புரளி மெசேஜ்களை மீம் வடிவில் தோல் உரிக்கும் சமூக அக்கறைக் கொண்ட தளம்!

சமூக அக்கறையுடன் இரு இளைஞர்கள் தொடங்கியுள்ள ‘Youturn’ தளம் மக்களுக்கு சரி/தவறான தகவல்களை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த பல திட்டங்களை கொண்டுள்ளது. 
7 CLAPS
0

இந்த மெசேஜை பத்து க்ரூப்களுக்கு ஃபார்வர்டு செய்தால் உங்கள் மொபைலில் 50 ரூபாய் ரீசார்ஜ் ஆகிவிடும்...

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை ரயில்வே நிலையத்தில் தனியாக இருக்கிறது. இதை அதிக அளவில் ஷேர் செய்யுங்கள்... பெற்றோரை கண்டுபிடிக்க உதவுங்கள்...

இன்னும் 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் ஊரை அடித்துச் செல்லப் போகிறது என்று நாசா தகவல், உடனே வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்லுங்கள்...

இப்படி ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான மெசேஷ்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று சமூக ஊடகங்களில் நம்மை சுற்றிச்சுற்றி வருவதை பார்க்கிறோம். பலரும் அதை சரியாகக் கூட படிக்காமல் மற்ற க்ரூப்களில் ஃபார்வர்டு செய்வதும், சிலர் அக்கறையுடன் டைம்லைனில் பகிர்ந்து மக்களை எச்சரிக்கிறோம் என்ற ஆர்வத்துடன் பகிர்வதையும் காணுகிறோம். 

ஆனால் இவையெல்லாம் உண்மையில் நம்பகமான மெசேஜ்களா? அதில் உள்ள நபர்கள், எண்கள் சரியானவையா? அச்சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளதா? என்றெல்லாம் யாரும் கவலைப் பட்டது போல் தெரியவில்லை. பலமுறை இத்தகைய ஃபார்வர்டுகளால் தவறான செய்திகளை நம்பி பலர் பிரச்சனையிலும், சிலர் வம்பிலும் மாட்டிக் கொள்வதே நடக்கிறது. 

இந்த தொழில்நுட்ப யுகத்தில், சமூக ஊடகங்கள் எந்த அளவிற்கு நன்மை பயக்கின்றதோ, அதே அளவு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண களத்தில் இறங்கியுள்ளது இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம். 

ஸ்டார்ட்-அப் வகைகளில் இது ஒரு புதுவிதம். இது ஒரு முகநூல் பக்கம் தான். அந்த பக்கத்தின் பெயர் YOUTURN. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கிறார்கள். ஒரு முகநூல் பக்கம் எப்படி தொடக்க நிறுவனம் ஆகும் என்கின்ற கேள்வியோடு பக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஐயன் கார்த்திகேயன் இடம் பேசினோம். பத்திரிக்கையாளரான இவர் ஒரு தொழில் முனைவராக, குறும்பட இயக்குனராக, சமூக செயல்பாட்டாளராக பன்முகம் கொண்டவர்.


ஐயன் கார்த்திகேயன் மற்றும் விக்னேஷ்

YOUTURN தொடக்கம்

ஐயன் கார்த்திகேயன் தனது நண்பர் விக்னேஷ் காளிதாசனும் சேர்ந்து தொடங்கியது தான் YOUTURN. விக்னேஷ் அமெரிக்காவில் டேட்டா சயின்டிஸ்டாக பணியாற்றுகிறார். 

“பொதுவாக தங்களது புது ஐடியாக்களை என்னிடம் விவாதிக்கும் பல நண்பர்கள் எனக்கு உண்டு. அப்படி விக்னேஷ் என்னிடம் கூறிய நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் ஒன்று தான் YOUTURN. சமூக வலைதளங்களில் மிக அதிகமாக புரளிகள் நாள்தோறும் பரவுவதை எப்படி தடுக்கலாம் என்ற கேள்வியில் தொடங்கியது இந்த நிறுவனம்,” என்கிறார்.

விழுவதும் எழுவதும் தின நிகழ்வு. துணிவுடன் புதியவை செய்வது தான் மாற்றம், வளர்ச்சி, வெற்றியின் வழி என்பது என் கோட்பாடு. ஒரே வேலை செய்ய மாட்டாயா என என் நண்பர்கள் எப்பொழுதும் கேட்பதுண்டு, அதற்கு நான் ஒரே வேலையை செய்ய உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்பேன். அப்படி தொடங்கிய ஒரு புது வேலை இது என்கிறார் ஐயன்.

செய்திகளையே சரியாக படித்து பழக்கம் இல்லாத அனைவரும் இன்று சமூக வலைதளங்களில் உள்ள விஷயங்கள், மீம்ஸ் மற்றும் வீடியோக்களை முற்றிலும் உண்மையென்று நம்பும் புள்ளியில் தொடங்குகிறது புரளிகளின் அட்டகாசம் என்கிறார். புரளிகளால் பல அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைவதும், ஜாதி, மத, இன, மொழி வன்முறைகளை வளர்ப்பதும், தொழில் நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காகவும் இந்த புரளிகளை வளர்த்து எடுக்கிறார்கள் என்பதை உணர்ந்தோம். 

ஒரு சமூகம் தவறான விஷயங்களையே தொடர்ந்து நம்புவது சமூகக்கேடு. இந்த அவலத்தை சரி செய்வது ஒரு சவால். சமூகத்திற்கு சரியான விஷயத்தை தருவதும், சரியான விதத்தில் சமூகம் நடைபோட உதவுவதும் ஸ்டார்ட்-அப் இன் கடமை. கடகடவென செயல் திட்டத்தை வடிவமைத்தோம். YOUTURN என்பது வெறும் முகநூல் பக்கமல்ல ஓர் நிறுவனம் என்பதை முடிவு செய்தோம்.

புரளிகளை சமாளிக்க இவர்கள் செய்வது என்ன?

மீம் என்பது ஒரு powerful டூல். கிண்டலும் கேலியுமாக மட்டும் தெரியும் விஷயம் படபடவென்று பரவி உலகம் முழுவதும் சென்று விடுகிறது. அதனால் அதே மீம்கள் மூலமாக உண்மையை பரப்பும் தளமாக YOUTURN செயல்படுகிறது. மீம்ஸ் உருவாக்கச் செய்திகளின் ஆதாரங்களை திரட்ட, தினமும் வைரல் ஆகும் போலிச் செய்திகளை இனம்காண என எங்களிடம் ஒரு குழுவும், எல்லா துறை வல்லுனர்களும் உள்ள இன்னொருக் குழுவும் எங்களின் பலம் என்கிறார்.

மிகப்பெரிய முதலீடு தேவையில்லை. ஒவ்வொரு படி எடுத்து வைக்கும் போதும் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டெக்னிக்கல் சிக்கல்களை கண்டுபிடிப்பதற்கும், நமது ரசிகர்களின் மனோநிலைப் புரிந்து அவர்களோடு இணக்கம் ஏற்படுவதற்கும் மிக நிதானமான எங்கள் செயல்பாடு உதவியது. அதனால் ஏற்படுகின்றத் தவறை அல்லது அனுபவத்தைப் புரிந்துக் கொண்டு அடுத்த நகர்வை வைப்பது எங்களுக்கு உதவியது. அதனால் தான் வெகு குறுகிய காலமான ஆறு மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான ஃபாலோயர்களை பெற முடிந்தது என்றார்.

ஒரு பதிவிற்கு சாதாரணமாக நான்கு ஐந்து ஆயிரம் LIKE-க்கள் வரும். இது மிகவும் முக்கியம், எண்ணிக்கையில் பெரிய பக்கங்களே LIKE-க்கள் குறைவாக பெறும் போது இதை சாத்தியமாக்கியது தீவிரமான DATA ANALYSIS செய்வது தான். ஆன்லைனில் தொழில் செய்பவர்கள் நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டிய கோல்டன் ரூல் இது.

FACEBOOK பக்கங்கள் மூலம் எப்படி சம்பாதிக்கின்றது என்கின்ற சந்தேகம் பெரும்பாலோரிடம் உள்ளது. இங்கு பல பக்கங்கள் ஒரு மீம் போடுவதற்கும் சில ஆயிரம் பெறுகிறார்கள். இதன் மூலம் ஒரு பொருளையோ, நபரையோ அல்லது ஒரு நிகழ்வையோ விளம்பரப்படுத்துகிறார்கள். நேரடி விளம்பரமாக இல்லாததால் மக்களை சுலபமாக சென்று அடைகிறது. இந்த தந்திரத்தைப் புரிந்துக் கொண்டு பெரிய கார்பரேட் நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் பக்கங்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அதன் மூலம் ஒரு விளம்பர வியாபாரம் தொடங்குகிறது என்று பரவும் மெசேஜ்களின் பின்னணியை விளக்கினார் ஐயன் கார்த்திகேயன்.

நேர்மறை வியாபாரமாக இருப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அரசியல் கட்சிகளிடம் விலை போன பக்கங்கள் தவறானச் சிந்தனையை, தவறானக் கொள்கையை மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். பணம் கிடைக்கின்றதே என்று தவறான பொருளை அல்லது தவறான நபர்களை விளம்பரம் செய்து விடுவதும் உண்டு. அதனால் நாங்கள் நேரடி விளம்பரங்களை தவிர்த்து விட்டு EVENT PROMOTION செய்வதற்கு எங்கள் பக்கத்தை பயன்படுத்துகின்றோம். 

சமூகத்திற்கு நன்மை, யாருக்கும் சுயலாபம் இல்லாமல் நடக்கிற நிகழ்வு, உதவி எனில் இலவசமாகவே promotion செய்வோம். அதிலும் கவனமாகவும், கண்ணியமாகவும் இருப்பதை உறுதி செய்துக் கொள்கிறோம். ஏனென்றால் YOUTURN பக்கம் உண்மைகளை மட்டுமே சொல்லும் என்கின்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறோம். 

அந்த நம்பிக்கை பன்மடங்காக்குவது தான் எங்கள் நோக்கம். கிடைத்திருக்கும் மனித வளத்தை உண்மை செய்திகள் மூலமாகவும், நல்லவைகளை செய்யவும் பயன்படுத்த முடியும்.

“மிரட்டலுக்கு, தோல்விக்கு அஞ்சுபவர் தொழில் நிறுவனத்திருக்கு ஏற்றவர் இல்லை. துணிவினை துணை கொண்டவரே வெல்பவர். நாம் செல்லும் பாதையில் முள் போட ஆட்கள் இருக்கத்தான் செய்யும். உண்மை பேசினால் முள் மட்டும் அல்ல இன்னும் பல இன்னல்கள் தருவார்கள் மனோதிடத்தை உடைத்து விட்டு, கேரக்டரை கொச்சைப்படுத்தினால் பயம் வரும் என்பதே இவர்களின் நினைப்பு. அதை எல்லாம் பார்த்தால் வளர்ச்சி கனவாகும்.” 

நோக்கத்தை சீர்குலைக்க எது செய்தாலும் விடக்கூடாது என்ற தெளிவு, குடும்பம், நண்பர்கள், என் இணை நிறுவனர் என எல்லார் உறுதுணையால் அதற்கு அஞ்சாமல் நடை போடுகிறோம் என்றார்.

இவர்களின் அடுத்த கட்ட திட்டம், எது புரளி எது உண்மை என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள்ள ஒரு இணையதளம் தொடங்குவதே. பிற சமூக ஊடகங்கள் ஆன TWITTER, INSTAGRAM, YOUTUBE போன்றவற்றிலும் கால் பதித்துள்ளனர் இவர்கள். இதிலும் வளர்ச்சி அடைந்து பல புதியவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என்கிறார்.

முதலீட்டைப் பொறுத்தவரையில் பலரும் இவர்களின் புதிய ஐடியாவை பார்த்து பல லட்சங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாங்கள் இப்போது முதலீட்டை எதிர்நோக்கி இல்லை. இதை முழுமையாக பெரிய அளவில் செய்து பல லட்சம் பேரிடம் சென்றடைகின்ற தளமாக்க, அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும். அப்படியான அடித்தளம் அமைத்து பின் பெரும் முதலீட்டை ஈர்க்கத் திட்டம் என்கிறார் தெளிவாக.

புரளி எனும் சமூகக் கேட்டை களைவதும் , social media-கள் மூலம் வருமானம் ஈட்டுவதும் உற்சாகமான செயல். இதை சம்பாதிக்கும் வாய்ப்பு எனப் பார்க்காமல் சமூகப் பொறுப்பாகப் பார்க்கிறோம், என்று மனதில் இருந்து பகிர்கிறார் ஐயன் கார்த்திகேயன்.  

ஃபேஸ்புக் முகவரி: Youturn