Budget 2023: 7.5% வட்டியில் 'மகிளா சேமிப்பு திட்டம்' - பட்ஜெட்டில் பெண்களுக்கு அசத்தலான அறிவிப்பு!
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரத் திட்டத்தை பிரத்யேகமாக பெண்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமித்து 7.5% வட்டியைப் பெறலாம்.
மத்தியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்துளளார். 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமிகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
மகிளா சேமிப்பு திட்டம்
பெண்கள் அல்லது சிறுமிகள் பெயரில் இத்திட்டத்தின் கீழ் சிறு சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். 2025 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். சேமிப்பு பணத்திற்கு 7.5% நிலையான வட்டி வழங்கப்படும். மேலும், இதில் சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சிறு சேமிப்புத் திட்டமாக உள்ளதால் இத்திட்டத்தின் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வருவாயில் இருந்து சிறிய அளவு பணத்தைச் சேமித்து அதற்கு 7.5 % வட்டியைப் பெற முடியும். மேலும், சிறுமிகளின் எதிர்கால சேமிப்புக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்திக் குறுகிய கால சேமிப்பு பலனை அடையலாம்.
மற்ற சேமிப்பு திட்டங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு நிதியானது ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரூ.4.5 லட்சம் வரை சேமிக்கக்கூடிய தபால் கணக்கு மாத சேமிப்பு திட்டத்தில் தனி நபர் ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம். இதே போன்று, இணைந்த தபால் கணக்கு மாத சேமிப்பு திட்டம் அளவும் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வலுப்படுத்தப்படும் மகளிர் சுயஉதவிக்குழக்கள்
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புற பகுதிகளில் உள்ள 8.71 கோடி பெண்கள், 81 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக (அல்லது) நிறுவனமாக வலுப்படுத்தப்படும்.
ஒவ்வொரு கூட்டமைப்பும் பல ஆயிரம் உற்பத்தியாளர்களைக் கொண்டதாக இருக்கும். இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருளை நுகர்வோரிடம் கொண்டு செல்லும் வகையில், மதிப்பு கூட்டல், வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
நாட்டில் இன்று செயல்படும் புத்தாக்க நிறுவனங்கள் வர்த்தக அளவை அதிகரித்துக் கொண்டு யூனிகார்ன் நிலையை எட்டுவது போல், இன்றைய சுய உதவிக் குழுக்கள் தங்கள் வர்த்தக அளவை விரிவுபடுத்தி அதிக நுகர்வோரை சென்றடைவார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Budget 2023: ஸ்டார்ட்-அப்'கள் தேவையை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா? புதிய அறிவிப்புகள் என்ன?