கோவாக்சின் தடுப்பூசி லேசானது முதல் தீவிர தொற்றுக்கு எதிராக 78% பலன் அளிக்கிறது – பாரத் பயோடெக்!

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால அறிக்கையின்படி லேசான, மிதமான மற்றும் தீவிர கோவிட் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 78% பலனளிப்பதாகவும் தீவிர தொற்றுக்கு எதிராக 100% பலனளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 CLAPS
0

கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவும் மிகப்பெரிய அரண் தடுப்பூசி. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இரண்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஒன்று பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் Covaxin. மற்றொன்று சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.  

இந்த பரிசோதனையின் இடைக்கால அறிக்கையை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான, மிதமான மற்றும் தீவிர கோவிட் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 78% பலனளிப்பதாகவும் தீவிர தொற்றுக்கு எதிராக 100% பலனளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியானது நோய் அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 70% பலனளிப்பதுடன் தொற்று பாதித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதையும் குறைக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

“கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களிடையே பரிசோதனை செய்ததில் சிறப்பாக பலனளிப்பதை ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன. தீவிர கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையைக் குறைக்கிறது. அதேபோல் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் நிலையில் மற்றவர்களுக்கு பரவுவதும் குறைகிறது,” என்கிறார் பாரத் பயோடெக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா எல்லா.

கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில் 18-98 வயதுடைய சுமார் 25,800 பேர் பங்கேற்றனர். இரண்டாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்டு 14 நாட்கள் கழித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் ஆராய்ச்சியாளர்களின் அயராத உழைப்பிற்குப் பலன் கிடைத்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி பெரும்பாலான சார்ஸ் கொரோனா வகைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்கிறார் சுகாதார ஆய்வுத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா.

Latest

Updates from around the world