பதிப்புகளில்

மறு பயன்பாடுக்கு உகந்த துணி டயாப்பர்கள்: ’Superbottoms’ ப்ராண்டை உருவாக்கி அம்மாக்களின் கவலையை போக்கியுள்ள பல்லவி!

17th Feb 2017
Add to
Shares
341
Comments
Share This
Add to
Shares
341
Comments
Share

மும்பையைச் சேர்ந்த பல்லவி உத்தகி சுற்றுச் சூழல் பாதுகாப்பான, மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி டயாப்பர் ப்ராண்டை உருவாக்கியுள்ளார். இதனால் குழந்தை ஈரமின்றி உலர்ந்திருப்பது உறுதிபடுத்தப்படுவதால் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள்.

வாழ்க்கையின் பல முக்கிய பிரச்சனைகளைச் சந்தித்து அதற்கான தீர்வு காணும் உந்துதலில்தான் பெரும்பாலான தொழில்முனைவோர் உருவாகின்றனர். 32 வயதான பல்லவி உத்தகிக்கும் இது பொருந்தும். பல்லவி ஜம்னலால் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸில் எம்பிஏ முடித்தவர். 

பல்லவி உத்தகி தன் மகன் உடன்

பல்லவி உத்தகி தன் மகன் உடன்


புதிய தாய்மார்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனையான டயாப்பர் ரேஷ் பிரச்சனையை 2014-ல் இவரும் சந்தித்தார். 2013-ம் ஆண்டு இறுதியில் பிறந்த இவரது மகனுக்கும் அடிக்கடி ரேஷ் வந்தது. வழக்கமான டிஸ்போசபிள் டயாப்பர் பயன்படுத்தியதால் அவ்வாறு ஏற்பட்டது. டிஸ்போசபிள் டயாப்பர்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த அக்கறை கொண்டார் அவரது கணவர் சலீல். 

ஸ்டார்ட் அப் நோக்கிய நகர்வு

தீர்விற்காக தேடலில் பல்லவி சர்வதேச துணி டயாப்பர் ப்ராண்ட்களை கண்டறிந்தார். இந்திய தாய்மார்களால் பல தலைமுறைகளாக பயன்பாட்டில் இருந்து வந்த துணி நேப்பிகள் போலல்லாமல் துணி டயாப்பர்கள் சிறுநீர் நனைந்து சொட்டாமல் குழந்தை உலர்ந்திருக்க உதவும். வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த துணி டயாப்பர்கள் பல்லவிக்கு பிடித்திருந்தது. விரைவில் துணி டயாப்பரில் சொந்தமாக ஒரு ப்ராண்டை தானே உருவாக்க எண்ணினார். பல்லவி கூறுகையில்,

”அமெரிக்க தயாரிப்புகள் சிறப்பாகவே இருக்கும். ஆனால் இந்திய குழந்தைகளுக்கு முற்றிலும் ஏற்றவாறு இருக்காது. இந்திய குழந்தைகள் சிறியவர்கள். அமெரிக்க ப்ராண்ட்கள் உலர்வாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் உலர்வாக இருக்கவேண்டும் என்பதை மட்டுமே விரும்வதால் தாய்மார்களுக்கு இது பிரச்சனையாக உள்ளது. மேலும் இந்திய சந்தையில் வித்தியாசமான அச்சுகள் மற்றும் பிரகாசமான வண்ணங்களே விரும்பப்படுகிறது.”

தயாரிப்பை உருவாக்க பிரத்யேக தகுதி பெற்றிருக்கிறார் பல்லவி. ஸ்ட்ரைட்ஸ் ஆர்கோலேப்பிலும் பிறகு பிரமல் ஹெல்த்கேரிலும் பணிபுரிந்ததால் இவருக்கு ஃபார்மா துறையின் பின்னணி உள்ளது. விற்பனை மற்றும் மார்கெட்டிங்கில் கவனம் செலுத்தினாலும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ப்ராடக்ட் டெவலப்மெண்ட் குழுவுடன் பகிர்ந்து கொண்டு இணைந்து செயல்படுகிறார். 

பிரமலில் i-pill, i-sure மற்றும் i-can ஆகியவற்றைக் கொண்ட ‘I’ பிரிவை நிர்வகித்தார். அதனால் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் எப்படி இயங்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது மகன் கபீர் பிறந்தபின் Sanofiயில் சிறிது காலம் இருந்தார். அதே நேரத்தில் இந்திய துணி டயாப்பர் ப்ராண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். 

”எங்களது அனுபவத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்து கேட்டறிந்த தகவல்களிலிருந்தும் எந்த மாதிரியான அம்சங்கள் தேவைப்படும் என்பதை நாங்கள் அறிந்தோம், என்று நினைவுகூர்ந்தார் பல்லவி. 

அவரது கனவான துணி டயாப்பரை உருவாக்க தேவைப்படும் துணிக்கான நிதி அவருக்குத் தேவைப்பட்டது. ஏற்றுமதி செய்யும் அவரது நண்பர் மூலமாக துணி ஆலோசகரை அணுகினார். “எனது சொந்த நகரமான நாசிக் மற்றும் மும்பையில் பல நிபுணர்களை சந்தித்தோம்.” என்றார் அவர். 

அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களைக்கொண்டு பல்வேறு துணிகளை முயற்சி செய்ய அவர் சீனாவிற்கு பயணம் செய்தார். சில டயாப்பர் மாதிரிகளை உருவாக்கி அதை அவரது குழந்தைக்கும் நண்பரின் குழந்தைக்கும் பயன்படுத்தி முயற்சித்தார். 

“எங்கள் குழந்தையிடமே நான் சோதனை செய்தேன். தயாரிப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்பு என்னுடைய நண்பர்களும் தயாரிப்பை பயன்படுத்திவிட்டு விரிவான கருத்துக்களை தெரிவித்தனர்.” என்றார் பல்லவி.

2015 இறுதியில் பல்லவிக்கு தயாரிப்பின் மீது நம்பிக்கை அதிகரித்ததால் உற்சாகமாக தொடர்ந்தார். மும்பையில் டிசம்பர் 2015-ல் ’சூப்பர்பாட்டம்ஸ்’ Superbottoms உருவானது. வண்ணமயமான டயாப்பர் கவர்களை உருவாக்க பெரும்பாலும் தாய்மார்களான பகுதிநேர டிசைனர்கள் குழுவுடன் இணைந்து செயல்பட்டார். இந்த மேட் இன் சைனா தயாரிப்பு நீர் புகாதது எனினும் அதன் லேமினேஷன் காற்றுபுகக்கூடியது. அதாவது காற்று உட்புகும் ஆனால் எந்தவித திரவமும் வெளியில் வராது. உள்ளிருக்கும் பேட் ஆர்கானிக் காட்டன் மற்றும் பாலியஸ்டரால் ஆனது. இதை இரவு முழுவதும் பயன்படுத்தலாம். 

குழந்தையின் தோலுக்கு மிக அருகில் இருக்கும் லேயரானது உலர்வாக வைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்பு வகை பாலியஸ்டரால் ஆனது. வாஷிங் மெஷினில் துவைக்ககூடிய இந்த டயாப்பர்கள் புதிதாக பிறந்த குழந்தை அளவு மற்றும் ஃப்ரீ சைஸில் கிடைக்கிறது. ஐந்து முதல் பதினேழு கிலோ எடை வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த ஃப்ரீ சைஸ் பொருந்தும்.

சூப்பர்பாட்டமின் தயாரிப்புகள் தற்போது நிறுவனத்தின் வலைதளம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் என ஆன்லைனில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் லான்ச்பேடில் இந்த ஸ்டார்ட் அப் பங்கு வகிக்கிறது. இந்த உலகளவிலான இ-காமர்ஸ், இந்திய ஸ்டார்ட் அப் ப்ராண்டுகள் மற்றும் அதன் தயாரிப்புகள் குறித்து வெளிப்படுத்துகிறது.

image


வளர்ச்சிப் பாதையில் சந்தித்த பிரச்சனைகள்

துணி டயாப்பர்கள் குறித்தும் குறிப்பாக ப்ராண்ட் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால். ஆரம்பத்தில் பல்லவி தாய்மார்களை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவே தனிப்பட்ட முறையில் அணுகினார். 

”இப்படித்தான் தொடர்புகொள்ளத் தொடங்கினோம். டிஸ்போசபிள் டயாப்பர்களுக்கு ஒரு மாற்று இது என்று சொன்னது அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது. தயாரிப்பில் பெற்றோர்கள் டயாப்பர்களை வாங்கிய ஒரு மாதத்திற்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்றும் அறிவித்தோம். இது சற்றே ஆபத்தானது என்றபோதும் இந்த அறிவிப்பு பெற்றோரை முயற்சிக்கத் தூண்டியது. மிகச்சிலரே திருப்பியளித்தனர்.” என்றார் பல்லவி. 

ஒருவர் மற்றவருக்கு பரிந்துரைத்ததனால் சூப்பர்பாட்டம்ஸ் தயாரிப்பின் விளம்பரம். ஏனெனில் தாய்மார்கள் எப்போதும் அடுத்தவரின் அறிவுரைகளை கேட்டுக்கொள்வார்கள். இப்படித்தான் மும்பையைச் சேர்ந்த நயன்தாரா கர்கானிஸ் துணி டயாப்பர்கள் குறித்தும் சூப்பர்பாட்டம்ஸ் குறித்தும் தெரிந்துகொண்டார். சில தாய்மார்கள் இணைந்திருந்த ஒரு ஆன்லைன் குழுவில் மனிதவளத்துறையைச் சேர்ந்த இவர் கர்பமாக இருந்தபோது இணைந்தார். அதன்பின் ஒரு சில சீன மற்றும் அமெரிக்க ப்ராண்ட்களுக்கு அறிமுகமானார். 

அவரது மகன் டாஸ்மாய் பிறந்த பின் விலை மலிவான சீன டயாப்பர்களின் தரம் குறைவாக இருப்பதை உணர்ந்தார் நயன்தாரா. மற்றொரு புறம் அமெரிக்க ப்ராண்ட்கள் சிறப்பாக இருப்பினும் விலையுயர்ந்ததாக இருந்தது. “என்னுடைய குழந்தைக்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்த சூப்பர்பாட்டம்ஸ் டயாப்பர்களை பார்த்தேன். அதை முயற்சி செய்ய முடிவெடுத்து நிறைய டயாப்பர்களை வாங்கினேன். இந்த டயாப்பர்கள் இரவு முழுவதும் ஈரமின்றி உலர்வுடன் இருக்கச் செய்ததால் என் குழந்தை நிம்மதியாக உறங்கினான். எனக்கு டிஸ்போசபிள் டயாப்பர்களை பயன்படுத்த விருப்பமில்லை.” என்றார் 14 மாத குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா. 

ஒரு வருடத்திற்கும் மேலாக சூப்பர்பாட்டம்ஸ் டயாப்பரை பயன்படுத்தி வருகிறார். இந்த டயாப்பர்களின் விலை 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஆகும். இந்த விலையானது இதே போன்ற அமெரிக்க ப்ராண்டின் விலையில் பாதியாகும். ஒரு டிஸ்போசபிள் டயாப்பரின் விலை கிட்டத்தட்ட 11 ரூபாய். ஒரு குழந்தை முறையான பயிற்சி பெற்று கழிவறையை பயன்படுத்தும் வரை கிட்டத்தட்ட 4000 டயாப்பர்களை பயன்படுத்தவேண்டும் என்கிறார் பல்லவி. 

”ஒரு குழந்தைக்கு 50,000 ரூபாய் வரை செலவாகும். துணி டயாப்பர்கள் மறு பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பதாலும் ஃப்ரீ சைஸ் என்பதாலும் டயாபர் பயன்படுத்தவேண்டிய காலகட்டம் முழுவதும் இதை பயன்படுத்தலாம். பெற்றோர்கள் 10,000 ரூபாய் வரை செலவழித்தால் போதும்.” என்றார் பல்லவி.

டிஸ்போசபிள் டயாப்பர்களைக் காட்டிலும் துணி டயாப்பர்கள் சிறந்தது என்றாலும் இது புதிய கான்செப்டாக இருப்பதால் இந்திய பெற்றோருக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தேவைப்படுவது மற்றொரு சவாலாக உள்ளது.

”தாய்மார்களின் பல கேள்விகளுக்கு சமீப காலம் வரை நான் விளக்கமளித்து வந்தேன். எங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட தொடர்பை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதே என்னுடைய மிகப்பெரிய கவலையாக இருந்தது.”

அதிக உற்சாகமுள்ள வாடிக்கையாளர்களை அணுகுவது என்பதே அவரது தீர்வு. துணி டயாப்பர்களின் பயன்பாட்டை நம்பும் அப்படிப்பட்ட ஐந்து வாடிக்கையாளர்களான சூப்பர்பாட்டம்ஸ் ’பட்டி மாம்ஸ்’ (buddy moms) துணி டயாப்பர்களை புதிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவினர். 60 சதவீதத்தினர் மறுபடி வாங்கினார்கள் என்றார் பல்லவி.

80 லட்சம் முதல் 1 கோடி வரை வருவாயை எட்ட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் அடுத்த மாதம் முதல் சில்லறை விற்பனையாக ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய உள்ளது. சூப்பர்பாட்டம்ஸ் மட்டுமே நேடிவ் துணி டயாப்பர் ப்ராண்ட் அல்ல. நயா க்ளாத் டயாப்பர்ஸ். லல்லுபேபி, பம்பெரி மற்றும் பம்ஜீனியஸ் உள்ளிட்டவை சந்தையிலுள்ள மற்ற ப்ராண்டுகளாகும். எனினும் சிலர் சீனப் பொருட்களை வாங்கி இந்தியாவில் சந்தைப்படுத்துகின்றனர். டிஸ்போசபிள் டயாப்பர்களில் மிகப்பெரிய ப்ராண்டுகளான பேம்பர்ஸ், ஹக்கீஸ் மற்றும் யூனிசெம் (மேமிபோகோ தயாரிப்பாளர்கள்) போன்றோருக்கான சந்தையும் குறையவில்லை.

அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் இருப்பதால் பயமின்றி அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் துணி டயாப்பர்களை விரும்பும் இந்தியத் தாய்மார்கள் இந்த நவீன துணி டயாப்பர்களுக்கு எளிதாக மாறுவார்கள். ஆய்வு நிறுவனமான CMR அளிக்கும் தகவல்படி டிஸ்போசபிள் டயாப்பர்களின் சந்தை ஊடுருவல் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. டயாப்பர்களின் சந்தை தற்போது 300 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.

கழிவறை பழக்கத்திற்கு உதவும் பேண்ட்கள் மற்றும் அதன் இதர பாகங்கள் போன்ற புதிய ப்ராடக்ட் லைன்களை அறிமுகப்படுத்த இருக்கும் பல்லவி அவரது ப்ராண்டின் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார். 

”எங்களது துணி டயாப்பர்கள் விலை குறைந்தது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் குழந்தைகள் சார்ந்தது என்பதால் தாய்மார்கள் எங்களைத் தேர்வு செய்வார்கள். அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : ராதிகா பி நாயர்

Add to
Shares
341
Comments
Share This
Add to
Shares
341
Comments
Share
Report an issue
Authors

Related Tags