27 ஆண்டுகால திருமண பந்தத்துக்கு முற்றுப்புள்ளி: விவாகரத்தை அறிவித்த பில்-மெலிண்டா கேட்ஸ் தம்பதி!

தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என அறிவிப்பு!
7 CLAPS
0

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகப் பணக்காரருமான பில் கேட்ஸ் இன்று தனது மனைவியை பிரிவதாக அறிவித்துளளார். இது தொடர்பாக இருவரும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,

"கடந்த 27 ஆண்டுகளில் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம். இதை எங்களால் நம்ப முடியவில்லை. இதேபோல், உலகம் முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி அதனை உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ வழிவகை செய்து வந்திருக்கிறோம்.

”தொடர்ந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். ஆனால், எங்களது திருமண வாழ்க்கையை இந்த தருணத்தில் முடித்துக் கொள்ள ஒன்றாக முடிவு செய்துள்ளோம். வாழ்வின் அடுத்த கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நம்பிக்கை இழந்துவிட்டோம்," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் தம்பதி விவாகரத்து முடிவை அறிவித்தாலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக திட்டங்களுக்கு இந்த அறக்கட்டளை தொடர்ந்து நிதியளிக்கும் எனத் தெரிகிறது.

65 வயதான பில்கேடஸ் 1975ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அவர், 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகி, தனது அறக்கட்டளை மூலம் உலகமெங்கும் தொண்டு செய்து வருகிறார். முன்னதாக பில் கேட்ஸ் மெலிண்டாவை 1987-ம் ஆண்டு சந்தித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்த அவரை 1994-ம் ஆண்டு கரம் பிடித்தார் பில் கேட்ஸ். இதற்கிடையே, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world