கூகுள் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய பெண்கள் இமோஜிகள்!

  By cyber simman
  May 12, 2016, Updated on : Thu Sep 05 2019 07:17:15 GMT+0000
  கூகுள் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய பெண்கள் இமோஜிகள்!
  • +0
   Clap Icon
  Share on
  close
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  இமோஜிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? இணையம் மற்றும் மொபைல் சார்ந்த உரையாடல்களில் உணர்வுகளை உருவங்களாக எளிதாக பகிர்ந்து கொள்ள வழி செய்யும் இமோஜிகள் சுவாரஸ்யமானவை என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் இவை சுவாரஸ்யமானவை மட்டும் தானா? நிச்சயமாக இல்லை. இமோஜிகள் புதிய இணைய மொழியாக உருவாகி இருக்கின்றன. ஆனால் இன்னமும் மேம்பட வேண்டிய மொழியாக கருதப்படுகிறது. அதனால் தான் இமோஜி பிரியர்கள் இந்த மொழியை மேலும் சமத்துவம் மிக்கதாக மாற்றும் வகையில் புதிய இமோஜிகளை பரிந்துரைத்து வருகின்றனர்.

  இந்த பின்னணியில், கூகுள் பொறியாளர்கள், பெண்கள் தொடர்பான 13 வகையான புதிய இமோஜிகளை உருவாக்கி பரிந்துரை செய்திருக்கும் செய்தியை பார்ப்பது பொருத்தமாக இருக்கும். பணியிடங்களில் பெண்களின் நிலையை மேலும் சிறந்த முறையில் பிரதித்துவப்படுத்துவதற்காக இந்த புதிய இமோஜிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இமோஜிகளின் மொழியை மேலும் செழுமைப்படுத்தும் செயலாக இது அமையும்.

  புதிய இமோஜிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும், யூனிகோடு கூட்டமைப்பின் பரிசிலனைக்குப்பிறகே இவை பயன்பாட்டிற்கு வரும் என்றாலும் கூட, இந்த இமோஜிகளுக்கான பரிந்துரையே கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.

  image


  முதல் விஷயம் இமோஜிகள் சுவாரஸ்யமானவை மட்டும் அல்ல: அவை சிந்தனைக்குறியவை. டிஜிட்டல் உணர்வு வடிவங்களாக அமையும் இமோஜிகள் உருவங்களாக உணர்வுகளை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் அந்த அடையாளப்படுத்தல் சார்பு நிலை கொண்டதாகவோ அல்லது சமத்துவத்திற்கு எதிரானதாகவோ அமைந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அதனால் தான் மனிதர்களை குறிக்கும் இமோஜிகள் வெள்ளை நிறத்தவர்களின் அடையாளமாக மட்டும் இல்லாமல், உலகின் பலதரப்பட்ட மனிதர்களை பிரதிந்ததுவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என கருதப்படுகிறது. இது தொடர்பான மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

  இமோஜிகள் சமத்துவத் தன்மை பெற்றிருக்கும் வகையில் அதன் வார்த்தைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த கருத்தையும், விவாதத்தையும் மனதில் கொண்டே புதிய இமோஜிகளுக்கான பரிந்துரை செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டு அவை யூனிகோடு கூட்டமைப்பின் அங்கீகாரம் பெறுகின்றன.

  அந்த வகையில், இமோஜி மொழியில் பெண்கள் தொடர்பான சமத்துவத் தன்மையை கொண்டு வரும் வகையில் கூகுள் பொறியாளர்கள் புதிய இமோஜிகளை உருவாக்கியுள்ளனர். இதற்கான தேவையையும், நியாயத்தையும் எளிதாக புரிந்து கொள்ளலாம். இணைய உரையாடலில் தொழிலாளர் அல்லது உயரதிகாரிக்கான உருவத்தை பயன்படுத்தும் போது அது ஆண்களின் உருவமாக இருப்பது சரியானதா என்ன? அங்கு பாலின சமத்துவம் வேண்டும் தானே!

  பெண்கள் பணியிடத்தில் பெரும் போராட்டத்திற்கு பின் ஆணுக்கு பெண் சமம் என வந்து நிற்கின்றனர். சி.இ.ஓக்கள் முதல் விஞ்ஞானிகள் வரை பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை தான். ஆனாலும் என்ன பொது வெளியிலும், கருத்து பரிமாற்றத்திலும் பெண்கள் தங்களுக்கான இடத்தை போராடி பெற வேண்டியிருக்கிறது. விஞ்ஞானி என்று பேச்சு வரும் போது அதில் பெண்களும் அடங்குவர் என்பதை பெண்கள் நினைவுப்படுத்த வேண்டியிருகிறது.

  பெண்களை அழகுடன் மட்டும் தொடர்பு படுத்திப் பார்க்காமல், திறமையுடனும் ஆற்றலுடனும் பார்க்க வேண்டும் எனும் கருத்தை பாலின சமத்துவத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த, பெண் விஞ்ஞானிகள் தங்களை பெருமையுடன் முன்னிறுத்திக்கொண்ட புகைப்படங்களை டிவிட்டரில் அலையென பகிர்ந்து கொண்ட நிகழ்வை இங்கே நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

  பொது புத்தியில் படிந்திருக்கும் பெண்கள் தொடர்பான வழக்கமான, பிற்போக்குத்தனமான எண்ணங்களை தகர்க்கும் வகையிலான ஹாஷ்டேக் மூலம் மேலும் பல சம்பவங்களின் போது இணையத்தில் குறும்பதிவு அலைகள் எழுந்திருக்கின்றன. இதற்காக என்றே, ஹாஷ்டேக் பெண்ணியம் என்ற பதம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

  image


  இந்த பின்னணியில், இணைய உரையாடலில் நாளுக்கு நாள் பிரபலமாகி கொண்டிருக்கும் இமோஜி மொழியில் பணியிடத்தில் பெண்களுக்கான சரியான பிரதிநித்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கூகுள் பொறியாளர்கள் ரச்சேல் பீன், அக்ஸ்டின் பாண்ட்ஸ், நிக்கோல் புளுவல் மற்றும் மார்க் டேவிஸ் இணைந்து, 13 புதிய பெண்களுக்கான இமோஜிகளை உருவாக்கியுள்ளனர். இந்த உருவங்களை ஆழமான ஆய்வுக்குப்பிறகு மிக கவனமாகத் தேர்வு செய்துள்ளனர். விவசாயம், கல்வி, தொழிற்சாலை, அறிவியல், உணவு சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை குறிக்கும் வகையில் இந்த இமோஜிகள் அமைந்துள்ளன. இதே துறைகளில் ஆண்களை குறிப்பதற்கான இமோஜிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

  இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், உலகில் பெண்களின் பங்களிப்பை சரியாக அடையாளம் காட்டும் வகையிலும் இவை அமைந்துள்ளதாக கூகுள் குழு தெரிவித்துள்ளது.

  இந்த இமோஜிகள் பரிந்துரைகள் மட்டுமே. யூனிகோட் கூட்டமைப்பு அவற்றை முழுவதும் ஏற்கலாம். அல்லது மாற்றங்களைச் செய்யலாம். நிராகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் நம்முடைய இணைய மொழி சமத்துவம் மிக்கதாக இருப்பதன் அவசியத்தை இவை உரக்க வலியுறுத்துகின்றன் என்பதை மறுப்பதற்கில்லை.

  கூகுல் பொறியாளர்கள் இமோஜி பரிந்துரை

  இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

  தொடர்பு கட்டுரை:

  கூகுள் தேடல்– அறிந்ததும் அறியாததும்!