பதிப்புகளில்

'லேடி கலாம்' ஆக மாணவர்களை அறிவியலை நோக்கி நாசா வரை அழைத்துச் செல்லும் ஸ்ரீமதி கேசன்!

YS TEAM TAMIL
30th Jun 2016
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

"ஒரு பெண்ணாக பிறந்தால், படிப்பது, வேலைக்குச் செல்வது, திருமணம் செய்து கொள்வது, தாயாகி, தலைவியாகி குடும்பத்தைப் பார்த்து கொள்ளவது; இது இந்திய பெண்களின் சாராசரி வாழ்க்கை. இதைத் தாண்டி நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்? வெறும் "ஜன கண மண" என்று தேசிய கீதத்தைப் பாடினால் மட்டும் நம் கடமை முடிந்து விடாது. நாம் இறந்த பின்னும் நாம் செய்த பணி, மற்றவர்களுக்கும் பயனளித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்று ஒவ்வொரு பெண்ணும், அவர்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறி செல்ல வேண்டும்" என்று ஊக்கத்துடன் கூறினார். அதைக்கூறிய பெண்மணி யார்?

குழந்தைகளின் கனவு மெய்ப்பட, நம் நாடு அறிவியல் ஆராய்ச்சியில் செழிக்க, தனி ஆளாய் தன்னால் முடிந்த உதவியை செய்து வருபவர், டாக்டர்.ஸ்ரீமதி கேசன். இதுவரை தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி, கேரளா முதலிய மாநிலங்களில் இருந்து 1500 மாணவர்களை நாசா விண்வெளி மையத்திற்கு கல்வி பயணமாய் அழைத்துச் சென்றிருக்கிறார். இவருடைய சுவாரஸ்யமான கதை இதோ!

ஆல் ரவுண்டராக இருந்த ஸ்ரீமதி கேசன்

திருமதி. ஸ்ரீமதி கேசன்

திருமதி. ஸ்ரீமதி கேசன்


தமிழ்நாடு பூர்வீகமானாலும், தன் தந்தையின் வேலை காரணமாக, ஆந்திராவிலுள்ள ஹைதராபாத்தில் ஸ்ரீமதியின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளி, கல்லூரி காலங்களில், ஆடல், பாடல், படிப்பு, விவாதம், விளையாட்டு என ஒரு ஆல் ரவுண்டராக இருந்திருக்கிறார். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்று உள்ளார். தேசிய மாணவர் படையில் முழு ஆர்வத்துடன் ஈடுப்பட்டுள்ளார்.

சீனியர் அண்டர் ஆபீசராக இருந்ததால், அப்பொழுது டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, ஆந்திரா மாநிலத்தின் என்.சி.சி. பிரதிநிதியாக பங்குக்கொண்டார். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த என்.சி.சி. பிரதிநிதிகளைக் கொண்ட, இந்திய என்.சி.சி ராணுவ அணிவகுப்பின் குழுவை தலைமை தாங்கினார். அணிவகுப்பின் முன்னால் கம்பீரமாக வாளேந்தி, "வோர்ட் ஆஃப் கமாண்டு" உறுதிமொழி எடுக்கும் வாய்ப்பு, இவர் முயற்சிக்கு கிடைத்த பரிசு. என்.சி.சி ராணுவ குழுவைத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமை இவரையேச் சேரும்.

image


வாளேந்திய கையில் கரண்டி- எதிர்பாராத திருப்பம்

"இத்தனை ஆர்வமிக்க ஒரு பெண் நம் இந்திய ராணுவத்திற்கு தேவை என்று விழாவில் கலந்து கொண்ட, ராணுவ ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ் பாராட்டினார். தேர்வு இன்றி ராணுவத்தில் சேர, நான் பரிந்துரைக்கிறேன் என்று என் தந்தையை சந்தித்துக் கூறினார்.

ஆனால், அனைவரின் ஆச்சரியத்திற்கு, என் தந்தை அவரிடம் என் கல்யாண பத்திரிகையை கொடுத்தார். குடும்ப சந்தர்ப்ப சூழலினால், பதினெட்டு வயதிலே எனக்கு திருமணம் ஆகிவிட்டது" என்று தன் வாழ்க்கை பாதை மாறிய தருணத்தையும் சிரித்துக் கொண்டே கூறினார், ஸ்ரீமதி. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கூட்டுகுடும்பத்தில் வாக்கப்பெற்றார். வாள் ஏந்திய கையில், கரண்டியைப் பிடித்தார். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது, ஒரு பெண்ணுடைய முக்கிய கடமை என்று முழு மனதுடன் தன் திருமண வாழ்வை ஏற்றுக்கொண்டுள்ளார். 20 வயதில், ஒரு அழகிய பெண் குழந்தைக்கு தாயும் ஆனார்.

பல்பணி வேலைகளும் வெற்றிகளும்

சிறுவயதில் இருந்து சுறுசுறுப்பாக துறுதுறுவென இருந்துவிட்டு, வீட்டிற்க்குள்ளே இருப்பதை நான் விரும்பவில்லை. பி.காம் படித்து முடித்தேன். பார்ட் டைம் ஜாப்பில் ஈடுபடத் தொடங்கினேன். ராஜ் டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு, தொகுப்பாளராக பணியாற்றினேன். பின், ஒரு பேஷன் பூட்டிக்கில், டிசைனராக வேலை செய்து வந்தேன். விளம்பர படங்களுக்கு கதை எழுதி, பின்னணி குரல் கொடுத்தேன். பேஷன் போட்டோகிராபர் கார்த்திக் ஸ்ரீவாசன் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்தேன். வார இதழ்களில் என்  புகைப்படம் வரும் போதெல்லாம், வீட்டில் யார் கண்களிலும் படாமல் இருக்க அவற்றை மறைத்து வைத்ததுண்டு, என்று தன்னுள் இருக்கும் திறமையை வீணாக்காமலிருக்க, தான் செய்த தில்லு முல்லு பணிகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார், ஸ்ரீமதி.

நானும் நாசாவும் - "ஸ்பேஸ் கிட்ஸ்" நிறுவனம்

நானும் என் கணவரும் உலகை சுற்றும் உல்லாசப் பறவைகளைப் போல, அதிகமாக சுற்றுபயணங்கள் மேற்கொள்வதுண்டு. எல்லாம் நலமாய் நடந்து கொண்டிருந்தாலும், "நான் ஏன் பிறந்தேன்" என்ற கேள்வி என்னுள் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒருமுறை அமெரிக்கா சென்றபோது, அமெரிக்கா சுற்றுலா மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் நாசா விண்வெளி மையம் நடத்திய ப்ரேசேன்டேஷன் என்னை மிகவும் ஈர்த்தது. நாசாவிற்கு விஞ்ஞானிகள் மட்டுமல்ல, மாணவர்களும் சென்று, விண்வெளி மற்றும் ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது. இந்தியாவில் இருந்து யாரும் வருவதில்லை என்று அவர்கள் கூறியது, எனக்கு மன உளைச்சலைத் தந்தது. அங்கு செல்வதற்க்கான வழிமுறைகள் எல்லாம் கேட்டுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினேன்.

குழந்தைகளுக்கு வெறும் புத்தக அறிவு மட்டும் இல்லாமல், நடைமுறை கல்வி பெற உதவ வேண்டும் என முடிவு செய்தேன். நம் இந்திய குழந்தைகளை நாசாவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுத்தேன். நாசா விண்வெளி மையத்திற்கு இந்திய தூதராக நிறுவப்பட்டேன். 2010இல் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முதல் பயணம் - மறக்க முடியாத அனுபவம்!

நிறுவனம் தொடங்கியவுடன், பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்து, விழா நடத்தி எங்கள் நோக்கத்தை விளக்கினோம். 2010 ஏப்ரல் மாதத்தில் முதல் பயணமாய், 108 குழந்தைகளை ஒரு வாரம் நாசா கூட்டிச் செல்ல திட்டமிட்டோம். நல்ல பாராட்டு கிட்டியது. ஆனால், கடல் தாண்டி குழந்தைகளை அனுப்புவதைக் குறித்து, பெற்றோர்கள் பயப்பட்டனர். செப்டம்பரில் இருந்து ஜனவரி வரை, ஐந்து மாதங்கள் ஆகியும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் நம்பிக்கை இழந்தனர்.

"நமக்குள் ஒரு வித்தியாசமான நல்ல ஐடியா தோன்றிவிட்டால், அதனை கைவிடாமால் எப்படியாவது சாதித்து காட்ட வேண்டும் என்பது என் பாலிசி. எப்படி என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் நடக்கும் என நான் நம்பினேன்".

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணிபுரியும் நண்பர் மூலம், நாசா பயணம் குறித்து ஒரு விளம்பரம் கொடுத்தேன். பின், உழைப்புக்கு கிடைத்த பலனாக, சரியாய் 108 குழந்தைகள் சேர்ந்து விட்டனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா தயார் செய்வது, அதைவிட சவாலாய் இருந்தது. ஒருவழியாய், முதல் பயணம் வெற்றிகரமாய் அமைந்தது என கூறி பெரும் மூச்சு விட்டார் ஸ்ரீமதி.

image


பாதை மாற்றும் பயணம், சிந்தை செழிக்கும் சுற்றுலா

"இந்த பயணத்தில் அவர்கள் விண்வெளி பற்றி மட்டும் அறிந்து கொள்ளாமல், இந்தியாவில் இல்லாத மற்ற அனுபவங்களையும் பெற வேண்டும். உலக புகழ்பெற்ற டிஸ்னிலாண்ட் பார்க் அழைத்துச் சென்றோம். விமானம் ஓட்ட கற்று கொடுக்கும் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று, இவர்கள் பைலட் போல விமானம் ஓட்டவும் வாய்ப்பளித்தோம். அங்குள்ள பல்கலைகழகங்களில் இருக்கும் மாணவர்கள், எங்கள் மாணவர்களுடன் கலந்துரையாட வழி செய்தோம். அதனால், மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்று மட்டும் நினைக்காமல், மற்ற வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட, இப்பயணம் தூண்டுகோளாய் அமையும். 

சிறுவயதிலேயே, பெரிய பெரிய ஆச்சரியங்களை சந்தித்து விட்டால், உலகத்தின் மீது அவர்களுக்குப் பயமிருக்காது. அவர்கள் கனவை சாதிக்க, அவர்களே அவர்களை வடிவமைத்து கொள்வர்," என்கிறார்.

எங்களது முதல் மாணவன் "கெளதம் ஜெயகொடி", இன்று ஆம்ஸ்டர்டாம்ல் இல் உள்ள ஏரோ-ஸ்பேஸ் சென்டரில் பணிபுரிகிறான். அனைத்து மாணவர்களும் இன்னும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏழை மாணவர்களுக்கு கைகொடுக்கும் "யங் சயின்டிஸ்ட்"

பங்குகொள்பவர்களுக்கு மட்டும், இப்பயணம் சாதகமாய் அமையாமல், பங்குகொள்ள முடியாதவர்களுக்கும் இம்மாணவர்கள் உதவுவர், ஊக்கபடுத்துவர். இதுபோன்ற அனுபவங்கள் அடைய, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாதென்று, ஒவ்வொரு வருடமும் "யங் சயின்டிஸ்ட்" என்று மாணவர்களுக்கு ஒரு அறிவியல் போட்டி நடத்துகிறோம். அதில் வெற்றிபெறும் மாணவர்களை, ஸ்பேஸ் கிட்ஸ் இலவசமாக நாசாவுக்கு அழைத்து செல்லும்.

image


பள்ளம்பட்டியில் இருந்து வந்த மாணவன் ரிஃபாத் ஷாருக் -இன் "என்.எஸ்.எல்.வி கலாம்-1" எனும் பலூன் செயற்கைக்கோள் கடந்த வருடம் ஆகஸ்ட் 23-ன் தேதி லான்ச் செய்யப்பட்டது. இதற்கு லிம்கா ரெகார்ட் சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது.  பல சவால்களைச் சந்தித்து, வெற்றி கண்ட அந்த ஒரு நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

2012 இல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான கலை நிகழ்ச்சியில், ஸ்பேஸ் கிட்ஸ் மாணவர்கள் பங்குகொண்டு, சிறப்பு செய்துள்ளனர். தற்போது, நான் ரஷ்யன் ஸ்பேஸ் சென்டரிலும் இந்திய தூதராக நிறுவப்பட்டுள்ளேன் என்று பெருமையுடன் தெரிவித்து கொண்டார்.

image


ஸ்ரீமதியின் கனவுகள், நாட்டின் முன்னேற்றங்கள்

நம் இந்திய குழந்தைகளின் நலனுக்காக ஒரு பெரியளவிலான மாற்றத்தை உருவாக்க நான் விரும்புகிறேன். இந்த பூமியில் நான் கண்ட வெற்றிகளை கால்தடமாக பதித்து செல்வேன். நான் இறக்கும்போது, என்னைச் சுற்றி குழந்தைகளாய் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதுமட்டுமின்றி, நம் நாட்டிலும் மற்ற நாடுகள் திரும்பி பார்க்கும்படி, ஒரு மிகபெரிய ஸ்பேஸ் சென்டர் நிறுவப்பட வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாகும்.

என்னை நான் நம்பினேன். முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டேன். சாதித்துக் கொண்டிருக்கிறேன். எய்ட்ஸ், மார்பக புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவைகளில், பெரும் பங்களிப்பு அளித்து வருகிறேன்.

நாம் சாதிக்க வேண்டுமெனில், நாம் தான் அதற்கு பாடுபட வேண்டும். உன்னை கேளிக்கை, ஏளனம் செய்த அதே உலகம், நீ ஜெயித்தபின் உன்னை பாராட்டவும் செய்யும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்து, உறுதியுடன் வாழுங்கள் என்று பேட்டியை நிறைவு செய்தார், ஸ்ரீமதி கேசன்.

இத்தனை சாதனை புரிந்த இந்த பெண்மணியின் கதை உங்களையும் ஊக்குவிக்கும் தானே!

கட்டுரையாளர்: நந்தினி பிரியா 


Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக