Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

'என் ஹால்தான் எனது வொர்கிங் ஏரியா'– வீட்டில் இருந்தே சாதனை படைக்கும் அனிதா!

கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பல பெண்களுக்கு பயிற்சியளித்து ஊக்கப்படுத்துகிறார் அனிதா சுப்புராஜ்.

'என் ஹால்தான் எனது வொர்கிங் ஏரியா'– வீட்டில் இருந்தே சாதனை படைக்கும் அனிதா!

Tuesday August 04, 2020 , 5 min Read

திருமணம் முடிந்த பிறகு பெண்களுக்கு இடம், சூழல் என வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிடுகிறது. சிலர் திருமணத்திற்கு முன்பு செய்து வந்த பணியைத் தொடர்ந்தாலும் பல்வேறு காரணங்களால் சிலரால் அவ்வாறு தொடர முடியாமல் போகிறது.


திருமணத்திற்குப் பிறகு பணியைத் தொடர முடியாத ஒவ்வொருவருக்குமே ஒரு கட்டத்தில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவேண்டும் என்கிற உணர்வு மேலோங்கும். அதுவே பெரும்பாலானோரின் வாழ்க்கையில் ஒரு 'யுரேகா மொமெண்ட்’ ஆகிவிடுகிறது.


அப்படித்தான் பல்வேறு சவாலான சூழல்களைக் கடந்து வந்த அனிதா சுப்புராஜ் ஒரு மாம்ப்ரூனராக உருவெடுத்துள்ளார். அனிதா 2011-ல் பொறியியல் படித்து முடித்தார். இரண்டாண்டுகள் பணி வாழ்க்கை. ஆரக்கிள் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றினார்.


2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. அதே ஆண்டு மே மாதம் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது இவர் கர்ப்பமாக இருந்தார். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. விபத்து ஏற்பட்ட பிறகு டெலிவரி வரை கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஐசியூ-வில் இருந்துள்ளார்.

Anitha Homepreneur

அனிதா சுப்புராஜ் (இடது), வீட்டில் செய்யப்பட்ட சாக்லேட்கள்

குழந்தைப் பேறு, உடல்நல பாதிப்பு என மன அழுத்தத்தில் நாட்களைக் கடத்தினார் அனிதா. இந்தச் சூழலால் வேலையைத் தொடர முடியாமல் போனது.

வணிக முயற்சியின் துவக்கம்

பள்ளி நாட்களிலேயே கைவினைப் பொருட்களை ஆர்வத்துடன் உருவாக்குவது இவரது வழக்கம். எம்பிராயிடரி, கூடை பின்னுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

“என் சொந்த ஊர் சுரண்டை. திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கு. இப்ப தென்காசி மாவட்டம். எங்க ஊர்ல முக்கிய தொழில் பீடி சுத்தறது. இப்ப வரைக்கும் இந்த வேலையைதான் நிறைய பேர் செய்யறாங்க. அம்மா கூட நானும் இந்த வேலையை பண்ணியிருக்கேன். கூடவே நிறைய கிராஃப்ட் வொர்க்கும் பண்ணுவேன். அதனால கைவினைப் பொருட்கள் செய்யறதையே பிசினஸா பண்ணலாம்ன்னு யோசிச்சேன்,” என்று நினைவுகூர்ந்தார் அனிதா.

அவர் சென்னையில் இருந்ததால் இமிடேஷன் ஜுவல்லரி தயாரிப்பிற்கான பொருட்கள் எளிதாகக் கிடைத்துள்ளது. அவற்றை வாங்கி இவர் விதவிதமாக நகைகள் தயாரித்துள்ளார். முதலில் அவர் பயன்படுத்தியுள்ளார். இவை பலரது கவனத்தை ஈர்த்து, பலர் ஆர்வமாக கேட்டுள்ளனர்.


எனவே உறவினர்களையும் நண்பர்களையும் கொண்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கி விற்பனையைத் தொடங்கியுள்ளார். தற்போது ‘திவிஷ் அகாடமி’ (Divish Academy) என்கிற தளத்தை மூலம் வீட்டிலிருந்து ஈடுபடக்கூடிய தொழில்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.

தொடர் கற்றல்

சில்க் த்ரெட் தயாரிப்புகள் மிகவும் பிரபலமடைந்திருந்ததால் ‘அனிதா சில்க் த்ரெட்’ தயாரிப்பு முறையைக் கற்றுக்கொண்டார்.

“நான் சில்க் த்ரெட் தயாரிப்பை யூட்யூப் மூலமாதான் கத்துகிட்டேன். எனக்கு கண் பார்த்தா, கை வேலை செய்யும். எதையுமே சீக்கிரம் கத்துப்பேன். வீடியோக்கள்ல செய்முறையை தெரிஞ்சுகிட்டாலும் அதுல புதுசா ஏதாவது செய்யணும்ன்னு நினைப்பேன்,” என்றார்.

கைவினைப் பொருட்களை வடிவமைப்பதில் இவர் தனது படைப்பாற்றல் திறனைக் கொண்டு புதுமையாக தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார். அதேசமயம் சாக்லேட் தயாரிப்பு, சோப் தயாரிப்பு, ஆரி வொர்க் போன்றவற்றை முறையாகக் கற்றுக் கொண்டுள்ளார்.

“சோப் தயாரிப்புல pH அளவு சரியா இருக்கணும். முறையா பதிவு பண்ணி தயாரிக்கணும். அதேமாதிரி சாக்லேட் தயாரிப்புகளை குழந்தைங்க அதிகமா சாப்பிடறதால ஸ்டேண்டர்டா இருக்கணும். அதனால இதையெல்லாம் முறையா கத்துகிட்டேன். சாக்லேட் தயாரிப்புல புதுசா ஏதாவது செய்யலாம்ன்னு யோசிச்சுதான் சாக்லேட் பொக்கே ரெடி பண்ணேன்,” என்று உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்.

சாக்லேட் பொக்கே தயாரிப்பை கல்லூரி மாணவர்களின் தொடர்புகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். விருப்பமானவர்கள் வீடு தேடி வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.


ஒன்றன்பின் ஒன்றாக பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார். அடுத்ததாக ஆரி வொர்க் கற்றுக்கொண்டார். அதைப் பெற்றுகொள்ள வருபவர்கள் டெய்லரிங் வேலையையும் இணைத்துக்கொண்டால் எளிதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி டெய்லரிங் கற்றுக்கொண்டுள்ளார்.

ஆரிவொர்க், சில்க் த்ரெட், க்வில்லிங், இமிடேஷன் ஜுவல்லரி, கிரிஸ்டல் ஜுவல்லரி, ஹேண்ட்மேட் சாக்லேட், பிளாஸ்டிக் கூடைகள், ஜூட் பைகள், பேப்பர் பைகள், ஹெர்பல் குளியல் சோப்பு, முகப்பொலிவிற்கான எண்ணெய் வகைகள் என இவரது தயாரிப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
divish

தற்போது கிட்டத்தட்ட 50-க்கும் மேலான பிராடெக்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்களும் இவரிடம் வாங்குகின்றனர்.

“வீட்டிலேர்ந்து வேலை செய்யணும். எனக்குக் கிடைக்கற ஃப்ரீ டைம்ல செய்யணும். அதேசமயம் ஐடி துறையில கிடைக்கற மாதிரி சம்பாதிக்கணும். இதுலதான் நான் ஃபோகஸ் பண்ணேன்,” என்றார் அனிதா.

லாக்டவுனில் ஆன்லைன் வகுப்புகள்

அடுத்ததாக ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வருகிறார். இன்றைய லாக்டவுன் சூழலில் மக்கள் மன அழுத்தத்துடன் இருப்பதால் அவர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ள உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறார். இவரது யூட்யூப் சானலில் வாரம் ஒரு முறை இலவசமாக லைவ் செஷன் நடக்கிறது.


ஆரிவொர்க், ஹேண்ட் எம்பிராய்டரி, சில்க் த்ரெட், ஜுவல்லரி மேக்கிங் என கேட்பவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு மணி நேரம் தனிப்பட்ட வகுப்புகள் எடுக்கிறார்.

திவிஷ் அகாடெமி MSME-ல் பதிவு செய்துள்ளார். பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.


காலை 10 முதல் 12 மணி வரையிலும் மீண்டும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் வகுப்பெடுக்கிறார். மற்ற நேரங்களில் தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறார்.

“தயாரிப்புகளை மட்டுமோ ஆன்லைன் கிளாஸ் மட்டுமோ நம்பியிருக்க முடியாது. ரெண்டுலயும் சமமா கான்செண்ட்ரேட் பண்றேன்,” என்றார்.

