Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

திரைக்கடல் ஓடியும் கல்வி தேடும் அம்ரீஷ் நாயக்!

உத்திரப்பிரதேசத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்த அம்ரீஷ் நாயக் ஆர்வமாக படித்து கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

திரைக்கடல் ஓடியும் கல்வி தேடும் அம்ரீஷ் நாயக்!

Monday June 20, 2022 , 3 min Read

கிராமத்தில் பள்ளி இல்லை என்பதால் எத்தனையோ பேர் படிப்பை இடைநிறுத்தம் செய்து கொண்டதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த அம்ரீஷ் நாயக் நன்றாக படித்தார். படிப்பிற்கு பணம் செலவிடமுடியாத சூழலில் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அகாடமியில் இலவசமாக படித்தார். நல்ல மதிப்பெண் பெற்று ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்கா சென்று முன்னணி பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்.

இனி அவரது வரிகளில் படிப்போம்:

நான் உத்திரப் பிரதேசத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன். அப்பா விவசாயி. அம்மா இல்லத்தரசி. குடும்ப வருமானம் குறைவு. அன்றாட செலவுகளை சமாளிப்பதே கஷ்டம். இந்த நிலைமையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு 12 வயதிருக்கும். ஷிவ் நாடார் அறக்கட்டளை நிறுவிய 'வித்யாகியான்’ (VidyaGyan) என்கிற லீடர்ஷிப் அகாடமி பற்றி எனக்குத் தெரியவந்தது. ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே ஷிவ் நாடார் அறக்கட்டளையின் நோக்கம்.

1

இதில், சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் ஆனேன். அட்மிஷன் கிடைத்தது. பெற்றோருக்கு இலவசமாக படிப்பு கிடைக்குமே என்கிற சந்தோஷம் ஒரு பக்கம். மகனைப் பிரியவேண்டுமே என்கிற கவலை ஒரு பக்கம்.

இருந்தாலும் இந்த வாய்ப்பைத் தவறவிட அவர்களுக்கு மனமில்லை. படிப்பின் முக்கியத்துவம் அவர்களுக்கும் புரிந்திருந்தது. எனக்கும் புரியவைத்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் வித்யா கியானில் சேர்ந்தேன். ஹை ஸ்கூல் படிப்பு வரை முடித்தேன். இலவசமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, நல்ல ஆசிரியர்களும் கிடைத்தார்கள். முதல் மதிப்பெண் எடுத்தேன்.

ஹைஸ்கூல் முடித்ததும் SAT என்கிற Scholastic Aptitude Test எழுத முடிவு செய்தேன். அமெரிக்காவிற்கு சென்று இளங்கலைப் பட்டப்படிப்பு முடிக்க விரும்புபவர்கள் இதைக் கட்டாயம் எழுதவேண்டும். நான் இந்தத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் எடுத்தேன். இண்டியானாவில் இருக்கும் Purdue University-யில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

வெளிநாட்டு அனுபவம்

சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் அகாடமி சென்றபோதுதான் முதல் முறையாக கிராமத்திலிருந்து சிறு நகரம் ஒன்றிற்கு சென்றேன். அதைத் தொடர்ந்து முதல் முறையாக வெளிநாட்டு பயணம். கேட்கவா வேண்டும்? அங்கிருந்த மேற்கத்திய கலாச்சாரம், சக மாணவர்களுடனும் பேராசிரியர்களுடன் பேசுவது, இப்படி எல்லாமே சவாலாக மாறியது.

முதல் பெரிய சவால் சைவ சாப்பாடு கிடைப்பது. அதிலும் என்னால் செலவிடக்கூடிய குறைந்த செலவில் சைவ சாப்பாடு கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சாலட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டே பசியைப் போக்கிக்கொண்டேன்.

யுனிவர்சிட்டியின் டைனிங் ஹாலில் மட்டுமே என்னால் இந்திய உணவை சாப்பிட முடிந்தது. அமெரிக்கா சென்ற பிறகுதான் முதல் முறையாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டேன். வெளிநாட்டு உணவு வகைகளை அதுவரை சாப்பிட்டுப் பழக்கமில்லை. முதல் முறையாக மெக்சிகன் உணவு சாப்பிட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. காரம், மசாலா என இது கிட்டத்தட்ட இந்திய உணவு வகை போன்றே இருந்தது என்பதால் வீட்டு உணவை நினைவுபடுத்தியது.

கேம்பஸில் எல்லோரும் எப்படி பேசிக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே அதிக நாட்கள் ஆனது. முதல் நாள் முதல் வகுப்பிற்கு சென்றதுமே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

எல்லோரும் பேராசிரியர்களை பெயர் சொல்லி அழைத்தார்கள். நான் கிராமத்தில் 'சார்’, 'மேடம்’ என்று கூப்பிட்டு பழக்கப்பட்டவன். இதைப் பழகுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இப்படி பல விஷயங்கள் முரண்பட்டன. அதிர்ஷ்ட்டவசமாக அங்கிருந்த மற்ற இந்திய மாணவர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த சூழலுடன் ஒத்துப்போக அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.

வெளிநாட்டு சூழலை பிரமிப்புடனும் பயத்துடனும் பார்த்துகொண்டிருந்த என் கண்ணோட்டம் மெல்ல மாறியது. வெவ்வேறு நாட்டு மக்களுடன் சேர்ந்து பழக முடிந்தது. எல்லோரும் தங்களுக்குப் பிடித்தபடி வாழ்க்கையை ரசிப்பதைப் பார்த்து வியந்தேன். வெவ்வேறு பின்னணியைக் கொண்டவர்களின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அங்கிருந்த கல்வி அமைப்பில் பல சாதகமான அம்சங்கள் இருந்தன. நான் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது முக்கியப் பாடமாக கணிதம் எடுத்திருந்தேன். அதன் பிறகு, கம்ப்யூட்டர் பிரிவில் பல வாய்ப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு மாற நினைத்தேன். அதுவும் சாத்தியமானது.

2

படிப்பு மட்டுமல்ல. கேம்பஸ் கிளப் மூலம் கூடுதல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றேன். பேராசிரியர்களுடனும் ஆராய்ச்சியாளர்களுடனும் வெவ்வேறு பிராஜெக்டுகளில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய கற்றல் அனுபவத்தை இது வழங்கியது. அனாலிட்டிகல் ஸ்கில், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன் என என்னுடைய திறனும் படிப்படியாக மெருகேறியது.

ஹெல்த்கேர் பிராஜெக்ட் ஒன்றில் ஆய்வு செய்தபோதுதான் வடக்கு கரோலினாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஹெல்த்கேர் தரவுகள் சம்பந்தப்பட்ட வேலை.

மாணவர்கள் படிக்கும்போதே பல்வேறு இண்டர்ன்ஷிப்களில் ஈடுபடவேண்டும். இதைத்தான் நான் மற்ற மாணவர்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். பேராசிரியர்களுடன் சேர்ந்து ஆய்வு சம்பந்தப்பட்ட பிராஜெக்டுகளில் அனுபவம் பெற இது உதவும்.

’டீச்சிங் அசிஸ்டெண்ட்’ பொறுப்பு வகித்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. Purdue University -யில் செலவிட்ட நான்காண்டு கால வாழ்க்கை ஒரு புதிய உலகத்தை எனக்குக் காட்டியது. மிகப்பெரிய கற்றல் அனுபவத்தை வழங்கியது. டேட்டா என்ஜினியரிங் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு சவாலான, சிக்கலான பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விரும்புகிறேன்.

வீட்டிற்குச் சென்று பெற்றோரைப் பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாகக் காத்திருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் இன்று இந்த நிலையை எட்ட உதவியிருக்கிறது. என் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றியமைத்திருக்கிறது.

ஆசிரியர்: அம்ரீஷ் நாயக் | தமிழில்: ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துகள் ஆகும். எந்த வகையிலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை)