பதிப்புகளில்

அறிவியலை தமிழில் அலசும் நிரோஷன் தில்லைநாதனின் ‘அறிவுடோஸ்’

உலகின் முதல் தமிழ் அறிவியல் நிகழ்ச்சி 

22nd Mar 2016
Add to
Shares
214
Comments
Share This
Add to
Shares
214
Comments
Share

‘கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்ற குதர்க்கமான கேள்விக்கு இன்னும் பதில் தேடிக்கொண்டு தான் நாம் இருக்கிறோம். இது போல பதில் அறியாத பல அறிவியல் கேள்விகளுக்கு தனது மூளையைக் கசக்கி பிழிந்து, பல புத்தகங்களை அலசி ஆராய்ந்து விடைகளையறிந்து, இணையத்தில் பகிர்ந்து அசத்துகிறார் ‘சை-நிரோஷ்’ (Scinirosh) இணையதள சேனலின் சொந்தக்காரர் நிரோஷன் தில்லைநாதன். 

அறிவியல் களஞ்சியம் என்ற சொல்லுக்கு உதாரணமாகவே இவரைக் கூறலாம். அறிவியல் துணுக்குகளை பகிர்வதற்காக 2014-ஆம் வருடம் இவர் தொடங்கிய ‘அறிவுடோஸ்’ பக்கத்திற்கு இப்பொழுது ‘1,75,577 லைக்ஸ்’. இதுவரை கிட்டத்தட்ட 23,000 பேரை சென்றடைந்திருக்கிறது இவரது முகநூல் பக்கமான ‘சை-நிரோஷ்’. விரல் நுனியில் அறிவியல் உலகத்தை கொண்டுவர முயலும் இவரது ‘தி சை-நிரோஷ் ஷோ’ (The SciNirosh Show) வின் யூ-ட்யுப் சேனலை சுமார் 4000 பேர் தொடர்கிறார்கள். இவர் இந்த நிகழ்ச்சியை தமிழில் அளிப்பதுதான் இதன் முக்கியச் சிறப்பு.

image


ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்? நமது பூமி ஒரு கிராமம் ஆனால் எப்படி இருக்கும்? பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? போன்ற யாரும் எளிதில் யோசிக்காத அறிவியல் சந்தேகங்களை தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான பதிலை சுவாரஸ்யமான காணொளியாக பதிவு செய்து ‘தி சை-நிரோஷ் ஷோ’வின் மூலமாக பதிகிறார் நிரோஷன் தில்லைநாதன்.

தமிழ் மேல் ஈர்ப்பு:

பெயரிலிருந்தே இவர் ஒரு இலங்கைத் தமிழர் என்பது புலப்படுகிறது. ஜெர்மனியில் முதுகலை பட்டம் பெற்று, பிஹெச்டி-க்கான ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு, தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்து வருகிறார் நிரோஷன் தில்லைநாதன். கைக்குழந்தையாக இருக்கும்போதே இலங்கையிலிருந்து ஜெர்மனி நாட்டிற்கு குடும்பத்தோடு இடம் மாறி போயிருந்தாலும், இவர் தமிழுடனான ஈர்ப்பை விடவில்லை. எப்படி என்று கேட்டால் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல், எல்லாப் புகழும் என் பெற்றோருக்கே!’ என்கிறார். எப்பொழுதும் வீட்டில் தமிழிலேயே பேச வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தனராம் இவரது பெற்றோர். அது மட்டுமில்லாமல்,

 “ஐரோப்பிய நாடுகளில் ‘தமிழாலயம்’ என்ற தமிழ் பள்ளிகள் பல இருந்தன. நான் பதினொரு வருடங்கள் தமிழ் வகுப்புகளில் சென்று படித்தேன். அதன் பிறகு ஐந்து வருடங்கள் அங்கு ஆசிரியராகவும் பணி புரிந்தேன். அப்பொழுதெல்லாம் மனதில் தோன்றியதே இல்லை.. நான் தமிழில் இப்படி ஒரு அறிவியல் பயணத்தை மேற்கொள்வேன் என்றோ, இதன் மூலம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களோடு இணையும் நாள் என் வாழ்வில் வரும் என்றோ ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை.” என்று பூரிக்கிறார் நிரோஷன்.அறிவியலுடன் ஈர்ப்பு:

குழந்தைப்பருவத்தில் வானியலும், வேற்றுகிரக மனிதர்களும் நிரோஷனுக்கு மிகவும் பிடித்த அறிவியல் விஷயங்களாக இருந்தன.

“என்னுடைய பன்னிரண்டாவது வயதில் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கினோம். அப்பொழுது தான் எனது அறிவியல் ஆர்வம் பெருக ஆரம்பித்தது. அந்த கணினி உலகம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அன்று தான் எனது தீவிரமான அறிவியல் வேட்டை தொடங்கியது. நிறைய அறிவியல் புத்தகங்கள் படிக்கத் துவங்கினேன்.”

அறிவியல் ரோல்-மாடல்:

ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ஐ கண்டு வியக்காமல் இருக்க முடியுமா? சமீபத்தில் கண்டறியப்பட்ட புவியீர்ப்பு அலைகளை பற்றி நூறு வருடங்களுக்கு முன்பே அவர் யூகித்து எழுதியிருந்தார். அவரது அறிவியல் கூற்றுக்கள் ஒரு விதத்தில் நிரோஷனின் அறிவுப்பசிக்கு தீனியாக இருந்து வந்தன.

அறிவில் மட்டுமில்லாமல் மனிதத்திலும் திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் இவருக்கு ஒரு உந்துதலாக இருந்து வருகிறார்.

‘தி சை-நிரோஷ் ஷோ’ உருவான கதை:

நமது மூளையில் எவ்வளவு பதிவு செய்ய முடியும்? என்ற கேள்வியில் தொடங்கியது தான் இந்த பயணம். இதற்கான பதிலை புத்தகங்கள் படித்தும், இணையத்தை அலசியும் கண்டுபிடித்தார் நிரோஷன். ஆனால் அதை அவரது நண்பர்களுடனும் பகிர வேண்டும் என்ற ஆவலில், ஒரு சிறு கட்டுரையாக எழுதி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அலாதியான வரவேற்பு கிடைத்ததை பார்த்து ஆச்சரியப்பட்ட நிரோஷன், இன்னும் பல கேள்விகளுக்கான விடையைத் தேடி பதிய துவங்கினார். அது தீவிரமாக ‘ஷேர்’ செய்யப்படுவதை பார்த்து, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறிவியலில் உள்ள ஆர்வத்தை உணர்ந்த நிரோஷன், தமிழில் எளிதில் புரியக்கூடிய அளவுக்கு அறிவியல் சார்ந்த தகவல்கள் இணையத்தில் அவ்வளவாக இல்லை என்பதை கண்டறிந்தார். அன்று அவர் உருவாக்கிய முகநூல் பக்கம் தான் ‘அறிவுடோஸ்’.

image


“இந்த பக்கத்தில் தினமும் அறிவியல் துணுக்குகளை சிறு கட்டுரைகளாக பகிரத் தொடங்கினேன். பெரும் அளவில் வரவேற்பு கிடைத்தது. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான பேர் அறிவுடோஸ் பக்கத்தை தொடர ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிலருக்கு தமிழ் படிப்பதில் சிரமம் இருப்பதாக விமர்சனம் கிடைத்தது. கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னார்கள். 

ஆனால் எனது நோக்கமே தமிழில் அறிவியலை வளர்க்க வேண்டும் என்பது தான். எனவே இந்த தடையை உடைக்க ஒரே வழி அனைவரும் கண்டு, புரிந்துக்கொள்ளும் வகையில் தமிழில் காணொளிகள் தயாரிப்பது தான் என்ற ஐடியா தோன்றியது. ‘தி சை-நிரோஷ் ஷோ’வின் முகநூல் பக்கத்தையும், யூ-டியூப் சேனலையும் துவங்கினேன். 

கேமரா முன் நின்ற அனுபவமே இல்லாமல், ஒரு துளி கூட தைரியம் இல்லாமல் தொடங்கினேன். இன்று என்னைச் சுற்றி இருப்பவர்களும், மக்களும் தரும் ஆதரவால், வாரத்திற்கு ஒரு காணொளி என்ற வேகத்தில் பயணிக்கிறேன்.

image


எல்லோருக்குமான அறிவியல்:

அறிவியல் உலகம் பல புதுமைகளும், விந்தைகளும் நிறைந்த ஒன்றாக இருந்தாலும், பலரும் அதை ஒரு கடினமான களமாக பார்க்கிறார்கள். “இந்த உணர்வை மாற்ற தான் நான் முயல்கிறேன். அறிவியல் உலகம் எல்லோருக்குமானது. குழந்தைகள் கூட புரிந்துக்கொள்ள கூடிய நடையில், மொழியில் எனது காணொளிகளை வழங்குகிறேன். உலகின் பல மூலைகளில் வாழும் பெற்றோரும், பாட்டி, தாத்தாக்களும் அவரது பேரன், பேத்திகள் எனது நிகழ்ச்சியை ஆர்வமாக காணும் புகைப்படங்களை எனக்கு அனுப்புகிறார்கள். அதை பார்க்கும்போது எனது மகிழ்ச்சி எல்லை மீறுகிறது.

‘தி சை-நிரோஷ் ஷோ’விற்கு கிடைக்கும் வரவேற்பு:

லண்டனில் ஒளிபரப்பாகும் ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சியில் ‘தி சை-நிரோஷ் ஷோ’ காலையில் ஒளிபரப்பாகிறது. பல ஊடங்கங்கள் எனது இந்த முயற்சியை உலகிற்கு தெரியப்படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள். இவையனைத்தும் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. 

இப்பொழுதெல்லாம் எனது காணொளிகளுக்கு '100000 வியூஸ்' வரை கிடைக்கிறது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களால் இது சாத்தியமானது. எனது நிகழ்ச்சிக்கு இன்னும் ஸ்பான்சர்ஸ் கிடைத்தால், இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் ஆர்வம் என்னிடம் உள்ளது.

அறிவியல் அற்புதம்:

அறிவியலால் மட்டுமே உங்களை குழந்தையைப் போல கனவு காண வைக்க முடியும். அறிவியலால் மட்டும் இயங்கும் ஒரு உலகை எதிர்காலத்தில் கற்பனை செய்தால், அதில் என்னென்ன இருக்கும் என்று நிரோஷனிடம் கேட்டப்போது, 

“கம்ப்யூட்டரில் செய்வது போல மூளைக்கு நேரடியாக பதிவேற்றமும், பதிவிறக்கமும் செய்ய முடிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? இன்னொரு ஆசையும் உள்ளது. அது தான் ‘டைம்-ட்ரேவல்’. காலத்தில் பின்னோக்கியும், முன்னோக்கியும் பயணிக்க இயல வேண்டும்.. பிறகு, வேற்று கிரகங்கள் பலவற்றை கண்டுபிடிக்க வேண்டும்.. இதோடு நிறுத்திகொள்கிறேன். எனக்கு வேற அறிவியல் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமா... எனவே எனது அறிவியல் கற்பனைகள் நீண்டு கொண்டே போகும்..” 

என்று நிறைவு செய்கிறார் நிரோஷன். சரி.. முதலில் எது வந்தது - கோழியா அல்லது கோழிமுட்டையா? என்ற கேள்விக்கு நீங்களாவது பதில் கண்டுபிடித்தீர்களா என்று தைரியமாக நிரோஷனிடம் கேட்டால், இதோ இதைப் பாருங்கள் என்று தனது யூட்யூப் ஷோவை புன்னகைத்துக் கொண்டே நமக்கு திறந்து காண்பிக்கிறார்.


‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்று நமக்கு உணர்த்தும் தமிழில் அறிவியலை பரப்ப நினைக்கும் நிரோஷனின் இணைய முயற்சி மேன்மேலும் வளர தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் வாழ்த்துக்கள்.

தி சை-நிரோஷ் ஷோ முகநூல் பக்கம் தி சை-நிரோஷ் ஷோ யூ-டியூப் சேனல் 

அறிவுடோஸ் முகநூல் பக்கம் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'கடம்' இசையில் சாதனை படைக்கும் குமரி இளைஞர் அப்துல் ஹலீம்!

Add to
Shares
214
Comments
Share This
Add to
Shares
214
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக