விண்ணளவு உயர்ந்த விவசாயி மகன் சிவன்: Chandrayaan பின்னுள்ள சாதனைத் தமிழரின் கதை!

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் ஏழை விவசாயி மற்றும் மாங்காய் விற்பனை செய்தவருக்கு பிறந்த சிவன் குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக, 9ம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்துக் கொண்டே அப்பாக்கு உதவியாக மாங்காய் விற்றிருக்கிறார்.

8th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சந்திராயன் -2 திட்டத்தில், அதன் லேன்டர் நிலவில் தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், இஸ்ரோவின் முயற்சியில் இந்த தடைக்கல்லும் ஒரு படிக்கல்லாகவே இருக்கும் என கருதப்படுகிறது.


விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க காணப்பட்ட காட்சி தேசத்தை உருக வைத்தது. எனினும், இஸ்ரோ புதிய உச்சத்தை தொடும் என பிரதமர் நரேந்திர மோடி ஊக்கம் அளித்துள்ளார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், நாட்டு மக்களும், இஸ்ரோவின் சாதனைகள் தொடரும் என ஊக்கம் அளித்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த தேசமும் இஸ்ரோ தலைவர் கே சிவனின் முயற்சிகளுக்கு பக்கபலமாக உள்ள நிலையில், இந்த சாதனை மனிதரின் வாழ்க்கையின் வியக்க வைக்கும் பக்கங்களை சிறிது புரட்டிப்பார்க்கலாம்.

sivan

இஸ்ரோ தலைவர் கே சிவன் குடும்பத்துடன். | பட உதவி: The New Indian Express

சிவனின் வாழ்க்கை கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்குமான உதாரணமாக திகழ்கிறது. தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த சிவன், நாட்டின் பெருமைமிகு பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் இஸ்ரோ தலைவராக உயர்ந்திருப்பது ஊக்கம் அளிக்கும் வெற்றிக்கதைகளில் ஒன்றாக அமைகிறது. இந்த வெற்றி பயணத்தில் அவர், எண்ணற்ற சோதனைகளையும், சவால்களையும் சந்தித்து முன்னேறி வந்திருக்கிறார்.

விவசாயக் குடும்பம்

சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள சரக்கல்விளை என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை கைலாசவடிவு ஒரு விவசாயி. அவர் மாங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக, சிவன், கஷ்டப்பட்டுத் தான் படித்தார். 9ம் வகுப்பு வரை அவரும் மாங்காய் விற்றிருக்கிறார். பின்னர் சிவனின் சகோதரர், அவர் உயர் கல்வி தொடர வேண்டும் என்பதற்காக தனது படிப்பை நிறுத்திக்கொண்டார்.

”நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக, என் மூத்த சகோதரர் தன் படிப்பை நிறுத்தி விட்டார். விவசாயியான என் அப்பா, சந்தையில் மாங்காய் விற்று வந்தார். நானும், கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக சைக்கிளில் சென்று மாங்காய் விற்றிருக்கிறேன்,”

என்று இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட போது ஆங்கில நாளிதழான டெக்கான் கிரானிகலுக்கு அளித்த பேட்டியில் சிவன் கூறியிருக்கிறார். அதேபோல் கல்லூரிக்கு வரும்வரை அவர் வெறுங்கால்களுடனே பள்ளிக்கு சென்றுள்ளார்.


சொந்த கிராமத்தில் தொடக்கக் கல்வியை முடித்தவர் அதன் பிறகு அருகே உள்ள கிராமத்தில் உயர்நிலை படிப்பை முடித்தார். நாகர்கோயிலில் உள்ள இந்து கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில், ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் படித்தார். தொடர்ந்து பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றார்.

இஸ்ரோவில் பணி

பி.டெக் முடித்த சிவன், அப்போது ஏரோனாட்டிகல் துறையில் பணிவாய்ப்பு இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடிவெடுத்து ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி நுழைவுத்தேர்வு எழுதி, இரண்டிலும் வெற்றிப் பெற்றார். பெங்களுரு ஐஐஎஸ்சி-ல் சேர முடிவெத்தார்.

”ஊக்கத்தொகை பெற்று தான் உயர் கல்வி படித்தேன். என் உயர் கல்விக்காக அப்பா நிலத்தின் ஒரு பகுதியை விற்றார். என் பெற்றோர் இருவருமே இப்போது இல்லை,” என்று சிவன் அந்த பேட்டியில் மேலும் கூறியிருக்கிறார்.

1982ம் ஆண்டு, சிவன் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தார். இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் பங்கு வகித்தார். இதில் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைத்தல், ஆய்வு ஆகியவற்றில் பங்களித்தார். பணியில் இருந்துகொண்டேமும்பை ஐஐடி-ல், 2006-ல் முனைவர் பட்டம் பெற்றார்.   மேலும் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை இவர் பல சாதனைகளை புரிந்தார்.


2011ல் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட சிவன், 2014ல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை மையத்தின் இயக்குநரானார். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோவின் சாதனையிலும் இவர் முக்கியப் பங்காற்றினார். 2015ல், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது கிரையோஜெனிக் எஞ்சின்.

கிரியோஜினிக் ராக்கெட்

கிரியோஜினிக் ராக்கெட் கொண்ட ஜிஎஸ்.எல்வி ராக்கெட் தோல்விக்குப்பின், அதை சரி செய்யும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டது.

”இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரியோஜினிக் இஞ்சின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி ஒரு முக்கிய மைல்கல் என்றும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

ராக்கெட் ஏவுவது தொடர்பான மென்பொருளை எழுதுவதிலும் சிவன் வல்லவராக கருதப்படுகிறார். ராக்கெட் ஏவப்படும் போது அதன் பாதையை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கிய சித்தாரா மென்பொருளுக்காக இவர் மிகவும் பாராட்டப்படுகிறார். இந்த சாதனைக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இவரை எப்போதும் சாப்ட்வேர் இஞ்சினியர் என்றே அழைக்கும் வழக்கம் கொண்டிருந்திருக்கிறார்.


இஸ்ரோ ஆய்வில் அவரது பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக கடந்த ஆண்டு துவக்கத்தில் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, சந்திராயன் 2 உள்ளிட்ட திட்டப் பணிகளில் அவர் மூழ்கியிருந்தார்.

தமிழ் மகன்

விருதுகள்

இஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார் சிவன். 2007ல் இஸ்ரோவின் விருதையும், 2011ல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதையும், ஐஐடி பாம்பேவில் பி.எச்.டி., சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.


சிவன் இந்திய தேசிய பொறியியல் அகாடமி, இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் அமைப்புகளுக்கான சங்கம், இந்திய ஏரோனாட்டிகல் அமைப்பு, சிஸ்டம்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றில் உறுப்பினராவார். ஏவுகலம் பிரிவில் இருந்த நிபுணத்துவத்தைக் கொண்டு 2015-ம் ஆண்டு ’இண்டெக்ரேடட் டிசைன் ஃபார் ஸ்பேஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

பேட்டி ஒன்றில் சிவன் தனது சிறு வயது கனவு பற்றி கூறியிருக்கிறார்.

‘சின்ன வயதில், என்னோட அதிகப்பட்சக் கனவு, எங்க கிராமத்துக்கு மேல பறக்கிற விமானத்துல என்றைக்காவது ஒருநாள் போக வேண்டும் என்பதாக இருந்தது. விமானம் எப்படிப் பறக்குது? நாமே ஏன் இதுபோல ஒன்று செய்து பறக்கவிடக் கூடாது என்று நினைப்பேன்,’ என அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சிறிய வயதில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்திருந்தாலும், அவர் விரும்பியபடியே விஞ்ஞானியாகி, இன்று நிலவுக்கு சென்றுள்ள விண்கலத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.


சந்திராயன் -2 விண்கலத்தின் லேன்டர், நிலவில் தரையிறங்குவதில் சிறு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாட்டின் பிரதமர் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள் கூறி அவருக்கு பக்கபலமாக நிற்கின்றனர்.


அறிவியலில் வெற்றி தோல்வி கிடையாது, முயற்சிகளும் பாடங்களும் தான் என சொல்லப்படுவதற்கேற்ப சிவன் தலைமையில் இஸ்ரோவின் அடுத்த கட்ட முயற்சிகள் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

 

சிவன் பற்றிய யுவர்ஸ்டோரி முந்திய கட்டுரை


(கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்)

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India