கோடிகள் வருவாய் ஈட்டும் ப்ரோட்டீன் ஐஸ்கிரீம் ப்ராண்ட் உருவாக்கிய அண்ணன்-தங்கை!

By YS TEAM TAMIL|16th Sep 2020
அம்மாவின் சமையலறையில் தொடங்கிய யோசனை மிகப்பெரிய ஐஸ்கிரீம் பிராண்டாக உருவாகியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியர்கள் பொதுவாகவே இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டிற்கு 400 மி.லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக ‘ஸ்மார்ட் ரிசர்ச் இன்சைட்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.


அமுல், மதர் டயரி, வாடிலால் போன்ற நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2022ம் ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு 18,786 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக Eurometer அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனினும் ஐஸ்கிரீம் சந்தையில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறியளவில் செயல்படும் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.


பிரீமியம் பிராண்டான Get-A-Whey புரோட்டீன் ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கவனம் செலுத்துகிறது. உடன்பிறந்தவர்களான ஜஷ் மற்றும் பஷ்மி ஷா இதன் இணை நிறுவனர்கள். தற்போது இந்த பிராண்ட் மும்பை மற்றும் புனேவில் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை சீரானதும் மற்ற நகரங்களிலும் விரிவடைய இந்த இணை நிறுவனர்கள் திட்டமிட்டுள்ளனர்.

1

அம்மாவின் சமையலறையில் உதித்த யோசனை

ஜஷ், பஷ்மி இருவருமே எம்பிஏ பட்டதாரிகள். ஜஷ் புரோட்டீன் வகைகளை விரும்பி சாப்பிடுவார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வெவ்வேறு வகையான புரோட்டீன்களை வாங்குவார்.

“வெவ்வேறு நாடுகளில் இருந்து சிறந்த புரோட்டின்களை சேகரிக்க விரும்பினார்,” என்றார்.

ஜஷ், பஷ்மி இருவரும் ஆரோக்கியமாக, அதேசமயம் நிறைவாக உண்ணவேண்டும் என்று அவர்களது அம்மாவிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர்களது அம்மா ஐஸ்கிரீமில் whey புரோட்டீன் கலந்துகொடுத்தார். இப்படித்தான் Get-A-Whey ஐஸ்கிரீம் யோசனை உதித்தது.

இப்படி வீட்டில் உருவான இந்த ரெசிபி விரைவில் வணிக வாய்ப்பாக மாறியது.


வணிகத்திற்காக முதலீடு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டது. 10 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் மூன்று பேர் அடங்கிய குழுவாக மும்பையில் 2018ம் ஆண்டு இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.


வணிகத்தை தொடங்கிய புதிதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பஷ்மியின் குடும்பத்தினர் வைரம் தொடர்புடைய வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். புதிய வணிக மாதிரி லாபகரமானது என்பதை விவரித்து தங்களது பெற்றோரை சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்தது.

அம்மாவிற்கு வணிகத்திலும் சமையலிலும் இருந்த அனுபவம் உதவியது. ஐஸ்கிரீம் தயாரிப்பிற்கு சொந்தமாக தொழிற்சாலையை அமைப்பதைக் காட்டிலும் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட இருவரும் தீர்மானித்தனர்.


ஐஸ்கிரீம் கொண்டு செல்வதற்கான கோல்ட் செயின் லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடுகள் சவால் நிறைந்ததாக இருந்துள்ளது.

2

Whey புரோட்டீன்

Whey புரோட்டீனை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதற்கு அதன் சுவையே முக்கியக் காரணம். ஆனால் ஐஸ்கிரீமுடன் எடுத்துக்கொள்வது எளிது.

“புரோட்டீன் அதிகம் நிறைந்த ஐஸ்கிரீம் தயாரிப்பில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

இந்திய நுகர்வோர் சந்தையில் உணவு மற்றும் பானங்களைப் பொறுத்தவரை உடனடியான மன நிறைவு கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே ஐஸ்கிரீமை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் தயாரிக்க மூலப்பொருட்களை உள்ளூரிலேயே வாங்கத் தீர்மானித்தனர்.

“மகாராஷ்டிரா முழுவதும் உள்ள ஆர்கானிக் பால் பண்ணைகளில் இருந்து பால் வாங்குகிறோம். நாங்கள் சர்க்கரை அல்லது ரீஃபைன் செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்துவதில்லை. ஐஸ்கிரீம் தயாரிக்கும்போது Whey புரோட்டினை பச்சையாகவே சேர்க்கிறோம்.

சர்க்கரைக்கு பதிலாக Erythritol என்கிற ஆர்கானிக் ஸ்வீட்னர் பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.


ஒட்டுமொத்த ஐஸ்கிரீம் தயாரிப்பும் ஃப்ரீசரில் தடையின்றி தயாரிக்கப்படுகிறது. அனைத்து மூலப்பொருட்களும் ஸ்டெபிலைசர்களும் முதலில் ஒன்றாகக் கலக்கப்படுகிறது. இது முறையாக கலக்கப்பட பேஸ்டுரைஸ் செய்யப்படுகிறது. அதன் பிறகு ஐஸ்கிரீம் கலவை குறிப்பிட்ட காலத்திற்கு அப்படியே விடப்படுகிறது. இதனால் புரோட்டீன் ஹைட்ரேட் ஆகிவிடும். இந்தக் கலவை ஃப்ரீஸ் செய்யப்பட்டு Get-A-Whey டப்களில் ஊற்றப்பட்டு சேமிப்பு ஃப்ரீசரில் வைக்கப்பட்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது.


ஐஸ்கிரீம் 125 மி.லி மற்றும் 520 மி.லி அளவுகளிலும் 125 ரூபாய் முதல் 425 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. பெல்ஜியன் சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி பனானா உட்பட மொத்தம் எட்டு சுவைகளில் இந்த பிராண்ட் ஐஸ்கிரீமை வழங்குகிறது. இதில் Keto Belgian Chocolate, Keto Very Berry ஆகியவை Keto டயட் பின்பற்றுபவர்களுக்காக பிரத்யேகமாக விற்பனையாகிறது.


நீரிழவு இருப்பவர்கள் சால்டட் கேரமல் சுவையை எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர் இந்த இணை நிறுவனர்கள்.

3

பி2சி மற்றும் மார்கெட்டிங்

இன்றைய காலகட்டத்தில் மார்கெட்டிங் இல்லாமல் எந்த வணிகமும் முழுமையடையாது. தரமான தயாரிப்புடன் இந்த பிராண்ட் பலரைச் சென்றடைந்துள்ளது.

“எங்களது உத்திகள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. புதிய சுவைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் ஷீட் அனுப்பி அவர்களது பரிந்துரைகளைக் கேட்டறிந்தோம்,” என்றார்.

பிராண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வலைதளங்கள் உதவியதாக பஷ்மி தெரிவிக்கிறார். ”மும்பையில் 100-க்கும் மேற்பட்ட கேட்டகிரி ஏ ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்கிறோம். Godrej Natures Basket, Noble Plus, FLAX Foods, Society Stores போன்றவையும் இதில் அடங்கும்,” என்றார்.


மும்பையில் ஐந்து பகுதிகளில் ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ மூலமாகவும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

“அனைத்து பிரீமியம் ஸ்டோர்கள் மற்றும் நவீன வர்த்தக ஸ்டோர்களில் விற்பனை செய்யவேண்டும். எளிதாக டெலிவர் செய்ய குறைந்தபட்சம் 1,000 பகுதிகளில் செயல்படவேண்டும். இதுவே எங்கள் நோக்கம்,” என்றார் ஜஷ்.

கடந்த ஆண்டு 50,000-க்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு 2.5 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இணை நிறுவனர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர்.

4

வருங்காலத் திட்டம்

ஃபிட்னெஸ் ஆர்வலர்களிடையே பிரபலமடைந்து வருவதால் மிகப்பெரிய நிறுவனங்களுடனான போட்டி குறித்து நிறுவனர்கள் கவலைப்படுவதில்லை.


மேலும் கோவிட்-19 காரணமாக சில்லறை வர்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் டிஜிட்டல் செயல்பாடுகளை வலுப்படுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொருளாதாரம் மீண்டெழும் நிலையில் புதிய சுவைகளை அறிமுகப்படுத்துவதிலும் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் விரிவடைவதிலும் இந்த பிராண்ட் கவனம் செலுத்தி வருகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Register now! #TechSparksFromHome