‘கருப்பு நிறம் அவமானம் இல்லை’- கலக்க போவது யாரு அறந்தாங்கி நிஷா!

அவமானங்களை அனாசியாமாய் கடந்து ஹாசியப் பேச்சால் வென்ற அறந்தாங்கி நிஷா, பகிர்ந்த அவருடைய வலிகளும், வேதனைகளும்...

25th Apr 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

பெண் என்பவள் அழகுப் பதுமையாக, வெள்ளை நிறத்தோலுடன் இருக்க வேண்டும்... ‘குடும்பப் பெண்’, ‘குலவிளக்கு’ போன்ற பட்டங்களுக்கு ஏற்ப சமையல்திறன், அடக்க ஒடுக்கம் போன்ற குணாதியசியங்களின் குவியலாக இருக்க வேண்டும்... போன்ற வரையறைகளை கொண்டுள்ள சமூகத்தில் பிறந்த அவருக்கோ அவரது தேவதை மகள் சிறகை விரித்து பறந்து அவளது திறமையை கண்டு உலகத்தார் வியக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அழகில்லையேல் தமக்கு அங்கீகாரம் கிடைக்காது என்ற உணர்வை அவளுக்குள்ளும் கடத்திய சமூகத்தால், கிடைத்த வாய்ப்புகளையும் நிராகரித்தார் மகள். ஆனால், அவற்றையெல்லாம் உடைந்தெறிய வைத்த அத்தாய், அவர் கண்ட கனவையும் மகளை நினைவாக்க வைத்தார். மகளின் பெயர் அறந்தாங்கி நிஷா...

ஆம், இன்று படபடவென பேசி காமெடிகளால் அனைவரையும் கிச்சுகிச்சு மூட்டும் அவருடைய இந்த வெற்றி, பல வலிகளையும், அவமானங்களையும் கடந்தபிறகு கிடைத்தது. அதை நம்மிடம் பகிரத் தொடங்கினார்.

என் படிப்பு செலவுகளை ஏற்க நானேறிய மேடைகள்...

“அக்கம்பக்கத்தார், சொந்தக்காரயங்க எல்லோரும் எதுக்கு பொம்பளை பிள்ளைய படிக்க அனுப்பிக்கிட்டு, கட்டிக் கொடுத்துருனு அம்மாக்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. எங்க அம்மாவுக்கு படிக்கனும்னு ரொம்ப ஆசை. ஆனா, எங்க தாத்தா படிக்க வைக்கல. அதனால, என்ன படிக்க வைப்பதில் வைராக்கியமா இருந்தாங்க. 23 வயதுக்கு மேல் தான் கல்யாணம், 25 வயதில் குழந்தை என்று தெளிவாய் இருந்து, என்னை வழிநடத்தினாங்க.

எங்க அம்மா தான் என் ரோல்மாடல். அவங்க இல்லைன்னா இன்னிக்கை இது எதுவுமே கிடையாது. உண்மையில், எனக்கு படிக்க பிடிக்கலை. ஆனா, அம்மாவுக்காக எம்பிஏ முடித்தேன்.

காலேஜ் சமயத்தில் தான் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கலையும் நேசித்து அடைந்தது இல்லை. அப்போ பட்டிமன்றங்களுக்கு சென்றால் ஒரு நாளுக்கு 500ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஏற்கனவே, அப்பாவை படிப்பு செலவுகளுக்காக சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக பட்டிமன்றங்களுக்கு செல்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால், நான் எந்த பட்டிமன்றத்திலும் பரிசு பெற்றதே இல்லை. அதற்காக வருந்தியதுமில்லை.

”ஏன்னா, ஒவ்வொரு மேடையும் நிறைய கற்றுக் கொடுத்தன. 2 கருப்பு பிளவுஸ், 3 சேலை இருந்தா 6 பட்டிமன்றத்துக்கு போயிட்டு வந்துருவேன்” எனும் நிஷா பட்டிமன்ற மேடைகள் முதல் பெண்பார்க்கும் படலாத்தார் வரை நிறத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளார்.

கருப்பு நிறம் அவமானமில்லை...

“பட்டிமன்றத்துக்குச் செல்லும் போது நான் கருப்பா இருப்பதால், வெள்ளையா பளீர் மேக் அப்பில் இருக்கும் மற்ற பேச்சாளர்கள் பேச முன்னுரிமை அளிப்பர். யம்மா மத்தவங்கலாம் பேசிட்டு கடைசியா பேசுமானு நேரடியாவே சொல்லிருவாங்க. பொண்ணு பார்க்க வந்த 4 பேரும், பொண்ணு கருப்பா இருக்குனு சொல்லிட்டாங்க. அதிலொரு மாப்பிள்ளை மூஞ்சிக்கு நேரா பொண்ணு கருப்பா இருக்குனு சொல்லிட்டு போயிட்டாரு...”

அந்த சமயங்களில் எங்கம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. ஆனாலும் எங்கம்மா எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருந்தாங்க. அப்போ தான் கலக்க போவதுயாருக்கான ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. எங்க போய் கலந்துக்கோ, கலந்துக்கோனு சொன்னாங்க. ஆனா, சினிமா என்றால் வெளிர்நிற பெண்களுக்காக மட்டுமே இருந்ததால், கண்டிப்பாக நான் செட்டாக மாட்டேன்னு மறுத்துவிட்டேன்.

கலக்க போவது யாரு டீமில் என் பிரெண்டோட பிரெண்ட் இருந்தாங்க. அவங்க என் பட்டிமன்ற வீடியோவை தாம்சன் அண்ணாவிடம் காண்பித்துள்ளார். மறுநாள் கிளம்பி சென்னைக்கு வரச் சொன்னாங்க.

கணவர் மற்றும் மகனுடன் அறந்தாங்கி நிஷா

அரசு பேருந்தில் உட்கார சீட் இல்லாமல், கீழே அமர்ந்தே சென்னை வந்தேன். கோயம்பேட்டில் உள்ள இலவச கழிப்பறையில் முகத்தை கழுவிவிட்டு, அப்படியே ஆடிஷனுக்கு போனேன். கலக்கப் போவது யாரு மேடையும் வாய்ப்பை அளித்தது.

என் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களையே அப்படியே கலாய்த்து காமெடி ஆக்கிவிடுவேன். ‘அப்படி, ஒரு முறை அறந்தாங்கியிலிருந்து சென்னை வரும் போது, பின் சீட்டில் படுத்துத் தூங்கிட்டேன். சென்னை வந்த பிறகு தான் கண்டெக்டருக்கு ஒரு மனுஷி இருந்ததே தெரிந்தது.’ இந்த விஷயத்தை மேடையில் காமெடியாக்கி விட்டேன். இந்தமாதிரி என் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், மற்றவர்களை சிரிக்க பயன்படுத்திவிடுவேன்.

“கணவரையும், மாமியாரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்தாலும் அதை காமெடியாக மட்டுமே பார்க்கும் கணவரும், மாமியாரும் அமைந்தது கொடுப்பினை.” என்று மனம்மகிழ்ந்து பகிர்ந்து கொண்டார் அவர்.

மாதவிடாய் வலியும், மற்ற பிரச்னைகளும்...

“தொடக்கத்தில் செட்டில் யாராவது ஏதாவது சொல்லிருவாங்களோ, ரொம்ப பயப்படுவேன். தண்ணீர் குடிச்சா பாத்ரூம் போகணும்னு, தண்ணீயே குடிக்கமா இருந்திருக்கேன். இது ஒரு பக்கம் என்றால், வேலைக்குப் போகும் அனைத்து பெண்களுக்குமே ஏற்படும் கஷ்டநிலை, மாதவிடாய் நாட்களை கடப்பது. மாதவிடாய் நாட்களில் வரும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. ஆடையில் கறை பட்டுவிடுமோ என்ற டென்ஷேன் வேறு. இன்றும் பணிச்சூழல் பெண்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை,” என்ற முக்கிய விஷயத்தையும் பகிர்கிறார் நிஷா.

இதையெல்லாம் விட பெரிய கவலை, என் மகனை பார்த்து ஒன்றரை மாசமாகுது. அறந்தாங்கியில் அம்மாவிடம் தான் அவன் வளர்கிறான். 10 மாத குழந்தையாக அவனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பினேன். அவனுடைய மழலை சேட்டைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன். அதைவிட என்னை நிஷாம்மானும் எங்க அம்மாவை தான் அம்மா அம்மானு வாய் நிறைய கூப்பிடும் போது பயங்கர கஷ்டமாக இருக்கும். வீக்கெண்டுகளில் மட்டும் தான் அவனை பார்க்கச் செல்வேன். இப்போது கணவரும் நிகழ்ச்சியில் நடிப்பதால் அவராலும் அவனை சென்று பார்க்க முடியவில்லை.

கலக்கு போவது யாரு நிகழ்ச்சியில் நிஷா.

பட உதவி: விஜய் டிவி

கஜா புயல் அப்போதெல்லாம் அவனுக்கு பயங்கர காய்ச்சல். அவனை பார்க்க சென்ற போது தான் அந்த மாவட்டங்கள் எல்லாம் அவ்ளோ பாதிப்புக்குள்ளாகிருச்சு. எங்க அம்மா வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. நான் கொண்டு சென்று தான் கொடுத்தேன். இருக்கும் நமக்கே சிரமம் என்றால் இயலாதவர்களின் நிலை?

நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று களத்திற்கு நேரடியாய் சென்றேன். ஏனெனில், கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை, வேளாங்கன்னி, வேதாரண்யம் பகுதிகள் மக்கள் எல்லோரும் பட்டிமன்றங்களில் பேசிய காலத்தில் எனக்கு வாய்ப்பளித்து வாழ வைத்தவர்கள். அவர்களுக்கு கைம்மாறு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று எண்ணிதான் செயல்பட்டேன். 

அதையும் சிலர் பப்ளிசிட்டிகாக செய்கிறேன் என்றனர். நான் எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட்சுகளுக்கு ரியாக்ட் பண்ண மாட்டேன். ஆல்ரெடி, பல கஷ்டங்களையும், அவமானங்களையும் பார்த்ததால் இதெல்லாம் பெரிசா தெரிவதில்லை,” என்று அவர் கூறி முடிக்கையில், இத்தனை இன்னல்களுக்கு பின் கிடைத்துள்ள அவரது வெற்றி நமக்கும் மகிழ்வை அளித்தது.
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Latest

Updates from around the world

Our Partner Events

Hustle across India