பதிப்புகளில்

ஏழாவது முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள சர்வர் ஜெயகணேஷ்!

YS TEAM TAMIL
10th Jun 2017
Add to
Shares
594
Comments
Share This
Add to
Shares
594
Comments
Share

"வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்...” 

என்ற பொன்மொழிக்கு உகந்த எடுத்துக்காட்டு ஜெயகணேஷ் என்பவரின் விடாமுயற்சி கதை. சிவில் சர்வீஸ் தேர்வில் ஆறு முறை தோல்வியுற்று, மனம் தளராமல் ஏழாம் முறை எழுதி அதில் தேர்ச்சி ஆகியுள்ளார் வெயிட்டர் பணியில் இருந்து கொண்டே படித்த இவர்.

ஜெயகணேஷ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வேலூர் மாவட்டம் வினவமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரின் அப்பா அங்கே ஒரு லெதர் பாக்டரியில் பணிபுரிகிறார். தாய் வீட்டில் குடும்பத்தை கவனிக்கிறார். இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உடைய ஜெயகணேஷ், குடும்பத்தின் மூத்த மகன். 8-ம் வகுப்பு வரை கிராமப்பள்ளியில் படித்துவிட்டு, அருகாமை டவுனில் 9-ம் வகுப்பு முதல் படித்தார். 

பட உதவி: iaspaper.net

பட உதவி: iaspaper.net


படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட ஜெயகணேஷ் எப்போதும் வகுப்பில் முதல் இடம் பிடிப்பார். ஏழ்மையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்றி, அப்பாவின் சுமையை குறைக்க, சீக்கிரம் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல காத்திருந்தார் அவர். அதையே தன் வாழ்க்கை இலக்காக கொண்டிருந்தார். 

10-ம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தால், அதை முடித்தவுடன் வேலை உடனே கிடைத்துவிடும் என்று சொன்னதால் அதில் சேர்ந்தார் ஜெயகணேஷ். டிப்ளோமாவை 91% மார்க்குகள் பெற்று வெற்றிகரமாக முடித்தார். அரசு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்ததால், அதில் சேர்ந்து மெக்கானிகல் இஞ்சினியரிங் படித்தார். ஜெயகணேஷின் படிப்புக்கு அவரின் தந்தை எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். 

2000-ம் ஆண்டு இஞ்சினியரிங் முடித்த ஜெயகணேஷ், வேலை தேடி பெங்களுரு சென்றார். 2500 ரூபாய் சம்பளத்தில் பணிக்கும் சேர்ந்தார். இருப்பினும் தன் கிராமத்தை சேர்ந்த பலரது ஏழ்மையை பற்றி நினைத்து கவலைப்படுவார். அவர்களுக்கு தன்னால் எப்படி உதவமுடியும் என்று எண்ணிக்கொண்டே இருந்தார். 

ஐஏஎஸ் ஆனால், ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றத்தை கொண்டுவரமுடியும் என்று முடிவு செய்து, தன் பணியை ராஜினாமா செய்தார். தன் கிராம்த்துக்கே திரும்பச்சென்று ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தார். குடும்பத்தாரின் ஆதரவோடு கடுமையாக படித்தாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இரு முறை முதற்கட்ட தேர்விலேயே தோல்வியடைந்தார். 

பின்னர் சென்னையில் உள்ள கோச்சிங் மையம் பற்றி தெரிந்து கொண்ட ஜெயகணேஷ், அதில் பயிற்சி எடுத்தால் மட்டுமே தன்னால் சுலபமாக ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்ளமுடியும் என்று தெரிந்து கொண்டார். சென்னை வந்த அவர் தங்க வசதியுடன் இருந்த அந்த மையத்தில் சேர்ந்து தீவிரமாக பரிட்சைக்கு தயாரானார்.

கைச்செலவுக்கு வருமானம் தேவைப்பட்டதால், ஒரு கேண்டினில் பகுதிநேர பணியாக பில் போடுவது மற்றும் சர்வர் பணியும் செய்தார். வேலை மற்றும் படிப்பை மட்டுமே கவனமாக செய்து தன் கனவை அடைய பாடுபட்டார்.

இத்தனை முயற்சி எடுத்தும் பலமுறை முதற்கட்ட தேர்வில் தோல்வியடைந்தார். ஆறாவது முறை முதற்கட்ட தேர்வு மற்றும் மெயின் பரிட்சையில் பாஸ் செய்தும் நேர்காணலில் தோல்வி அடைந்தார். இத்தனையும் தாண்டி மனம் தளராமல், ஏழாம் முறை முயற்சி செய்தார். 

இம்முறை தேர்வுகளில் பாஸ் செய்த அவர், நேர்முகத்தேர்வுக்கு டெல்லி சென்றார். அங்கே அரசியலுடன் சினிமா, காமராஜர், பெரியார் மற்றும் தமிழ் மொழி இதற்கான சம்பந்தம் பற்றி கேட்டனர். கடுமையாக தயார் செய்து கொண்டு போன ஜெயகணேஷ், நன்றாக பதிலளித்து நேர்காணலிலும் தேர்ச்சி அடைந்தார். 

ஏழாம் முறை ஐஏஎஸ் தேர்வு ரிசல்டுக்கு காத்திருந்தபோது தனது எண்ண ஓட்டத்தைப் பற்றி ecxamrace.com தளத்திடம் பகிர்ந்து கொண்ட ஜெயகணேஷ்,

“அன்று நான் அதிக டென்சனுடன் இருந்தேன். என் கனவு நிறைவேறுமா இல்லையா என்று தெரியவில்லை. நான் இதற்கு தகுதியானவன் என்று நினைத்தால் என்னை பாஸ் செய்ய வையுங்கள் என்று கடவுளிடம் பிரார்தித்தேன். மைதானத்தில் அமர்ந்து தியானித்த நான் பாஸ் செய்தால் என்ன செய்வேன், இல்லையேல் என்ன செய்யப்போகிறேன் என்று யோசித்தேன். கடந்த ஏழு ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்று மட்டுமே கனவு கண்டு வாழ்ந்தேன்,” என்றார்.

156-வது ரேன்கோடு ஐஏஎஸ் பாஸ் செய்த ஜெயகணேஷின் விடாமுயற்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவரில் கனவை நினைவாக்க வாழ்க்கையில் நம்பிக்கையை என்றுமே இழக்கக்கூடாது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. மூலக்கட்டுரை உதவி: www.iaspaper.net)


Add to
Shares
594
Comments
Share This
Add to
Shares
594
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக