில் உள்ள விஷயங்களை ஒரு சினிமாவாகக் கொண்டு செல்ல வேண்டிய அவசரத் தேவையை உணர்கிறேன். ஆனால், இது 100 கோடி வசூல் செய்யும் சினிமா ரகம் அல்ல. ஒரு திரைக்கதையாக கட்டமைத்து, முற்றிலும் வேறுபட்ட வடிவில் அணுக முடிவு செய்திருக்கிறேன். இது மிகப் பெரிய சவால்தான். உள்ளுணர்வு சொல்வதை அப்படியே முதலில் எழுத்தில் கொண்டு வரவேண்டும். பின்னர், அதைப் படமாக்கும் பணிகளில் இறங்க வேண்டும்."

| 'தி தேர்டு கர்வ்' புத்தகத்தை வாங்குவது குறித்த விவரங்களை அறிய நாட வேண்டிய வலைதளம் http://mansoorkhan.net |

Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக