பதிப்புகளில்

சமூக மாற்றத்தை விரும்பாத தீய சக்திகள்- தொடரும் தலித் உரிமை போராட்டங்கள்!

YS TEAM TAMIL
14th Aug 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். நாங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான வாரணாசிக்கும், அலகாபாத்திற்கும் இடைப்பட்ட மிர்சபாரில் வாழ்ந்து வந்தோம். எனது தந்தையார் வருமான வரித்துறையில் வேலைபார்த்து வந்தார். ஒவ்வொரு நாள் மாலையும் அவரது அலுவலக உதவியாளர் எங்கள் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாலையும் அவருக்கு தேனீரும், பிஸ்கட்டும் எங்கள் வீட்டில் வழங்கப்பட்டது. கொஞ்சம் பொறுங்கள். அதில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட தேனீர் கோப்பைகள் எங்களை விட வித்தியாசமாக இருந்தது. நாங்கள் கூட சில நேரங்களில் தேனீர் மற்றும் உணவை ஸ்டீல் பாத்திரங்களில் உட்கொள்வது வழக்கம். ஆனால், அவருக்கென தனியாக பீங்கான் பாத்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அவர் அந்த தேனீர் கப்பை பயன்படுத்திய பின்னர் அதனை கழுவி தனியாக வைத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இது ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தது. ஒரு சிறு பையனாக இது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. ஒரு நாள் எனது அம்மாவிடம் இதுகுறித்து ஆர்வமுடன் கேட்டேன்.

image


உத்தரபிரதேசத்தின் கிராமப்புறத்திலிருந்து வந்த எனது அம்மாவுக்கு எழுத, படிக்கத் தெரியாது. அவர், மிகவும் அப்பாவித்தனமாக என்னிடம், “உனக்கு தெரியாது. அந்த நபர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்” என்றார். சிறுவனாக இருந்ததால் அம்மாவின் பதிலை கேட்டு நான் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், நான் வளர்ந்த பின், கல்லூரிப் படிப்புக்காக வெளியே சென்ற பின், எனது அம்மாவின் அப்பாவித்தனமான பதில், ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சமூகத்தில் நிலவி வருகிற, இன்று தீண்டாமை என்றழைக்கப்படும் பழக்கம் தான் என்பதை புரிந்து கொண்டேன். நான் மேலும் ஒன்றை கவனித்தேன். அந்த அலுவலக உதவியாளர், எங்கள் அனைவர் மீதும் பாசத்துடன் இருந்தாலும், நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களை ஒருபோதும் கையால் தொட்டதும் இல்லை. அத்துடன், அவர் பயன்படுத்திய பாத்திரத்தை அவரே தனது கையால் கழுவி வைத்து விடுவார்.

வருடங்கள் கடந்து, நாங்கள் வளர்ந்த பின்னர் எங்கள் நட்பு வட்டம் விரிவடைந்தது. ஆண் மற்றும் பெண் நண்பர்கள் பல தரப்பிலிருந்தும் ஜாதி, மத வித்தியாசமின்றி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரத் துவங்கினர். எங்கள் அம்மாவுக்கு, இப்போது யார் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கண்டறிவதற்கும் நேரமில்லாமல் இருந்தது. எனது நண்பர்களில் ஒருவர் முஸ்லீமும், மற்றொருவர் தலித்தாக இருந்தாலும் கூட அனைத்துமே சுமூகமாகவே சென்றது. எனது அம்மாவிற்கு, இது தெரிந்தாலும் கூட, எந்தவித பிரச்சினையையும் அவர் உருவாக்கவில்லை. அவர் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் நாம் உணர்வது என்ன? அனைத்து வீடுகளிலும் தீண்டாமை கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வரை கடைபிடிக்கப்பட்டது தான். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கூட அமைதியாக இது போன்ற செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுடன், பெரியளவிலான எதிர்ப்பார்பையும் காட்டாமல் இருந்தனர். காலங்கள் கடந்து சமூகம் மாறத் துவங்கியது. முன்னர் தீண்டாமையை கடைப்பிடித்த அதே ஆண்களும், பெண்களும் தாங்கள் கடைபிடித்து வந்த இறுக்கமான சமூக நடவடிக்கைகளை கைவிடத் துவங்கினர்.

எனது அம்மாவும் மாறியிருந்தார். அவர் ஒரு விவேகமற்றவராக இருந்தார். மத சம்பிராதாயங்களில் தீவிரமாக இருந்து வருபவர். பட்டதாரியான எனது தந்தை அரசு ஊழியராக இருந்தவர். தனது பண்பாட்டில் பரந்த எண்ணம் உடையவர். ஆனால், அவர் அம்மாவின் இத்தகைய கடைபிடிப்புகளை ஒரு போதும் கண்டித்ததில்லை. அவர்கள் இருவரும் எனது நண்பர்களின் ஜாதி என்ன என்பதை அறிய ஆவல்பட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் தினமும் காலையில் எழும்பி, குளித்துவிட்டு, பூஜைகள் செய்த பின்னர் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் அவர்களும் விரதம் இருந்து வருகின்றனர். இதிலிருந்து நமக்கு ஏதேனும் படிப்பினைகள் உள்ளனவா? நிச்சயமாக. எனது பெற்றோர் இந்துக்கள். மத நம்பிக்கையுள்ளவர்கள். ஆனால் அவர்கள் வெறியர்கள் அல்ல. அவர்கள், புதிய அறிவொளிக்குத் தகுந்ததாய் தங்களை மாற்றிக் கொண்டனர். நான், எனது தாராள மனப்பான்மையை அதிகளவில் அவர்களுக்கு கடன் கொடுத்தேன் என்று தான் கூற வேண்டும். இருப்பினும், இது போன்ற சமூக பழக்கங்களை சமரசமின்றி பின்தொடர வேண்டும் என அவர்கள் நிர்பந்திப்பார்களோ என்று கூட நான் அச்சப்பட்டிருக்கிறேன்.

கடந்த மாதம், பசு பாதுகாப்பு இயக்கத்தினர் சிலர், தலித் இளைஞர்களை தாக்கும் வீடியோவை நான் பார்த்த போது மிகவும் கவலையடைந்தேன். எனது சிறு வயது நினைவுகள் ஒரு கணம் வந்து சென்றன. பசு பாதுகாப்பு இயக்கத்தினரின் இந்த குற்றச்செயல், தலித் மக்களை மனிதாபிமானத்துடன் கூட நடத்த மறுத்துவிட்டனர் என்றும், ஒரு பக்கச்சார்பாக மாறிவிட்டதாகவும் நான் நம்பும்படி செய்துவிட்டது. அவர்களின் இந்த செயல், பசுவை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் எழுந்ததாக நான் நம்பவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு பசுவை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், சாலையிலும், நெடுஞ்சாலைகளிலும் கவனிப்பாரின்றி இறந்து போகும் பசுக்களை மீட்டு, சிகிச்சையளிக்க அவர்கள் அரசினை வலியுறுத்திருப்பார்கள். மோடி அரசிடம், மாட்டிறைச்சியை இந்தியா முழுவதும் தடை செய்ய கோரிக்கை வைத்திருப்பார்கள். மோடி தலைமையில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் பிடித்திருப்பதை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆனால், ஏற்றுமதியை கண்டித்து எந்த முணுமுணுப்பும் இந்த பசு பாதுகாவலர்களிடமிருந்து வரவில்லை.

இந்த பின்னணியில் தான், ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் தலித்களுக்கு எதிரான தீண்டாமை கொடுமை தான் இது, என்பதே நிதர்சனமான உண்மை. தலித்கள் நமது சமூகத்தில் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிமைகள் எப்போதுமே மறுக்கப்பட்டு வந்தது. அவர்கள் பல சூழல்களில் விலக்கி வைக்கப்பட்டு வந்தனர். அவர்கள் ஒரு போதும் சமமாக நடத்தப்படவில்லை. இது சமீப காலங்கள் வரை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்த அடிமை முறைக்கு ஒப்பானது. ஒரே வித்தியாசம் என்னவெனில், தீண்டாமையை கடைபிடிப்பவர்கள், அதனை மதநம்பிக்கையின் அடிப்படையில் செய்து வருகின்றனர். கடந்த ஜென்மத்தில் தவறுகள் செய்ததனால், அவர்கள் நிகழ் ஜென்மத்தில் துன்பங்களை அனுபவிப்பராக பிறந்துள்ளார் என்றும், நிகழ் ஜென்மத்தில் நல்லது செய்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் தலைவிதி மாறிவிடும் என்ற கர்ம விதியை இரு தரப்பினரும் நம்பி வாழ்கின்றனர். அடுத்த ஜென்மத்தில் அவர்கள் பிராமணராக பிறக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிகழ் ஜென்மத்தில் அவர்களுக்கு வேறு வழியே இல்லை, நரக வாழ்க்கையை அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்துவமின்மையையும், தீண்டாமையையும் ஒழித்துள்ளது. சட்டத்தின் படி அனைவரும் சமம். அது போன்றே சட்டத்தின் முன் அனைவரையும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். உயர்ஜாதியில் இருப்பவருக்கு என்ன உரிமையுள்ளதோ, அதே உரிமை தான் தலித்களுக்கும் சட்டத்தின்படி உள்ளது. ஆனால், சமூகம் இன்னும் சாதிய ரீதியாக பிளவுபட்டே உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிய மனநிலையை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. ஆனால், அரசியல் சட்ட சமத்துவ உரிமை தலித்களுக்கு புரட்சிகரமான உத்வேகத்தை அளித்தது. அவர்கள் இன்னும் உறுதியுடன், தங்கள் சமூக உரிமையை கேட்பதுடன், அரசியல் சட்டம் அளித்துள்ள மனித உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலைமை உயர்ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து உருவாகும் முரண்பாடுகள், பிரச்சினைகளாக உருவெடுத்து வருகிறது. இது போன்ற வெறிச்செயல்கள், தலித்களுக்கு ஒர் பாடம் புகட்டி, ஜாதி அடுக்குமுறையின் வரலாற்றில் அவர்கள் இடத்தை நினைவுப்படுத்தவே திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. சமூகத்தின், கரும்பக்கங்களை உணர்த்தி, தலித்களை அடிபணிய வைக்கும் முயற்சியாகவே இத்தகைய செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பின்பற்றப்படும் மத நம்பிக்கைகளுக்கு எனது பெற்றோரும் ஆட்பட்டிருந்தனர். உண்மையை அவர்கள் எதிர்கொண்டவுடன், தங்களை திருத்தி, தனிப்பட்ட முறையில் மாற்றிக் கொண்டனர். நவீனத்துடன் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள், இரு கைகளையும் கொண்டு அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், தலித் விரோதிகள், அந்த வழக்கத்தை இன்னமும் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதனாக நடத்த மறுக்கும் மனிதத்தன்மையற்ற செயல்களை பாதுகாக்கிறார்கள். மாற்றத்தை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் நவீனமயமாக்கலின் எதிரிகள். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரான போராட்டத்தை தலித்கள் தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிக்கிறது. இந்த சமூக கொடுமைகளைக் கண்டு பயந்து ஒதுங்கி போகாமல், அதை எதிர்த்து போராடுவதில் தலித்கள் ஒன்றிணைந்து செயல்படுவடுவது, அவர்களுக்கான உரிமையை சமூகத்தில் அடைய நிச்சயம் உதவும். 

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags