அமெரிக்க பங்குச் சந்தையில் நுழையப் போகும் Byju's; 4 பில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவு!

இணையம் வாயிலாக கல்வி கற்பிக்கும், ‘பைஜூஸ்’ நிறுவனம், அமெரிக்க பங்குச்சந்தைக்குள் நுழைய சர்ச்சில் கேப்பிட்டல் என்ற நிறுவனத்துடன் கரம் கோர்க்க உள்ளது.
2 CLAPS
0

இணையம் வாயிலாக கல்வி கற்பிக்கும், ‘பைஜூஸ்’ நிறுவனம், அமெரிக்க பங்குச்சந்தைக்குள் நுழைய சர்ச்சில் கேப்பிட்டல் என்ற நிறுவனத்துடன் கரம் கோர்க்க உள்ளது.

ஆன்லைன் கல்வியில் அசுர வளர்ச்சி அடைந்த ‘பைஜூஸ்’:

ஆன்லைன் கற்றலை ஊக்குவிக்கும் விதமாக முன்னாள் ஆசிரியர் பைஜூ ரவீந்திரன் என்பவரால் உருவாக்கப்பட்டது ‘பைஜூஸ்’ நிறுவனம். இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனமான இது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பைஜூ ரவீந்திரன், பள்ளி ஆசிரியராக இருந்த போது ‘சாட்டை’ சமுத்திரக்கனி பாணியில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கினார்.

கணக்குப் பாடம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம் கிலி கொடுக்கும் நிலையில், Think And Learn என்ற ஆன்லைன் நிறுவனம் மூலம் எளிய முறையில் கல்வியை கற்பிக்கும் விதமாக BYJU'S என்ற செயலியை உருவாக்கினார். இதன் மூலமாக கார்ட்டூன் கேரக்டர்கள் கணக்குப் பாடங்களை சொல்லிக்கொடுக்கும் படி வடிவமைத்து குழந்தைகளை கவர்ந்தார்.

இதன் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் டேக்லைனான கற்றலைக் காதலிப்போம் (Fall in love with learning) என்பது உண்மையாக ஆரம்பித்ததோடு, பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பும் மில்லியன் கணக்கில் உயர ஆரம்பித்தது.

அமெரிக்க பங்குச்சந்தையில் கால் பதிக்க திட்டம்:

கடந்த ஆண்டு கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் தீவிரத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் சரியாக புரியாததால் பல மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த சமயத்தில் தான் எளிமையான இணையவழி கல்வி கற்பிக்கும் செயலியான பைஜூஸ் மூலமாக மாணவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தனர். இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர ஆரம்பித்தது. தற்போதைய நிலவரப்படி இந்த ஆன்லைன் கற்பித்தல் செயலியில் 115 மில்லியன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் 7 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ள பைஜூஸ் நிறுவனம் அமெரிக்க கல்வி முறையிலும் களமிறங்க உள்ளதாக கடந்த ஆண்டே அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையான Nasdaq-இல் கால்பதிக்கத் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கென ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் புதிதாக நிதி திரட்டும் நடவடிக்கையிலும் பைஜூஸ் நிறுவனம் இறங்கி இருக்கிறது.

4 பில்லியன் நிதி திரட்ட முடிவு:

அமெரிக்கா பங்குச்சந்தைக்குள் நுழைய மைக்கேல் க்ளீனின் சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனத்தைச் சேர்ந்த SPAC (special purpose acquisition company) நிறுவனத்துடன் பைஜூஸ் கரம் கோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் சில மாதங்களில் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைஜுஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 48 பில்லியன் டாலராக இருக்கும் என சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே இந்தியாவின் மதிப்பு மிக்க ஆன்லைன் கல்வி கற்பிக்கும் செயலியான பைஜூஸ் சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், Swiggy மற்றும் BYJU'S போன்ற முன்னணி இந்திய ஸ்டார்ட் அப்கள், இந்திய நிறுவனங்களை நேரடியாக அந்நியச் செலாவணியில் பட்டியலிட அனுமதிக்கும் கொள்கையை விரைவுபடுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதன் மூலம் பைஜூஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவது தெரிகிறது.

பைஜூஸ் நிறுவனத்திற்கு ஜெனரல் அட்லாண்டிக், செக்கோயா கேபிடல், சான்-ஜுக்கர்பெர்க் இனிசியேட்டிவ், நாஸ்பர்ஸ், சில்வர் லேக் மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வரவேற்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில் - கனிமொழி