பதிப்புகளில்

நீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்!- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு!

கேரளாவில் 'ஸ்டெம் செல்' தானம் வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரிய திருச்சியைச் சேர்ந்த இளம் மருத்துவர் கண்மணி கண்ணன் தன் உணர்வுப்பூர்வ அனுபவத்தைப் பகிர்கிறார்.

கீட்சவன்
19th Apr 2018
Add to
Shares
604
Comments
Share This
Add to
Shares
604
Comments
Share

நவீன மருத்துவத்தின் மைல்கல் முன்னேற்றங்களில் ஒன்றுதான் 'ஸ்டெம் செல்' தானம். இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் மிகுதியாகத் தேவைப்படும் நிலையில், கேரளத்துக்கு மருத்துவம் படிக்கச் சென்ற திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் கண்மணி கண்ணன் தன்னையே முன்னுதாரணமாக காட்ட முனைந்தார். அவரது 'ஸ்டெம் செல்' தானத்தால் ஆறு வயது குழந்தை ஒன்று இப்போது முழுமையாக நலனுடன் துள்ளித் திரிந்துகொண்டிருப்பது மகிழ்வுக்குரியது.

கண்மணி கண்ணன்

கண்மணி கண்ணன்


ரத்தப் புற்றுநோய், ரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும் 'தாலசீமியா', ரத்த வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் ஏற்படும் 'ஏபிளாஸ்டி அனீமியா' போன்ற நோய்களுக்கு சரியான தீர்வை ஏற்படுத்தக் கூடியதுதான் 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், பொருத்தமான 'ஸ்டெம் செல்'கள் தானமாகப் பெறப்பட்டே இந்த சிகிச்சை முறையை செயல்படுத்த முடியும் என்பதால் அரிதினும் அரிதாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. 

18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் எவரும் 'ஸ்டெம் செல்' தானம் செய்யலாம். ஆனால், நம் நாட்டில் இதற்குப் பதிவு செய்வதற்கே மக்களிடையே ஒருவித தேவையற்ற தயக்கம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களின் பதிவு என்பது மிகவும் சொற்பமாகவே நீடிக்கிறது.

இந்தச் சூழலில், கேரளாவில் 'ஸ்டெம் செல்' தானம் வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரிய திருச்சியைச் சேர்ந்த இளம் மருத்துவரும், 'ஸ்டெம் செல்' தானம் குறித்து தன்னளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபருமான கண்மணி கண்ணன் தன் உணர்வுபூர்வ அனுபவத்தைப் பகிர்ந்தார்.

"திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சபெருமாள்பட்டி எனும் கிராமம்தான் சொந்த ஊர். அம்மா பள்ளி ஆசிரியர், அப்பா டாக்டர். இருவருமே நடுத்தர குடும்பத்தில் இருந்து கல்வியாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர்கள். அம்மா மூலம் எதையும் துணிச்சலாக அணுகும் உத்வேகமும், அப்பா மூலம் உலக அறிவும் கிடைக்க வளர்ந்தேன். கிராமம் என்ற சூழல்தான் என் வெற்றிகளுக்குக் காரணம் என நம்புகிறேன். எல்லாவித மக்களுடன் பழகுவதற்கு இதுவே துணைபுரிந்தது, என்கிறார்.

கிராமத்திலும் சிறுநகரத்திலும்தான் என் பள்ளி வாழ்க்கை. பின்னர், என்னால் யாருடைய துணையுமின்றி வளர முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்தபிறகு நாமக்கல்லில் ஹாஸ்டலில் தங்கி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தனர். நகர வாழ்க்கை பரிச்சயமானது அங்குதான். சமூகம் மீதான பார்வை என்பது சிறு வயதில் இருந்தே மிகுதியாக இருந்தது. எனவே, டாக்டர் ஆவதை விட ஐ.ஏ.எஸ் ஆகி மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம்தான் மேலோங்கி இருந்தது. ஆனால், அப்பாதான் முதலில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு பிறகு முடிவை எடுத்துக்கொள் என்றார்.

கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, 'ஸ்டெம் செல்' குறித்தும், அது தொடர்பான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் 'ஸ்டெம் செல்' தானம் செய்வதற்கு 'தாத்ரி' எனும் அமைப்பில் பதிவு செய்தேன். 10 லட்சத்தில் ஒருவருக்கே நம் 'ஸ்டெம் செல்' பொருத்தமாக இருக்கும். இது அரிதினும் அரிதான ஒன்று. 