ஃபேஸ்புக் குழுக்கள்

அதுமட்டுமின்றி ‘மகளிர் சுயதொழில்’ என்கிற குழுவை ஃபேஸ்புக்கில் உருவாக்கியுள்ளார். இதில் பிசினஸ் டெவலெப்மெண்ட், பிசினஸ் குறித்த அறிமுகம், இலவச ஆலோசனைகள் போன்றவை வழங்கப்படுகிறது. தொழில் புரிபவர்கள் தங்களது அனுபவங்களையும் அவர்கள் ஈடுபட்டுள்ள தொழில் குறித்தும் இதில் அறிமுகப்படுத்துவதால் அதுகுறித்த புரிதல் மக்களிடையே ஏற்படும். இந்தக் குழுவில் சுமார் 2,000 பேர் உள்ளனர்.


இந்த முயற்சியின் மூலம் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வணிக வாய்ப்புகள் பலருக்கு அறிமுகமாகிறது என்கிறார் அனிதா.

“என்னால 178 பிராடக்ட்ஸ் செய்யமுடியும். இப்போதைக்கு 50 பிராடக்ட்ஸ் மட்டும்தான் கவனம் செலுத்தறேன். ரெண்டாவது குழந்தைக்கு ரெண்டு வயதுதான் ஆகுது. அதனால சில கெமிக்கல் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை இப்போதைக்கு செய்யலை. குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் அதையும் செய்வேன்,” என்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ‘சாதனை பெண்கள்’ என்கிற பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதை அனிதா தனது தோழிகளுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார்.


Homepreneur, South Indian Achievers Award ஆகிய இரு விருதுகளை வென்றுள்ளார். SouthIndian Start Up Award-க்கு நாமினேட் ஆகியுள்ளார். கொரோனா காரணமாக முடிவுகள் வெளியாகவில்லை. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது குறித்தும் பலர் இவரிடம் விசாரித்துள்ளனர்.

“ஒரு போட்டியில நூறு பேர் கலந்துகிட்டாங்கன்னா நிச்சயம் நூறு பேர் கிட்டயும் திறமை இருக்குன்னு அர்த்தம். ஏதோ ஒரு புள்ளியில நடுவரோட எக்ஸ்பெக்டேஷனை நான் மீட் பண்ணியிருக்கேன். அவ்வளவுதான். மத்த 99 பேரும் திறமைசாலிகள், அனுபவமிக்கவர்கள். அவங்களுக்கான ஒரு தளமாதான் இதைத் தொடங்கியிருக்கோம்,” என்றார்.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவவேண்டும் என்பது இவரது விருப்பம். ஆனால் இவரது சூழல் காரணமாக செய்ய இயலவில்லை. வீட்டு வேலைகள் செய்து வரும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கு பழைய தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் வகுப்புகளில் பங்கேற்கும் ஏழைப் பெண்களிடம் கட்டணம் வாங்காமல் பயிற்சியும் அளித்து வருகிறார்.

divish products

இதுபோன்ற உதவிகள் பலரைச் சென்றடைய ‘சாதனைப் பெண்கள்’ மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதில் வாரத்திற்கு ஒரு நபர் தங்களது தொழில் பயணம் குறித்து பகிர்ந்துகொள்வார்கள். இந்த பேஜ் இரண்டு விதமான தீர்வுகளை வழங்குகிறது. ஒருபுறம் இதில் அறிமுகப்படுத்தப்படுவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது தொழில் பற்றியும் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம். மற்றொரு புறம் இதன் மூலம் கிடைக்கும் தொகை மற்றவர்களுக்கு உதவுகிறது.


வணிகத்திற்கு வாட்ஸ் அப் செயலியை காட்டிலும் ‘வாட்ஸ் அப் பிசினஸ்’ செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அனிதா கருதுகிறார். தொழில் புரிவதற்கு உதவும் இதுபோன்ற தகவல்கள், எந்த வகையான தொழில் செய்யலாம், எப்படி செய்யலாம், எம்.எஸ்.எம்.ஈ பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இந்த பேஜ் பகிர்ந்து கொள்ளப்படுவதாக தெரிவிக்கிறார்.

“வீட்டிலேர்ந்து பிசினஸ் பண்ணனுன்றதுதான் என்னோட நோக்கமே. என்னோட ஹால்தான் என்னோட வொர்கிங் ஏரியா,” என்கிறார்.

அவர் அடுத்தக்கட்டமாக ‘சாதனை பெண்கள்’ பக்கத்தை என்ஜிஓ-வாக பதிவு செய்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். லாக்டவுன் காரணமாக அது நிலுவையில் உள்ளது, விரைவில் அதை முடித்துவிட்டு அடுத்தடுத்த பணிகளை தொடரப் போவதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஹோம்ப்ரூனர் அனிதா.


கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா