1 ஆண்டில் ரூ.50 கோடி டர்ன்ஓவர் – மின்சார வாகனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் நிறுவனம்!

டெல்லியைச் சேர்ந்த iPower நிறுவனத்தின் பேட்டரி தயாரிப்புப்கள் தொழிற்சாலை பேட்டரிகள், மருத்துவ உபகரணங்களுக்கான பேட்டரிகள், எடை பார்க்கும் இயந்திரங்களுக்கான பேட்டரி போன்ற பிரிவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
24 CLAPS
0

மின்சார கார் உற்பத்தியில் உலகளவில் பிரபலமான நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் கர்நாடகாவில் உற்பத்தி ஆலை அமைப்பதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

2030-ம் ஆண்டில் 30 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எத்தனையோ மின்சார வாகன நிறுவனங்களும் ஸ்டார்ட் அப்களும் இந்த இலக்கு எட்டப்படுவதில் பங்களித்து வருகின்றன.

இதில் எத்தனையோ நிறுவனங்கள் செயல்பட்டாலும் இவை அனைத்திற்கும் ஒரு விஷயம் பொதுவானது. இந்நிறுவனங்கள் அனைவருமே டெல்லியைச் சேர்ந்த iPower Batteries நிறுவனத்திடம் மேட் இன் இந்தியா லித்தியம் அயன் பேட்டரிக்களை வாங்குகிறார்கள்.

“பேட்டரி, சார்ஜர் மற்றும் இதர துணைப் பொருட்களை வழங்கி வாகனங்கள் பிரிவில் சேவையளிக்கிறோம். மின்சார வாகனங்களுக்கான ஆற்றல் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மின்சார இரு சக்கர வாகனங்கள், மின் ரிக்‌ஷாக்கள், மின் ஆட்டோக்கள், மின் சைக்கிள் போன்ற பிரிவுகளுக்கான பிராடக்ட்ஸை வழங்குகிறோம்,” என்று எஸ்எம்பிஸ்டோரி உடனான நேர்காணலில் தெரிவித்தார் iPower நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் விகால் அகர்வால்.

தொடக்கம்

விகாஸ் அகர்வால், அவரது மனைவி சாவி அகர்வால் இருவரும் 2019-ம் ஆண்டு iPower தொடங்கினார்கள். முதல் ஆண்டிலேயே 50 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்தனர். விகாஸ் குடும்பம் ஏற்கெனவே ஆற்றல் தொடர்பான வணிகத்தில் செயல்பட்டு வருவதே இதற்குக் காரணம்.

விகாஸ் குடும்பத்தினர் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Computech Systems என்கிற பெயரில் இந்த வர்த்தகம் இயங்கி வருகிறது. விகாஸும் இதில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மின்சார வாகனங்கள் சந்தையில் உயர்தர பேட்டரிகளுக்கான தேவை இருப்பதை உணர்ந்தார்.

“வாகனங்களில் புதுப்பிக்க முடியாத எரிபொருளின் பயன்பாடு அதிகம். இந்த பயன்பாடு ஒருகட்டத்தில் குறையும் என்பதைப் புரிந்துகொண்டேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் வகைகளுக்கு மாறவேண்டிய அவசியம் இருப்பது புரிந்தது. மின்சார வாகனங்களே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். பேட்டரி வழங்கும் நிறுவனமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதில் பங்களிக்க விரும்பினோம்,” என்கிறார் விகாஸ்.

சேமிப்பு கொண்டும் வங்கியின் உதவியுடனும் 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் 2019-ம் ஆண்டு Computech தாய் நிறுவனத்தின்கீழ் iPower தொடங்கப்பட்டது.

“தற்போது 20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அடுத்த இரண்டாண்டுகளில் இருமடங்காக்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் விகாஸ்.

தொழிற்சாலை மற்றும் உற்பத்தித் திறன்

iPower தொழிற்சாலை ஹரியானாவின் குண்டலி பகுதியில் உள்ளது. 50,000 சதுர அடியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்புப் பணிகளும் தர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் வகையில் இதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றவாறு தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது.

“நாங்கள் வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற லித்தியம் அயன் பேட்டரிகளை வழங்குகிறோம். இவை உயர்தர செல் கொண்டு தயாரிக்கப்படுகிறது,” என்றார்.

தற்போதைய கட்டமைப்பு வசதிகளுடன் நாள் ஒன்றிற்கு 500 பேட்டரி பேக் தயாரிக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் 20 முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் 15 நிறுவனங்களுக்கு iPower சேவையளிக்கிறது.

இந்நிறுவனத்தின் ஆற்றல் தீர்வுகள் தொழிற்சாலை பேட்டரிகள், மருத்துவ உபகரணங்களுக்கான பேட்டரிகள், எடை பார்க்கும் இயந்திரங்களுக்கான பேட்டரி போன்ற பிரிவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

விற்பனைக்கு பிறகு சேவையளிக்கும் 200 மையங்களும் சார்ஜிங் மையங்களையும் அமைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

சவால்கள் மற்றும் அவற்றைக் கையாண்ட விதம்

பேட்டரி தயாரிப்பில் அனுபவம் இருந்தபோதும் iPower பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.

தொழிலாளர்கள் திறன் - இந்தியாவில் தயாரிப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளத் தேவையான திறன் தொழிலாளர்களிடம் இருக்கவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கு முறையான பயிற்சியளித்தனர். அதேபோல் தொழிலாளர்களை சர்வதேச தரத்தில் இயங்கும் பேட்டரி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி கற்றுக்கொள்ளவும் இந்நிறுவனம் ஏற்பாடு செய்தது.

அதிக விலை - தயாரிப்பின் விலை அதிகமாக இருந்தது மற்றொரு சவாலாக இருந்தது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் லித்தியன் அயன் பேட்டரியின் திறன் சிறப்பாக இருப்பினும் இதன் விலை அதிகமாக இருப்பதால் மக்களிடையே தயக்கம் காணப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பல்வேறு மானியங்களையும் திட்டங்களையும் அறிவித்ததால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டது.

பாதுகாப்பு – லித்தியம் அயன் பேட்டரிகளை முறையாகக் கையாளாமல் போனால் ஆபத்து அதிகம். சரியான சார்ஜர் பயன்படுத்தாத காரணத்தால் ஒருமுறை ஒரு வாடிக்கையாளரின் வாகனத்தில் தீப்பிடித்தது. அதிர்ஷ்ட்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் இக்குழுவினர் iPower பேட்டரிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இணைத்தனர். அத்துடன் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து டீலர்களுக்கு பயிற்சியளித்தனர்.

பெருந்தொற்று – கொரோனா பெருந்தொற்று காரணமாக வணிகம் பாதிக்கப்பட்டது. விற்பனை குறைந்தாலும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவில்லை. வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனங்கள் துறையில் சிறப்பாக செயல்படத் தேவையான தீர்வுகளை உருவாக்க ஆர்&டி-யில் கவனம் செலுத்தியது. தற்போது பெருந்தொற்று காலத்திற்கு முந்தையை விற்பனை அளவை எட்டியுள்ளது.

வருங்காலத் திட்டம்

துறையில் போட்டியாளர்கள் அதிகம் இருப்பினும் அதில் கவனம் செலுத்தாமல் தயாரிப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தில் மின்சார வாகனங்கள் பகுதியில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். Battery-as-a-service மாதிரியில் (ஸ்வாப் செய்யக்கூடிய பேட்டரி) இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

“எளிதாக ஸ்வாப் செய்யக்கூடியதாகவும் பல்வேறு ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களின் தனித்தேவைக்கேற்றதகாவும் ஸ்மார்ட் பேட்டரிகளை வழங்க இருக்கிறோம்,” என்றார் விகாஸ்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world