'ஸ்டெம் செல்' தானத்துக்குப் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் தானம் வழங்க முடியாத நிலை வரலாம்; பெரும்பாலும் பொருந்தாததால் தானத்துக்கு அழைக்கப்படாமலேயே இருக்கும் வாய்ப்பே அதிகம். கச்சிதமாகப் பொருந்தினால் மட்டுமே தானம் வழங்க முடியும். அப்பாவின் பிறந்தநாளில் என் பெயரை பதிவு செய்தேன்.

ஸ்டெம் செல் தானம் செய்த நாளில்...

ஸ்டெம் செல் தானம் செய்த நாளில்...


அந்தப் பதிவு அட்டையை பத்திரமாக வைத்திருந்தேன். அதை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது உண்டு. அப்போதெல்லாம் நான் நேரடியாகப் பார்த்த புற்றுநோய் பாதித்தவர்கள் என் கண்முன்னே வந்து போவார்கள். இந்தப் பதிவு அட்டை கடைசி வரை பயன்படாமல் போய்விடுவோமோ என்று கூட நினைத்ததுண்டு. எனினும், அதை ஒருவித பெருமிதத்துடன் வைத்திருந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு முடிந்து விடுமுறையில் இருக்கும்போது, அதாவது கடந்த ஆண்டு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ரத்த அணுக்கள் சார்ந்த நோய் பாதித்த ஆறு வயது குழந்தைக்குப் பொருந்திப்போவதால் நான் 'ஸ்டெம் செல்' தானம் அளிக்கலாம் என்றனர். 'ஸ்டெம் செல்' தானம் அளிப்பதற்கான நடைமுறைகளை அவர்களிடம் கேட்டறிந்தேன்.

ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தானம் செய்பவர்களிடம் இருந்து பெறப்படும் பொருத்தமான 'ஸ்டெம் செல்'களை 'ஸ்டெம் செல்' மாற்று சிகிச்சை' மூலம் செலுத்தப்படும். இதனால், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு நோய் முழுமையாக குணமடையும். பொதுவாக, நம் எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் 'ஸ்டெம் செல்'கள் உரிய பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு பொருத்தமான நோயாளிக்கு செலுத்தப்படும்.

'சலைவா' பரிசோதனை மூலம் தானம் செய்பவரின் 'ஸ்டெம் செல்' வகை அறியப்படும். தானம் செய்பவரின் கன்னத்தின் உள் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் சில துளி உமிழ்நீரில் இருந்து 'ஸ்டெம் செல்'லின் வகை கண்டறியப்படும். இது மிகவும் எளிதான டெஸ்ட்தான்.

'ஸ்டெம் செல்' தானம் செய்வதற்கு முன்பு சில மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்; அதனால், சைடு எஃபக்ட் வரக்கூடும் என்பதை அறிந்தபோது முதலில் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்தபிறகு எந்தத் தயக்கத்துக்கும் அச்சத்துக்கும் என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனினும், இணையத்தில் 'ஸ்டெம் செல்' தானம் குறித்து நிறைய வாசித்தேன். உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றேன். பெரும்பாலும் சைடு எஃபக்ட் வராது; அப்படி வந்தாலும் அதை ஓவர்கம் செய்வதற்கு தயாராவது என்று முடிவு செய்து 'ஸ்டெம் செல்' தானத்துக்கு ஒப்புக்கொண்டேன்.

'ஸ்டெம் செல்' தானம் செய்வது குறித்து கூறும்போது, என் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல; தெரிந்த மருத்துவர்களே ஊக்கப்படுத்தும் வகையில் பேசவில்லை. அப்போதுதான் மருத்துவம் சார்ந்த புரிதல் நிறைந்தவர்களுக்குக் கூட 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழிப்புணர்வு முழுமையாக இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். இறுதியில், 'ஸ்டெம் செல்' தானம் செய்யும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று உறுதியாக முடிவு செய்தேன்.

'ஸ்டெம் செல்' தானம் செய்வதற்கான தகுதி இருக்கிறதா என்பதை அறிய சாம்பிள் கலெக்ட் செய்வது உள்ளிட்ட சில படிநிலைகளில் எளிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த டெஸ்டுகள் எடுக்கும்போது பயற்சி மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கிவிட்டேன்.

டெஸ்ட் ரிப்போர்ட் பாசிட்டிவாக வந்தது. எனக்குத் தானம் செய்யத் தகுதி இருப்பதாகச் சொன்னார்கள். அத்துடன், 'ஸ்டெம் செல்' தானம் செய்வதற்காக அவர்கள் சொன்ன நாள், என்னுடைய பட்டமளிப்புக்கு முந்தைய தினம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால், தானம் செய்வதற்கு முன்பு சில தினங்களில் முன் தயாரிப்பு பணிகள் நடக்கும். எனினும், தானம் செய்தாகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்கு ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக, 'ஸ்டெம் செல்' தானம் என்பது முன் தயாரிப்புகள் நிறைவடைந்த பிறகு, ஒரே நாளில் முடிந்துவிடக் கூடியதுதான். ஆனால், என் உடல் நிலை காரணமாக இரண்டு நாட்கள் மருத்துவமனையில் நோயாளி போலவே அட்மிட் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். 

”நம் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அதில் இருந்து 'ஸ்டெம் செல்'களை மட்டும் தனியாகப் பிரித்து எடுப்பார்கள். அதன்பிறகு, அந்த ரத்தத்தை மீண்டும் நம் உடலிலேயே செலுத்திவிடுவர். இதுதான் நடைமுறை," என்றார் கண்மணி.

ஸ்டெம் செல் தானம் விஷயத்தில் பதிவு செய்தது முதல் தானமளிப்பது வரை தன்னிச்சையாக முடிவெடுத்த கண்மணி கடைசி நேரத்தில்தான் தன் பெற்றோரிடமே விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து மேலும் விவரித்தவர், 

பெற்றோருடன் பட்டமளிப்பு நாளில்...

பெற்றோருடன் பட்டமளிப்பு நாளில்...


'ஸ்டெம் செல்' தானத்துக்கு பதிவு செய்ததில் இருந்து தயாரானது வரையில் இதுபற்றி எதுவுமே என் பெற்றோரிடம் சொல்லவில்லை. கடைசியாக அவர்களிடம் சொன்னேன். அம்மா உணர்வுபூர்வமாக அணுகினார். எனினும், எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அப்பா டாக்டர் என்பதால் 'ஸ்டெம் செல்' தானம் குறித்து முழுமையாக அவருக்குத் தெரியும். அவருக்கு ஒருவித குழப்பம் இருப்பதை அறிந்தேன். மருத்துவர்களாகிய நாம்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் இதுபோன்ற தானத்துக்கு முன்வருவார்கள் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

'ஸ்டெம் செல்' தானம் மூலம் குணப்படுத்தக் கூடிய வாய்ப்பு என்பது 10,000 நோயாளிகளை எடுத்துக்கொண்டால் ஒருவருக்குதான் கிடைக்கும். அவர்களுக்கான தானம் வழங்குபவரும் 10 லட்சத்தில் ஒருவராகவே இருப்பர். இப்படி ஓர் அரிதான வாய்ப்பை எப்படி என்னால் நழுவ விட முடியும்?

பட்டமளிப்பு விழாவை ஒட்டி நண்பர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, நான் 'ஸ்டெம் செல்' தானம் செய்வதற்கான அட்மிட் ஆனேன். எனக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று அவர்கள் நினைத்துக்கொண்டனர். பின்னர்தான் அவர்களுக்குத் தகவல் தெரிந்தது. என் துணைக்கு இரண்டு நண்பர்களையும், தம்பியையும் மட்டும் அழைத்துக்கொண்டேன்.

தானம் செய்து முடித்தேன். டிஸ்சார்ஜ் ஆனேன். மறுநாளே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டேன். எலும்பில் வலி இருந்தது. ஆனாலும் சமாளிக்க முடிந்தது. 'ஸ்டெம் செல்' தான பதிவக அமைப்பான 'தாத்ரி' அமைப்பு, நான் பயிற்சி மருத்துவராக இருந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அனைவருக்கும் மெயில் அனுப்பி வாழ்த்தியிருந்தனர். பட்டமளிப்பு நேரத்தில் மற்றுமொரு பெருமிதமாக அனைவரும் கருதினர். மருத்துவமனையில் உள்ள மூத்த மருத்துவர்கள் பலரும் என்னை அழைத்து 'ஸ்டெம் செல்' தானம் உள்ளிட்ட சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். நம் மருத்துவத் துறையிலேயே இந்த முறை குறித்த புரிதலும் விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை என்பதை அப்போதுதான் அறிந்தேன்.

கடந்த நவம்பரில் தாத்ரி அமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தது. "கேரளாவிலேயே 'ஸ்டெம் செல்' தானம் செய்த முதல் பெண் நீங்கள்தான். எனவே பத்திரிகைகளுக்கு பேட்டிகள் தரவேண்டும். இது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், தானம் செய்ய பதிவு செய்யவே மக்கள் தயங்குகிறார்கள். ஒரு கொடையாளராகவும் டாக்டராகவும் மக்களின் தயக்கத்தைப் போக்க உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் இந்தச் செய்தி கேரளாவில் பத்திரிகைகளில் வெளியாகின.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அந்தக் குழந்தை மிகுந்த நலமுடன் இருப்பதை அறிந்தேன். அதைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட நேர்மறையான மனநிலையை எளிதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த ஓர் அற்புதத் தருணத்தை என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 'ஸ்டெம் செல்' குறித்து என்னளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கினேன்," என்று நெகிழ்ந்தார் கண்மணி.

வலது கை செய்யும் சேவையை இடது கை அறியக் கூடாது என்கிற கொள்கையில் பிடித்தம் கொண்டவர் கண்மணி. இதனால், ஆரம்பத்தில் எவரிடமும் தன்னைப் பற்றி விவரிப்பதைத் தவிர்த்தார். பத்திரிகைகள் பேட்டிகளுக்காக அணுகும்போதுகூட பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், அவரது இந்த நிலைப்பட்டை அடியோடு மாற்றியது ஒரு தொலைபேசி அழைப்பு.

image


அதுகுறித்து நம்மிடம் விவரித்தவர், "அமெரிக்காவில் ஒரு நடுத்தர வயதுக்காரரின் மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார். 'ஸ்டெம் செல்' மாற்று சிகிச்சை செய்து தன் மனைவியைக் காப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. தன் மனைவியை இழந்த பிறகு, 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலராக மாறிவிட்டார். அவர் என்னைப் பற்றிய தகவல் அறிந்து என்னிடம் பேசினார்.

அவரது வலி நிறைந்த வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்தார். அத்துடன், 'நீங்கள் வெற்றிகரமாக 'ஸ்டெம் செல்' தானம் செய்திருக்கிறீர்கள். இதையே முன்னுதாரணமாகச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதை, புற்றுநோயால் இறந்துபோன என் மனைவியின் ஆன்மா உங்களைக் கோருவதாக எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே 'ஸ்டெம் செல்' தானத்துக்கு பதிவு செய்துவிட்டார். ஆனால், இதுவரை யாருக்குமே பொருந்தவில்லை. ஆனால், பொருந்திப் போவோர்களோ தானம் செய்யத் தயங்குவதும் அதிகம் நடக்கிறது. எனவே, உங்களால் இயன்ற அளவில் உங்களை முன்னிருத்தியே விழிப்புணர்வு செய்யுங்கள் என்று முகம் தெரியாத அந்த மனிதர் கேட்டுக்கொண்டபோதே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். மீடியா ஃபோகஸ் மீது இருந்த தயக்கத்தை உடைத்துக்கொண்டேன். இதோ உங்களிடமும் என் கதையை விவரிக்கிறேன்," என்று அழுத்தமாகவே சொன்னார் கண்மணி.

ஸ்டெம் செல் தானமளித்த கண்மணியையும், அதைப் பெற்றுக்கொண்ட கொடையாளரான அந்தக் குழந்தையும் எதிர்வரும் மே 3-ம் தேதி சந்திக்கின்றனர். இதற்கான ஏற்பாட்டை 'தாத்ரி' செய்துள்ளது. தானம் பெற்றவர்கள் தரப்பில் விருப்பப்பட்டு தங்களுக்குத் தானம் அளித்தவரை சந்திக்க வேண்டும் என்று கோரினால் மட்டுமே இப்படி ஏற்பாடு செய்வார்கள். அப்படி ஒரு சந்திப்புதான் கண்மணிக்கு நிகழப் போகிறது. அதுவும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புற்றுநோய் அறுவைசிகிச்சை தொடர்பாக மேற்படிப்பு படிக்கவுள்ள கண்மணி, ஏழைகளுக்காக மருத்துவமனை ஒன்றை நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.

"பள்ளிப் படிப்பை முடிக்கும்போது ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்போது அதுபோன்ற சேவையை மருத்துவத் துறை மூலமே செய்யப்போவது உறுதியாகிவிட்டதில் முழு திருப்தி.”

கடைசியாகப் பகிர்வதற்கு ஒன்று இருக்கிறது. 'ஸ்டெம் செல்' தானத்துக்குப் பிறகு மாதம் ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. ரொம்ப நார்மலாகவே இருந்தேன். இப்போதும் அப்படித்தான். எனவே, யாருக்கும் எந்தத் தயக்கமும் வேண்டாம். என்னைப் போலவே விவரிக்க முடியாத பாசிடிவ் உணர்வு கிட்டலாம்" என்றவர், "நீங்களும் ஸ்டெம் செல் தானத்துக்குப் பதிவு செய்ய மறக்காதீங்க" என்று பேட்டி கண்ட என்னிடமும் சொல்லத் தவறவில்லை.

"நிச்சயமாக" - இது என் பதில்.

| ஸ்டெம் செல் தானம் குறித்தும், அதற்குப் பதிவு செய்வது பற்றியும் விரிவாக அறிய தாத்ரியின் அதிகாரபூர்வ வலைதளமான datri.org-ஐ நாடலாம். | 

Add to
Shares
604
Comments
Share This
Add to
Shares
604
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக