5 ஏக்கரில் விவசாயம் தொடங்கி, இன்று 22 ஏக்கரில் 15 கோடி ஈட்டும் சகோதரர்கள்!

லக்னோவைச் சேர்ந்த இச்சகோதரர்கள் எம்பிஏ, பி.டெக் படித்து விட்டு, விவசாயிகளாகி இன்று கோடிக் கணக்கில் சம்பாதிப்பது எப்படி?
839 CLAPS
0

இன்றும், விவசாயம் ஒரு விருப்பப்படாத தொழிலாகக் கருதப்படுகிறது. விவசாயிகள் உழைத்து ஈட்டும் வருமானத்தில் திருப்தி அடைய வேண்டும் என்றே வாழ்கின்றனர்.

ஆனால் லக்னோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் இந்த வரையறையை மாற்றியுள்ளனர். இன்று, ஷஷாங்க் மற்றும் அபிஷேக், நவீன விவசாயத்தின் வலிமையை உணர்ந்து செயல்பட்டதில் கோடிகளில் வருவாயை ஈட்டுகின்றனர்.

உ.பி. தலைநகரான லக்னோவில் வசிக்கும் ஷஷாங்க் பட், தனது எம்பிஏவை விட்டுவிட்டு விவசாய உலகில் ஒரு இடத்தைப் பிடித்தார். எம்பிஏவுக்குப் பிறகு, அவருக்கு வேலை கிடைத்தது, ஆனால் திருப்தி கிடைக்கவில்லை, அத்தகையச் சூழ்நிலையில், ஷஷாங்க் தொழில் செய்ய முடிவு செய்தார். தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வேட்கை விவசாய வடிவத்தில் அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் காட்டியது.

ஷஷாங்க் தனது மூத்த சகோதரர் அபிஷேக்கைப் உறுதுணையாகப் பெற்றார். அபிஷேக் தனது பி.டெக் படிப்பை முடித்திருந்தார், தனது சகோதரருடன் சேர்ந்து ஒரு புதிய பாதையில் இறங்கினார்.

தனது கதையை பற்றி பகிர்ந்த ஷஷாங்க், 2010ல் எம்பிஏ முடித்த பின்னர், 2011ல் விவசாயத்தை நோக்கி நகர்ந்தார், ஏற்கனவே நவீன விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவரது தாய்மாமன் ராஜீவ் ராய், ஷஷாங்கிற்கு நிறைய கற்றுக்கொடுத்து உதவினார்.

துவக்க நாட்களைப் பற்றி சஷாங்க் கூறும்போது,

"என் குடும்பம்  நடுத்தரக் குடும்பம் என்பதால், ஒரு முடிவை எடுத்து  செயலாற்றுவதற்குள் பல பிரச்சனைகள் வந்தன. வீட்டிலிருப்பவர்களின் அனுமதி பெற்ற பின்னர், நான் நாடு முழுவதும் சுற்றி வந்தேன், நவீன விவசாயம் பற்றிய தகவல்களை சேகரித்தேன்," என்றார்.

ஷஷாங்க் கூறியதன்படி, உத்திரபிரதேசத்தில் விவசாயம் இன்னும் பின்தங்கியே இருந்தது. இதுபோன்ற நேரத்தில், நான் கற்றுக்கொண்ட நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி மிகச் சிறிய அளவில் விவசாயத்தைத் தொடங்கினேன்.

"இந்த வகையான விவசாயம் மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள், எங்கள் நவீன விவசாய முறைகளை பற்றி அறிய எங்களிடம் வரத் தொடங்கினர். இஸ்ரேலைச் சேர்ந்தர்வர்கள் எங்கள் விவசாயத்தைப் பாராட்டியதோடு எங்கள் விவசாயம் பற்றிய தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டனர்."

ஆரம்பக் கட்டத்தில், ஒரு விவசாயிடமிருந்து 5 ஏக்கர் பண்ணையை குத்தகைக்கு எடுத்து குடைமிளகாயை பயிரிடத் துவங்கினார். இன்று ஷஷாங்க் குடைமிளகாய், காலிஃபிளவர் மற்றும் சீமை சுரைக்காயை 22 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிரிடுகிறார். 

ஷஷாங்க் 5 ஏக்கரில் விவசாயம் செய்யத் தொடங்கினார், ஆனால் இன்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சஷாங்க் இருபத்தி இரண்டு ஏக்கர் அளவில் சாகுபடி செய்கிறார்.

"ஆரம்பக் கட்டங்களில் இவை மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அனைத்தும் மாறிவிட்டன. இன்று நாங்கள் எங்கள் பணிக்குழுவின் மூலம்  15 கோடிக்கும் அதிகமான வருவாயை திரட்டுகிறோம்.”

ஷஷாங்க் தனது சகோதரருடன் சேர்ந்து அக்ரிபிளாஸ்ட் என்ற நிறுவனத்தையும் நிறுவினார். இது விவசாய வேலைகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஏராளமான விவசாயிகளை அவர்களுடன் இணைத்து நவீன விவசாயத்திற்கு பயிற்சி அளிக்கிறது.

“விவசாயிகள் எங்கள் இணையதளத்தில் சேர்ந்து எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எங்கள் சார்பாக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும் விவசாயிகளை வழிநடத்தவும் ஒரு கால் சென்டரையும் நாங்கள் அமைத்துள்ளோம்.”

இப்போது வரை உத்திரபிரதேச விவசாயிகள் நவீன வழிகளில் விவசாயத்தை மேற்கொள்ளவில்லை, இதனால் தான் அவர்கள் கடினமாக உழைத்தும்  கூட சிறந்த வருவாயை ஈட்ட முடியவில்லை.

சஷாங்கும் அவரது சகோதரர் அபிஷேக்கும் நவீன விவசாயத்தைப் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த விவசாயிகளிடம் நவீன விவசாயம் குறித்த தகவல்களை ஷஷாங்க் மற்றும் அபிஷேக் தொடர்ந்து பகிர்ந்து கொள்கின்றனர்.

"புதிய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதே  எங்கள் எதிர்காலத்திற்கான திட்டம் ஆகும், இதனால் விவசாயிகள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும்.”

அவர் விவசாயத்திற்காக அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்றார், இது அவரின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியது, ஆனால் ஷஷாங்கின் கூற்றுப்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டும், இதனால் அதிகமான விவசாயிகள் நவீன விவசாயத்தை நோக்கிச் செல்ல முடியும் என்கிறார்.

இன்று, அருகிலுள்ள விவசாயிகளை நவீன விவசாயத்தை மேற்கொள்ளச் செய்வதன் மூலம் ஷஷாங்க் வழிகாட்டுகிறார். அவரின் விவசாய முறையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு சிறு மற்றும் பெரிய விவசாயிகளும் இந்த விவசாய முறைகளை எளிதில் பின்பற்ற முடியும்.

நவீன விவசாயத்தில், ஷஷாங்கின் எதிர்கால எதிர்பார்ப்பு,

“இன்று பெரிய கல்லூரிகளில் படித்த ஏராளமான இளைஞர்கள்  விவசாயத்தை நோக்கி செல்வது அதிகரித்து வருகின்றது. இன்று, விவசாயத்தில் மகத்தான சாத்தியங்கள் உள்ளன. வயலை நகரமயமாக்குவதற்கு பதிலாக, நவீன வேளாண்மை செய்வதன் மூலம் நீங்கள் சிறப்பாக சம்பாதிக்க முடியும் என்றும் நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்,” என்றார்.