மின் கட்டணத்தை கணக்கிட்டு குறைக்கும் கருவியை உருவாக்கிய சென்னை இளைஞர்!

11 CLAPS
0

பட்டப்படிப்பு முடித்த பெரும்பாலான இளைஞர்கள் படிப்புக்கான வேலைகளை செய்வதைவிட சுயதொழிலில் இறங்கி விடுங்கின்றனர். ஆனால் இந்த இளைஞர் தனது கல்லூரியின் போது கண்டுபிடித்த ஓர் கண்டுபிடிப்பை வைத்தே சுயதொழில் துவங்கி வளர்ந்துள்ளார்.

மினியன் லாப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கோகுல் ஸ்ரீநிவாஸ், 2015ல் தன் கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்டிற்காக மினியன் என்னும் ஆற்றல் கண்காணிப்புக் கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவி ஆற்றல் நுகர்வு வடிவங்களை ஆய்வு செய்ய உதவுகிறது அதாவது இந்த கண்காணிப்பு சாதனத்தை நிறுவுவதன் மூலம் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சார சாதனங்களின் செலவினங்களை தனித்தனியாக கணக்கிட முடியும். இதன் மூலம் மின்சார செலவினை குறைக்கலாம்.


இக்கருவியை இணையத்துடன் இணைத்துக் கொள்ளலாம், இதன் மூலம் வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் ஆற்றல் நுகர்வு முறைகள் மற்றும் சாதனங்களின் பயன்பாட்டை தெரிந்துக்கொள்ளலாம்.

“பொறியியல் படிப்பு இறுதி ஆண்டில் 400க்கும் மேலான நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டுள்ளேன், அதன் பின் அமேசான் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்றேன். நிறுவனங்கள் மதிப்பெண்களை பார்க்கிறார்களே தவிரே திறமையை அல்ல...” என பேசத் துவங்குகிறார் கோகுல்.

போட்டியில் வெற்றிபெற்றதால் இறுதி ஆண்டிலே அமேசானில் பணிப்புரியத் துவங்கிய கோகுல், கல்லூரி படிப்பை முடிக்க பிராஜக்ட் ஒன்றை உருவாக்க தேவை இருந்தது. அப்பொழுது நண்பர்களுடன் பேசி உருவானதே இந்த மினியன் கருவி. அதனை தொடர்ந்து கல்லூரி ஆண்டு முடித்தப்பின் தனது அலுவலக நண்பர்கள் மூலம் ஐஐடி பாம்பே உடன் ஓர் இணைப்பு கிடைக்க அதன் மூலம் மேக் இன் இந்தியா நடத்திய இந்தியாவின் 10 கண்டுப்பிடிப்பாளார்களை தேடும் திட்டத்தில் இவரது கண்டுபிடிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

“10 ஆயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இடம் பெற்ற போதும் முதல் 10ல் எனது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதன் மூலம் ஐஐடி பாம்பே லேபில் 10 நாள் செலவழித்து முழு பயன்பாட்டு கருவியாக உருவாக்கினோம்.”

உருவாக்கிய தங்களது கண்டுபிடிப்பை ஜனவரி 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முன்பு வழங்கி இந்தியாவின் இரண்டாவது சிறந்த கண்டுபிடிப்பு என விருதை பெற்றுள்ளது கோகுலின் குழு. அதனை தொடர்ந்து பல அங்கீகாரங்களை இவரது கண்டுபிடிப்பு பெற்றுள்ளது.


நிறுவனர்கள்: கோகுல் ஸ்ரீனிவாஸ் (இடது), ராம் பிரவீன் (வலது)

பல விருதுகள் பல வெற்றிகளை கண்டாலும் இதை வைத்து சுயதொழில் துவங்கலாம் என்ற எண்ணம் தோன்றவில்லை என குறிப்பிடுகிறார் கோகுல். ஆனால் தனது வீட்டில் ஏற்பட்ட ஓர் நிகழ்வால் தொழில் துவங்கும் யோசனை புலப்பட்டதாக தெரிவிக்கிறார்.

“வெளியூர் செல்லும்போது வீட்டில் இருந்த ஹீட்டரை ஆஃப் செய்ய மறந்துவிட்டோம் ஒரு வாரம் ஹீட்டர் ஆனில் இருந்ததால் கரண்ட் பில் அதிகமாக வந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு என் அம்மா விளையாட்டாக மினியன் கருவியை நம் வீட்டிலே பொருத்தலாம் என்றார்.”

அதன் பின் தனது வீட்டின் மின்சார செலவை கணக்கிட தனது வீட்டில் அவரது கருவியை பொருத்தினார். அதனை தொடர்ந்து பல உறவினர்கள் கேட்க இதை தொழிலாக துவங்கி விற்கலாம் என முடிவு செய்துள்ளார் கோகுல். ஆனால் கருவியை தயாரிக்க முதலீடு தேவை என்பதால் தனது சம்பளத்தை வைத்து வங்கி கடன் பெற்று தயாரிக்க துவங்கியுள்ளார். 

கோகுல் மற்றும் அவரின் நண்பர் ராம் பிரவீன் இருவரும் சேர்ந்து ‘மினியன் லேப்ஸ்’ என்று நிறுவனமாக தொடங்கி, மினியன் கருவிகளை தயாரிக்கத் தொடங்கினர். இதுவரை சுமார் 232 கருவிகளை 120 வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளதாக கோகுல் தெரிவித்தார்.

முதலில் 120 கருவிகளை தயாரித்துள்ளார், ஆனால் மொத்த தயாரிப்பும் 3 மாதத்தில் விற்றுவிட்டது. வந்த லாபத்தை வைத்து மேலும் பணம் போட்டு மீண்டும் 300, 400 கருவிகளை தயாரித்துள்ளார். அமேசான், இ-பே, முகநூல் மூலம் தங்களது தயாரிப்பை விற்றனர். அதனை தொடர்ந்து துபாய் சிங்கப்பூர் நாடுகளிலும் இவரது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


“இந்த அங்கிகாரம் மூலம் பெங்களூரில் அடைக்காக்கும் மையம் அமைத்திருக்கும் சுபாஷ் என்பவர் எங்கள் கண்டுபிடிப்புக்கு முதலீடு செய்ய முன் வந்தார். முதலீடு பெற்றப்பின் 2017 ஜூலையில் தனி ஸ்டார்ட்-ஆப் ஆக எங்கள் நிறுவனம் செயல்படத் துவங்கியது.”

ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் டாலர் வரை வணிகம் செய்துள்ளதாக தெரிவிக்கிறார் கோகுல். நிறுவனமாக தொடங்கியப்பின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் வீடுகளுக்கு வழங்காமல் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்துள்ளனர். ஆனால் வீடுகளில் இருந்தும் பல கோரிக்கைகள் வருவதால் விரைவில் குறைந்த விலையில் மினியன் ஹோம் என்று தனியாக தயாரிக்க வேலைகள் நடைபெறுவதாக தெரிவிக்கிறார். இதற்கான முதலீட்டை தேடி வருவதாக தெரிவிக்கிறார் கோகுல்.

Latest

Updates from around the world