சிறைக் கைதிகள் கைமணத்தில் பிரியாணி: ’ஸ்விக்கி’யில் விற்பனை!

இந்தியா முழுவதும் உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விக்கியில், சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்படும் உணவுகளும் கிடைக்கின்றன தெரியுமா? அதுவும் 300கிராம் பிரியாணி, லெக் பீஸ், சிக்கன் கிரேவி, 3 சப்பாத்தி, கேக், சாலட், ஊறுகாய், தண்ணீர்பாட்டில், ஒரு வாழை இலை அடங்கிய ‘ஃப்ரீடம் காம்போ லன்ச்’ வெறும் ரூ127!

16th Jul 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைப்பட்டு கிடக்கும் சிறைக்கைதிகள் விடுதலையாகி வெளி உலகிற்கு வருகையில் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில், சிறையில் அவர்களுக்கு பல்வேறு சிறுதொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நாடுமுழுவதும் உள்ள சிறைவாசிகள் தயாரிக்கும் தயாரிப்புகள், மக்களிடமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விய்யூர் மத்திய சிறைச்சாலை கைதிகளால் தயாரிக்கப்படும் உணவுகள் சமீபத்தில் ஸ்விக்கியில் விற்பனை செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நன்வரவேற்பை பெற்றுள்ளது.


கேரளாவில் உள்ள விய்யூர் சிறைச்சாலையில் கைதிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி சிறைக்குள் ஒரு கைப்பந்து குழு, இசைக்குழு, மற்றும் ஃப்ரீடம் மெலோடி ரேடியோ ஆகிய புதுமையான முயற்சிகளும் சிறைக்கைதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவே கலக்கலான ‘பிரியாணி காம்போ’ ஆன்லைன் விற்பனை.

உணவு டெலிவரி செய்யும் பிரபல ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கியுடன் இணைந்து ஆன்லைனில் பிரியாணி விற்பனையைத் தொடங்கியுள்ளது சிறைச்சாலை. 300கிராம் பிரியாணி, லெக் பீஸ், சிக்கன் கிரேவி, 3 சப்பாத்தி, ஒரு கேக், சாலட், ஊறுகாய், 1லி தண்ணீர்பாட்டில் மற்றும் ஒரு வாழை இலை அடங்கிய ‘ஃப்ரீடம் காம்போ லன்ச்’-ஐ வெறும் 127ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கஸ்டமர்களுக்கு வாட்டர் பாட்டில் வேண்டாமெனில் இதே காம்போ பேக் ரூ117 மட்டுமே!
Biriyani

கடந்த சில ஆண்டுகளாக சிறைக் கைதிகள் ‘ஃப்ரீடம் ஃபுட் பேக்டரி’ என்ற கேன்டீனை நடத்தி வருகின்றனர். இப்போது அவர்களது சேவைகள் பரந்த நுகர்வோர் தளத்தை எட்டியுள்ளது.

தயாரிப்பு தொடங்கி பேக்கிங் வரை சகலமும் சிறைவாசிகளாலே மேற்கொள்ளப்படுகிறது. ‘இகோ ப்ரெண்ட்லி’ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் சிறைக் கைதிகள் தயாரித்த காகித பைகளிலே உணவு பார்சல்கள் வழங்கப்படுகின்றன. கைதிகளால் தயாரிக்கப்படும் உணவானது, சிறைச் சாலையிலிருந்து 6 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருந்து ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்விக்கி நிறுவனம் மூலம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இச்சேவையை அறிமுகப்படுத்திய சிறைச்சாலைக்கு கேரள தேசம் தொடங்கி இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இது குறித்து விய்யூர் மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு நிர்மலானந்தன் பிடிஐ- யிடம் கூறுகையில்,

“2011ம் ஆண்டு முதல் நாங்கள் சப்பாத்திகளை தயாரித்து விற்று வருகிறோம். விய்யூர் மத்திய சிறைதான் வணிக அளவில் சப்பாத்திகளை தயாரிக்கத் தொடங்கியது. ஆன்லைனில் விற்பனையை தொடங்குவதற்கான யோசனையை சிறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தான் கொடுத்தார். உணவின் தரம் மற்றும் அதன் மலிவான விலையால் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டதால், விற்பனையை அதிகரிப்பதற்கும் கைதிகளை ஊக்குவிப்பதற்கும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.”

விய்யூர் சிறையில் இருந்து பல்வேறு பிரியாணிகள், அசைவ கறிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் பிற டிஷ்களும் நாங்கள் ஏற்கனவே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் இப்போது ஆன்லைனில் விற்பனை செய்யத் துவங்கியதால் பிரியாணி காம்போவை விற்க முடிவு செய்துள்ளோம். மக்களின் கருத்தையும், வரவேற்பையும் அறிந்த பின்னர் கூடுதல் டிஷ்களும் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்போது, சிறைச்சாலையில் நாளொன்றுக்கு 25,000 சப்பாத்திகளும், 500 முதல் 700 பிரியாணிகளும் விற்கிறது. இவையனைத்தும் சிறை அதிகாரிகளால் மேற்பார்வையில் சுமார் 100 கைதிகளால் தயாரிக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.

அண்மையில், அதிநவீன உபகரணங்களுடன் ரூ.50 லட்சம் செலவில் ஒரு புதிய சமையலறையும் விய்யூர் சிறையில் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெற உணவுப் பொட்டலங்களில் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. குக்கிங்கில் ஈடுபடும் கைதிகளுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.150 வழங்கப்படுகிறது.

மேலும், உணவு வணிகத்தில் கிடைக்கும் வருவாய் சிறைச்சாலைகளை புதுப்பிக்கவும் பராமரிக்கவும் ஒதுக்கப்படுகின்றது.


தகவல் உதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India